உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் “தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்” (ELECTORAL BOND SCHEME 2018) அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகுமா? என்ற வழக்கின் மீது விசாரணை நடத்தியது.
விசாரணையின் போது, “தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய விவரங்கள் கொடுத்தவர் – பெற்றவர், வங்கி என எல்லாருக்கும் தெரியும்; ஆனால், வாக்காளர்களுக்கு மட்டும் அது ரகசியமாகவே உள்ளது; நீதிமன்றம் பல்வேறு முடிவுகளை எடுத்த பிறகும் இந்த ரகசியத்தன்மையை ஏற்பதற்குச் சற்றுக் கடினமானதாக இருக்கிறது” என்று நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்துத் தெரிவித்திருந்தார்.
இக்கருத்துக்கு பதிலளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 2018 சட்டத்தின்படி தேர்தல் நிதிபத்திரங்களைக் கட்சிகளுக்குக் கொடுத்தவர் யாரென்று அறிந்து கொள்ள முடியும் என்றும், கொடுத்தவர் – பெறுபவர் ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள முடியாத அமைப்புமுறை என்று ஒன்றில்லை என்றும் கூறினார். மேலும், அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற நீதிபதியின் கருத்து பற்றி கூறுகையில், “நன்கொடையாளர் யாரென்று தெரிவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாப்பது என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இரகசியத்தன்மையை இது முறியடித்துவிடும்” என்றார். அதாவது கொடுப்பவனுக்கும், வாங்குபவனுக்கும் தெரிந்தால் போதாதா? எதற்கு எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதைத்தான் வேறு வார்த்தைகளில் மேத்தா சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்துக்கு மோடி அரசு கொடுக்கும் மரியாதை இவ்வளவு தான் என மறைமுறமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய கபில் சிபல், “தேர்தல் நிதிப்பத்திரங்கள் இந்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஊழல்” என்றும், இது “தேர்தல் முறையையும் ஜனநாயகத்தையும் ஒழித்துக்கட்டும் திட்டம்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !
விசாரணைக்குப் பிறகு, இவ்வாண்டு செப்டம்பர் 30 வரையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடையின் விவரங்களை, 15 நாட்களுக்குள் “சீலிட்ட உறையில்” வைத்து ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்குகள் ஆறு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது பெரியளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கு விசாரணைக்குப் பிறகு, இந்தத் “தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்” இந்தியத் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையை ஒழித்துக்கட்டுகிறது; இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பதற்கு இந்த தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர்.
ஊழலை சட்டப்பூர்வமாக்கிய பா.ஜ.க:
துஷார் மேத்தாவின் திமிர்த்தனமான வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது, அச்சு அசலாக பா.ஜ.க.வின் அயோக்கியத்தனமே. சட்டப்பூர்வமான வழிகளில் தனது பாசிச நடவடிக்கைகளை அரங்கேற்றி வரும் பா.ஜ.க அரசு, தான் செய்யும் கார்ப்பரேட் சேவைகளுக்கான லஞ்சத்தை சட்டப்பூர்வமாகவே பெற்றுக்கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.
இத்திட்டத்தின் மூலம் எந்தவொரு இந்தியக் குடிமகனும் அல்லது நிறுவனமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளையிலிருந்து, தாங்கள் நன்கொடையாக அளிக்க விரும்பும் தொகைக்கு (1000 ரூபாய் தொடங்கி 1 கோடி ரூபாய் வரை) ஏற்ப நிதிப்பத்திரத்தை வாங்கி, அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்.
இந்தத் திட்டத்தை கொண்டு வருவதற்காக பல்வேறு சட்டத்திருத்தங்களை பாஜக அரசு மேற்கொண்டது. நிறுவனங்கள் சட்டப்படி (Companies Act, 2013), ஒரு நிறுவனம் தன்னுடைய லாபத்தில் இருந்து அளிக்கக்ககூடிய தேர்தல் நிதியின் உச்ச வரம்பு 7.5 சதவிகிதமாக இருந்ததை நீக்கி, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் தேர்தல் நிதியாக அளிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது. அதேபோல், வெளிநாட்டு நிதியுதவி ஒழுங்குமுறை சட்டத்தில் (Foreign Contribution Regulation Act, 2010 (FCRA)) திருத்தம் செய்து வெளிநாட்டு நிறுவனங்களும் தேர்தல் நிதி அளிக்கலாம் என்று கதவை திறந்து விட்டது.
மேலும், வருமானவரிச் சட்டத்தின்படி (Income Tax Act, 1961) அரசியல் கட்சிக்கு வரும் நன்கொடைகள் குறித்து வருமானவரித் துறையிடமும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி (Representation of the People Act, 1951 (RoPA)) 20,000 ரூபாய்க்கு மேல் அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிக்க வேண்டும் என்ற முறையைத் திருத்தியது. இதன் மூலம், தேர்தல் நிதிப்பத்திரத்தால் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களையும் தரவுகளையும் யாரிடமும் ஒப்படைக்கத் தேவையில்லை என தேர்தல் நிதிக்கு பெரிய மூடுதிரையைப் போட்டது மோடி அரசு.
படிக்க: தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!
அரசியல் கட்சிகளுக்கு யார், எவ்வளவு நன்கொடை அளிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கும் கிடையாது; வருமானவரித் துறைக்கும் கிடையாது; இந்த நாட்டின் குடிமக்களுக்கும் கிடையாது என்ற நிலையை உருவாக்கி, பெயரளவில் இருந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒட்டுமொத்தமாக சவக்குழி வெட்டும் வேலையைத் தொடங்கியது பா.ஜ.க அரசு.
இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது தேர்தல் ஆணையமும், ரிசர்வ் வங்கியும் இதை எதிர்த்துக் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருந்தன. அப்போதைய ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், இந்த தேர்தல் நிதிப்பத்திரம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு செப்டம்பர் 14, 2017 அன்று கடிதம் எழுதியிருந்தார். அதில் “தற்போது கொண்டுவரப்படும் தேர்தல் நிதிப்பத்திரம் ஷெல் கம்பனிகளால் (வரி ஏய்ப்பு, பணமோசடி செய்வதற்காக உருவாக்கப்படும் பினாமி நிறுவனங்கள்) தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன” என்பதைக் குறிப்பிட்டு, இதை டிஜிட்டல் முறையில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார்.
செப்டம்பர் 27, 2017 அன்று ஜெட்லிக்கு எழுதிய கடிதத்தில், “ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருப்பது பணமதிப்பு விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலானது என்றார். குறைந்தபட்சம், தேர்தல் நிதிப்பத்திரங்களை வழங்க வேறு எந்த நிறுவனத்தையும் அரசு அங்கீகரிக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டார்.
ஆனால் மோடி அரசு அவரது கோரிக்கையைக் கழிவறைக் காகிதமாகக் கூட மதிக்கவில்லை. 2018-இல் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டத்தை அமல்படுத்தும்போது ரிசர்வ் வங்கியை ஒரங்கட்டிவிட்டு, எஸ்பிஐ வங்கியை தேர்தல் பத்திரங்களை வழங்க அங்கீகரித்தது ஒன்றிய அரசு. இதற்கடுத்த சில நாட்களில் ரிசவ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி போலவே, தேர்தல் ஆணையமும் இந்தத் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் தேர்தல்முறையின் வெளிப்படைத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறி முதலில் எதிர்த்தது. ஆனால், அதன்பிறகு இத்திட்டத்தை ஏற்றுக்கொண்டு பா.ஜ.க அரசின் ஏஜெண்டாக செயல்படத் தொடங்கிவிட்டது.
இந்தத் திட்டத்தைக் கொண்டு வரும்போது பா.ஜ.க வழக்கம்போல் லஞ்சம், கருப்புப்பணத்தை ஒழிக்கப் போகிறோம், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரப்போகிறோம் என வாய்ச்சவடால் அடித்தது. ஆனால் உண்மையில், இதுவரை கருப்புப்பணத்தைத் திருட்டுத்தனமாக வாங்கிக்கொண்டு இருந்த அரசியல் கட்சிகள், இனிமேல் சட்டப்பூர்வமாகவே கேள்விக்கிடமற்ற வகையில் கருப்புப்பணத்தையும் லஞ்சத்தையும் பெறுவதற்கான வழியைத்தான் இது ஏற்படுத்தியிருக்கிறது.
பா.ஜ.க-வின் மெகா ஊழல்:
இத்திட்டத்தை கொண்டுவந்த பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பா.ஜ.க-வின் கஜனாவில் பணம் வந்து குவியத் தொடங்கியது. 2016-17 மற்றும் 2021-22 -க்கும் இடைப்பட்ட ஐந்து நிதியாண்டுகளில், ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாகப் பெற்ற தொகை மொத்தம் ரூ.9,188 கோடிகள். இதில் பா.ஜ.க-வின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5,272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 57 சதவீதத்தை பா.ஜ.க மட்டுமே பெற்றுள்ளது.
2019-2020 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் தேர்தல் நிதிப்பத்திரங்கள் மூலம் பெற்ற ரூ.3,429 கோடியில், பா.ஜ.க மட்டும் ரூ.2,606 கோடியை (76 சதவிகிதம்) பெற்றுள்ளது. இதில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மட்டும் பா.ஜ.க ரூ.2,410 கோடியை திரட்டியுள்ளது, இது ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பத்திரங்கள் மூலம் திரட்டியதில் கிட்டத்தட்ட 95 சதவிகிதமாகும்.
அதேபோல், 2018 முதல் 2021 வரை விற்கப்பட்ட நிதிப்பத்திரங்களில் 92 சதவிகிதத்திற்கும் அதிகமானவை ரூ.1 கோடி மதிப்புடையவை. இவை பெரும்பாலும் கார்ப்பரேட் நிறுவனங்களால் அளிக்கப்பட்டவை. ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கத்தின் (ADR) பகுப்பாய்வின்படி, 2021-22 நிதியாண்டில், காப்பரேட் நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த நன்கொடைகளில் ரூ.351.50 கோடி (72.17 சதவிகிதம்) பா.ஜ.க மட்டும் பெற்றுள்ளது. அகர்வாலின் வேதாந்தா நிறுவனம், கொரோனா தடுப்பூசி தயாரித்த சீரம் நிறுவனம் முதலியவை பா.ஜ.க-விற்கு நிதி அளித்ததும், அதற்குக் கைமாறாக பா.ஜ.க செய்த சேவையும் அம்பலமானது இதற்கு சிறந்த சான்று. இதனால் தான், நன்கொடை கொடுப்பவர் குறித்த விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறது மோடி அரசு.
இப்படி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொட்டிக் கொடுத்ததன் விளைவாக, 2016-17 மற்றும் 2021-22 நிதியாண்டுகளின் இடைப்பட்ட காலகட்டத்தில் மட்டும் நன்கொடையாக ரூ.10,122 கோடிகளைப் பெற்றுள்ளது பா.ஜ.க. இதன் மூலம், 6,046 கோடி நிகர சொத்துக்களுடன் இந்தியாவின் முதல் பணக்காரக் கட்சியாக பா.ஜ.க வளர்ந்துள்ளது. இவை அனைத்தும் வெளியே தெரிந்தவை மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவிற்கு மட்டும் இப்படி கொட்டிக் கொடுக்கிறார்கள்? அதற்கான விடை அனைவரும் அறிந்ததே. தனக்கு கொட்டிக்கொடுத்த எஜமானனுக்கு விசுவாசத்தைக் காட்டும் வகையில் சுமார் 25 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி; வரிச்சலுகை; பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்குத் தூக்கிக் கொடுத்தல்; காடு, மலை, கனிம வளங்களைக் கொள்ளையிடத் திறந்து விடுதல் என இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைத்தது பாசிச பாஜக அரசு.
பாஜக-வின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சாதாரண உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவரும் மீதும் பொருளாதார பயங்கரவாதத் தாக்குதல்களை அனுதினமும் தொடுத்து வருகிறது மோடி அரசு.
சாரமாகச் சொன்னால், இந்தியாவை சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிக்கலாம்; அப்படிக் கொள்ளையடித்த பணத்தை கார்ப்பரேட் கட்சிகளுடன் சட்டப்பூர்வமாகவே பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசின் தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம்.
000
இந்த தேர்தல் நிதிப்பத்திர திட்டத்தில் கவனிக்க வேண்டிய மற்றொரு விடயமும் உள்ளது. தற்போது பலரும் கூறுவதுபோல, தேர்தல் நிதிப்பத்திரத்தை ரத்து செய்வதால் மட்டும் இந்த ஊழலையும் கார்ப்பரேட்டுகளுக்கும் கட்சிகளுக்குமான ரகசிய உறவையும் ஒழித்துவிட்டு, இந்தியத் தேர்தல்முறையின் மூலம் ‘ஜனநாயகத்தின் மாண்பை’ கொண்டுவந்து விட முடியுமா?
இந்த ஊழலை ஒழிக்க, கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசியல் கட்சிகள் நிதி வாங்குவதை தடைசெய்ய வேண்டும். மக்களைச் சார்ந்து அரசியல் கட்சிகள் இயங்க வேண்டும். தேர்தல் செலவிற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் தற்போது இருக்கும் அரசுக் கட்டமைப்பிற்குள் செய்ய முடியுமா?
ஏற்கனவே மறைமுகமாக நடந்து வந்த ஊழலை சட்டப்பூர்வமாக, பகிரங்கமாக செய்வதற்காக கொண்டு வரப்பட்டதுதான் மோடி அரசு கொண்டுவந்த தேர்தல் நிதிப்பத்திரம். மற்றபடி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது நன்கொடையை பணமாகக் கொடுப்பதற்கும், தேர்தல் நிதிப்பத்திரமாகக் கொடுப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவு இல்லாமல் எந்த ஓட்டுக்கட்சியாலும் தேர்தலைச் சந்திக்க முடியாது என்பதுதான் இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் உண்மையான நிலை. 2019 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மட்டும் சுமார் 55 முதல் 60 ஆயிரம் கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆன செலவைவிட அதிகம். இங்கு உண்மையில் நடந்து கொண்டிருப்பது ஜனநாயகம் அல்ல பணநாயகம்தான் என்பதற்கு இதுவே துலக்கமான சான்று; கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி பணம்தான் தேர்தலில் தீர்மானகரமான காரணியாக உள்ளது என்பதும், கார்ப்பரேட்டுகளின் ஆதரவு பெற்ற கட்சியே ஆளுங்கட்சியாக இருக்க முடியும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இப்படி மென்மேலும் அழுகி நாறிக்கொண்டே செல்வதே இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பின் இயல்பு. இதைத் விட்டெறிந்து விட்டு, இதைவிட மோசமான பாசிசத்தை நிலைநாட்டும் இலக்கில் இருந்தே பா.ஜ.க தனது திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் தேர்தல்நிதிப்பத்திர திட்டம். எனவே இதை ஒழித்தால் மட்டும் ‘தேர்தல் ஜனநாயகத்தின்’ மாண்பை மீட்டுவிட முடியும் என்று எண்ணுவதை என்ன சொல்வது. பாசிசத்தை எதிர்ப்பது என்ற பெயரில் அழுகிக் கொண்டிருக்கும் ஒன்றைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று சொல்வது அறிவார்ந்த வழிமுறையாக இருக்க முடியுமா? பாசிசத்தை முறியடிக்கக் கூடியதான, மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை வழங்கக் கூடியதாக ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக மக்களை தயார் செய்வதே இன்றைய தேவை.
மதி
(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube