தெலங்கானா தேர்தல் புதிய பார்முலா: களமிறங்கிய இன்ஃப்ளூயன்சர்கள்!

சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு லட்சம் பின் தொடர்பவர்கள் அல்லது ஐந்து இலட்சம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இன்ஃப்ளூசியர்களுக்கு பி.ஆர்.எஸ் கட்சி இரண்டு முதல் ஏழு இலட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துத் தனது தேர்தல் பிரச்சாரகர்களாகக் களமிறக்கிவிட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் 2023 | பதிவு 15

டந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அதிகளவு பணமழை பொழிந்த மாநிலமாக தெலங்கானா உள்ளது. ஒரு ஒட்டுக்கு 3500 முதல் 4000 வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தெலங்கானா தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மதுபான விநியோகம் கரைபுரண்டோடியுள்ளது.

தேர்தல் ஆணையத்தால் வேட்பாளர்களுக்கு இவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் கட்சிகளுக்கு அத்தகைய கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே, அரசியல் கட்சிகள்தான் மொத்தமாகத் தேர்தலுக்கும் வேட்பாளர்களுக்கும் செலவு செய்கின்றன.

அதிலும் குறிப்பாகத் தேர்தல் நிதிப்பத்திரங்கள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசியல் கட்சிகளுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதையும் தேர்தல் ஆணையத்திற்குச் சொல்ல வேண்டிய தேவையில்லை என்ற நிலை உள்ளதால் தேர்தல் கட்சிகள் பணமழையை பொழிவதற்கு ஏதுவாக உள்ளது. தெலங்கானா தேர்தலுக்கு முன்னர் மட்டும் 370 கோடி ரூபாய் வரை தேர்தல் நிதி பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் நிதிபத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போதும் போல, பணமழை பொழிவதில் ஆளும்கட்சியான பாரத ராஷ்டிர சமிதி கட்சிதான் முதலிடத்தில் உள்ளது. முக்கியமாக இந்த தேர்தலில் ஒரு புதிய பார்முலாவை சந்திரசேகர் ராவ் அறிமுகப்படுத்தியுள்ளார். தற்போது அனைவரிடத்திலும் குறிப்பாக இளைஞர்களிடத்தில் சமூக ஊடகங்கள் தாக்கம் செலுத்துவதால், அதைத் தனது தேர்தல் பிரச்சார ஊடகமாக சந்திரசேகர் ராவ் மாற்றியுள்ளார்.


படிக்க: இந்துத்துவ கட்சியைப் போல செயல்படும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சி!


தமிழ்நாட்டில் ஓட்டுக்கட்சிகள் எப்படி ஆண்டிப்பட்டி, திருமங்கலம், ஆர்.கே.நகர், ஈரோடு பட்டி பார்முலா போன்றவற்றை புதிது புதிதாக உருவாக்கி பெயரளவில் இருக்கும் ஜனநாயகத்தை மேலும் மேலும் கேலிக்கூத்தாக்கியதோ, அதேபபோல் தெலங்கானாவிலும் இன்ஃபுளூசியர்களை வைத்து ஒரு புதிய பார்முலாவை சந்திரசேகர் ராவ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு லட்சம் பின் தொடர்பவர்கள் அல்லது ஐந்து இலட்சம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இன்ஃப்ளூசியர்களுக்கு பி.ஆர்.எஸ் கட்சி இரண்டு முதல் ஏழு இலட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துத் தனது தேர்தல் பிரச்சாரகர்களாகக் களமிறக்கிவிட்டுள்ளது.

“நான் நிஜாமாபாத்தைச் சேர்ந்தவன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனது கிராமத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். அரசு பள்ளி சீரமைப்பு, தண்ணீர் தொட்டி சீரமைப்பு, சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் மாற்றமடைந்துள்ளன. இந்த மாற்றங்கள் கடந்த 5 – 10 ஆண்டுகளில் நடந்துள்ளது. அதற்குக் காரணம் கே.சி.ஆர் ஆட்சிதான். நிஜாமாபாத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இதுபோன்ற வளர்ச்சி நடந்துள்ளது” என்று நடிகர் ஸ்ரீமுகி தனது இன்ஸ்டாகிராமில் பி.ஆர்.எஸ். கட்சியைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களை வலியுறுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.


படிக்க: தெலங்கானா: காங்கிரஸ் ஆட்சியமைக்குமா?


இதேபோன்று, ”#எப்படி இருந்த தெலங்கானா எப்படி ஆகிவிட்டது” என்ற ஹேஷ்டேக்குடன் பி.ஆர்.எஸ் கட்சிக்குப் பிரச்சாரம் செய்ய குறைந்தபட்சம் 250 சமூக ஊடக இன்ஃப்ளூசியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சினிமா நடிகர்கள், தொகுப்பாளர்கள் என நிறையப் பிரபலங்கள் கே.சி.ஆர் அரசை, “ஆஹா ஓஹோ” என்று புகழ்ந்து வீடியோக்களை தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர். ஒரு போஸ்டிற்கு ஏழு லட்சம் வரை விலை கொடுக்கப்பட்டுள்ளது. இது தற்போது ஒரு வணிகமாகவே மாற்றப்பட்டுள்ளது.

ஆனால் இவர்கள் யாரும் அவர்களின் விளம்பர வீடியோவில் இதை ஒரு கட்டண விளம்பரம் (Paid Promotion) என்று குறிப்பிடவில்லை. அதேபோல், இவர்கள் யாரும் பி.ஆர்.எஸ் கட்சி வேட்பாளரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு ஆதரவாகவும் வீடியோ வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சிகளின் வழக்கமான தேர்தல் விளம்பரங்களின் உள்ளடக்கமும் அதற்கான தயாரிப்பு செலவுகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவால் (MCMC) ஆய்வு செய்யப்படும். ஆனால் சமூக ஊடகத்தில் செய்யப்படும் இத்தகைய பிரச்சார வீடியோவில் ”கட்டண விளம்பரம்” என்று குறிப்பிடாததாலும் வேட்பாளர் பெயரைக் குறிப்பிடாததாலும் இது தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்படாது.

எனவே, தற்போது சமூக ஊடகங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கும் நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என்று ஜனநாயக சக்திகள் சிலர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவ்வாறு நெறிமுறைகளை வகுத்தால் மட்டும் போதாது. ஏனெனில், உண்மையான மக்கள் பிரச்சனைகளையும், கட்சியின் கோட்பாடு, கொள்கைகளை வைத்து பிரச்சாரம் செய்ய வக்கற்ற ஓட்டுக்கட்சிகள், மக்களை எப்படி மீண்டும் முட்டாளாக்கி ஏய்த்துப் பிழைக்கலாம் என்பதிலே தான் தொடர்ந்து கவனம் செலுத்தும்.


அகதா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க