“ஒரு இக்கட்டான காலம், மனிதனின் உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வரும்” என்றொரு பழமொழி உண்டு. அதேபோல், பாசிசம் அரங்கேறிவரும் இன்றைய சூழலில், பாசிச அடியாட்கள் தங்களது அத்தனை முகமூடிகளையும் துறந்துவிட்டு தங்களது உண்மையான முகத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில் வந்ததுதான், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத் தலைவரான ஆதிஷ் அகர்வாலா ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம்.
“தேர்தல் நிதிப் பத்திர திட்டம்” அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்ற உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அமல்படுத்துவதை நிறுத்திவைக்க வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆதிஷ் சி அகர்வாலா, ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
“இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கான ‘முழுமையான நீதியினை’ உறுதிசெய்யும் பொருட்டு, தேர்தல் நிதிப் பத்திரம் பற்றிய விஷயத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதியின் கவனத்தை கோரியுள்ளார் அகர்வாலா.
பிப்ரவரி 15 அன்று, உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு, தேர்தல் பத்திர திட்டத்தின் அநாமதேயத் தன்மையானது, அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவின் கீழ் உறுதிசெய்யப்பட்ட குடிமக்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகக் கூறி, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது.
இதனுடன், மார்ச் 6, 2024 வரையிலான காலக்கெடுவுடன், தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு, பாரத் ஸ்டேட் வங்கிக்கு (SBI-எஸ்.பி.ஐ.) நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தை தேர்தல் முடியும் வரை இழுத்தடிக்கும் பொருட்டு எஸ்.பி.ஐ. நிர்வாகம் கூடுதல் கால அவகாசம் கேட்டது. அதனை மறுத்த உச்சநீதிமன்றம், மார்ச் 12-ஆம் தேதிக்குள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதிக்குள் மக்களுக்கு தெரியும் வகையில் வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
பா.ஜ.க. அரசு கடந்த 2017-ஆம் கொண்டு வந்த தேர்தல் நிதிப் பத்திர திட்டம், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு கோடிக் கணக்கான பணத்தை நன்கொடையாக கொடுக்க வழி செய்து கொடுக்கிறது. எந்த கார்ப்பரேட் நிறுவனம், எந்த அரசியல் கட்சிக்கு, எவ்வளவு பணம் நன்கொடையாக கொடுத்தது என்ற தகவல்களை வெளியிடாமல் முழுவதும் அநாமதேயமாக நன்கொடைகள் வழங்க முடியும் என்ற நிலையை கொண்டு வந்தது.
இதற்கு முன்புவரை, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது ஆண்டு லாபத்தில் 7.5 சதவீதத்திற்கும் மிகாமல் நன்கொடை வழங்கலாம் என்ற நிலையை பா.ஜ.க. அரசு மாற்றியது. இதற்காக கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன் மூலம் தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் எந்த கணக்கு வழக்கும், வரையறையும் இல்லாமல் அரசியல் கட்சிகளுக்கு பணத்தை வாரி இறைக்கலாம். அதன் மூலம் தனக்கு தேவையான அரசியல் ஆதாயங்களை அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சாதித்துக் கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கியது. இதனால் பெரிதும் பயனடைந்தது பா.ஜ.க. தான் என்று தனியாக சொல்லத் தேவையில்லை.
இதன் மூலம் பாசிச பா.ஜ.க கும்பல் கருப்புப் பணத்தை கட்சி நிதியாக மாற்றிக் கொள்வதற்கான சட்டப்பூர்வமான வழிவகையை ஏற்படுத்திக்கொண்டது. இத்தனை அயோக்கியத்தனமான திட்டத்தை தான் உச்சநீதிமன்றம் “அரசியலமைப்பு விரோதமானது” என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், திரு.அகர்வாலா, இந்த தீர்ப்பில் எந்த அம்சத்தை முக்கியமாக எதிர்க்கிறார் என்று நாம் பார்க்கவேண்டும். இதுவரை அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நிதிப் பத்திரங்கள் பற்றிய விவரங்களை உச்சநீதிமன்றம் வெளியிடச் சொல்கிறது. ஏன் அவ்வாறு சொல்கிறது உச்சநீதிமன்றம்?
தேர்தலில் வாக்களிக்க இருக்கும் ஒரு குடிமகன் தான் வாக்களிக்க இருக்கும் கட்சியைப் பற்றிய முன் தகவல்களை தெரிந்திருப்பது அவசியம் என்ற அடிப்படையில் தான்.
இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். தேர்தல் நிதிப் பத்திர திட்டத்திற்கு முன்பே கூட, இந்திய தேர்தல்களில் பணம்தான் முக்கியமான தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. ஆனால் தேர்தல் நிதிப் பத்திரம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, நவீன ஜனநாயகத்தின் மிக முக்கிய அம்சங்களான குடிமகனின் தகவல் அறியும் உரிமையையும், அரசியல் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையையும் குறிப்பிட்டிருப்பது, பாசிசம் சூழ்ந்து வரும் இன்றைய சூழலில் முக்கியமான விசயமாகும்.
படிக்க: தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !
ஆனால் திரு.அகர்வாலா, தனக்கு கார்ப்பரேட் நலன்தான் முக்கியம் என்று தனது அறிக்கையில் வெளிப்படுத்திக் கொள்கிறார்.
“தேர்தல் நிதிப் பத்திர திட்டம் அமலில் இருந்தபோது, பல்வேறு அரசியல் கட்சிகளால் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட 22,217 தேர்தல் நிதிப்பத்திரங்கள் முற்றிலும் சட்டபூர்வமானவை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டவையாகும். தேர்தல் நிதிப் பத்திரங்கள் நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவிக்கப்பட்டாலும், கார்ப்பரேட் நிறுவனங்களால் அரசியல் கட்சிகளுக்கு பங்களிப்புகள் செய்யப்பட்டபோது அவை சட்டப்பூர்வமானவையே. கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வழிகளில் செய்த நிதி பங்களிப்பிற்காக எப்படி அவற்றை தண்டிக்க முடியும்?” என்று திரு. அகர்வாலா தனது உச்சபட்ச கார்ப்பரேட் – பாஜக விசுவாசத்தை காட்டுகிறார்.
கார்ப்பரேட் நன்கொடையாளர்களை தண்டிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் கொடுக்கவில்லை. நன்கொடைகள் பற்றிய விவரங்கள் மக்களுக்கு தெரியவேண்டும். அவ்வாறு தெரிந்து கொள்வது அவர்களின் தேர்தல் பங்கேற்பிற்கு இன்றியமையாதது என்று தான் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் “பாவப்பட்டவை” என்றும் அவை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் “வஞ்சிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாகவும்” திரு.அகர்வாலா காட்ட முயற்சி செய்கிறார்.
இந்தத் தீர்ப்பின் மிகவும் ஆபத்தான பகுதி என்னவென்றால், ”எந்த அரசியல் கட்சி எந்த நிறுவனத்திடம் இருந்து எவ்வளவு நன்கொடைகளை பெற்றது என்பதை பகிரங்கப்படுத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது தான்”. பல்வேறு அரசியல் கட்சிகளுக்குப் பங்களித்த கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களையும் நிதியையும் வெளியிடுவது, கார்ப்பரேட் நிறுவனங்களை பலியாக்கப்படும் நிலைக்கு ஆளாக்கும். இவ்வாறெல்லாம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிடுவதால் ஏற்படக்கூடிய “விளைவுகளை” பற்றி திரு.அகர்வாலா தனது கார்ப்பரேட் பாசத்தோடு படபடப்பாக எழுதியுள்ளார். தனது கார்ப்பரேட் விசுவாசத்தை மறைத்துக் கொள்வதற்கு அவர் சிறிதும் முயற்சிக்கவில்லை.
நடப்புகாலத்தில் இந்தியாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுயிணையில்லாத சலுகைகளை அனுபவித்து வருவது பற்றி பாமரனுக்குக் கூட தெரியும். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களை “பாதிக்கப்பட்ட ஜீவன்கள்” போல் காட்ட திரு.அகர்வாலா தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தி வாதிட்டுள்ளார்.
மேலும் ஒருபடி மேலே சென்று இவ்வாறு நன்கொடையாளர்களின் விவரங்களை வெளியிடுவதால், அந்நிய நிறுவனங்கள் இந்திய ஜனநாயக நடைமுறையில் பங்கேற்பதில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் திரு.அகர்வாலா.
ஒரு நியாயமான சந்தேகம் நமக்கு இந்த இடத்தில் எழும்! அந்நிய நிறுவனங்கள் ஏன் இந்திய ஜனநாயக நடைமுறையில் பங்கு கொள்ளவேண்டும்?
“கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகள் பெறும் கட்சிகள், அரசாங்கத்தின் கொள்கை வகுக்கும் போக்கில் அந்த நிறுவனங்களுக்கு சார்பாக நடந்து கொள்ளும்” என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை உருவாக்கத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச அதிகார வர்க்கத்தின் கைகள் 1947 அதிகார மாற்றத்தின் போதிருந்தே இருந்துகொண்டிருக்கிறது. இதனை தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம் பாசிச பாஜக எவ்வித ஒளிவுமறைவுமின்றி சட்டப்பூர்வமாக மாற்றியிருக்கிறது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதைத் தடுத்து நிறுத்துமாறும், இந்த விவகாரத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்யுமாறும் அகர்வாலாவின் கடிதம் ஜனாதிபதி முர்முவை வலியுறுத்துகிறது.
இந்திய “போலி ஜனநாயக” கட்டமைப்பின் ஏதோவொரு அங்கம் பாசிஸ்டுகளுக்கு ஒரு சிறிய முட்டுக்கட்டை போடும் திசையில் செயல்பட்டாலும், இந்த கட்டமைப்பு முழுவதும் பரவியிருக்கும் அவர்களின் பாசிச அடியாட்கள், தங்களது முகமூடிகளை துறந்துவிட்டு மிக மூர்க்கமாக அவற்றை தாக்குகிறார்கள். பாசிஸ்டுகளுக்கு இனி எந்த முகமூடிகளும் தேவையில்லை; ஜனநாயக நிறுவனங்களும் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
சீனிச்சாமி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube