தேர்தல் நிதிப் பத்திரங்கள்: பா.ஜ.க.வின் பாசிச வழிகளில் ஒன்று!

மற்ற காட்சிகளைப்போல கார்ப்பரேட் நலனை வெறுமனே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் அரசியல் இருப்பு, பா.ஜ.க என்ற பாசிச கட்சி அதன் சொந்த இருப்பிலே பாசிசத்தன்மையானது.

ச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் 14/03/24 அன்று தேர்தல் நிதிப் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், எந்த நிறுவனம் எந்த கட்சிக்குப் பணம் கொடுத்தது என்பதை அறிந்துகொள்ள உதவும் தேர்தல் பத்திரங்களின் வரிசை எண் போன்ற முழுமையான விவரங்கள் SBI வங்கி இன்னும் வெளியிடவில்லை.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.தான் அதிகமான பணத்தைப் பெற்றிருக்கிறது என்ற உண்மை நம் யாரையும் எந்த வகையிலும் ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால், இதை பா.ஜ.க. எந்த வழிமுறைகளைப் பயன்படுத்திச் சாதித்தது என்பதை இந்த தேர்தல் நிதிப் பத்திர விவரங்கள் மூலமாக நாம் தெரிந்துகொள்ளும் போது பா.ஜ.க.வின் பாசிசத்தன்மையை புரிந்துகொள்ள முடியும்.

படிக்க : தேர்தல் நிதிப்பத்திரம் – கருப்புப் பணத்தை சுருட்ட பா.ஜ.க-வின் புதிய அஸ்திரம் !

தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக மிக அதிகமாக நன்கொடைகளை வழங்கியது, Future Gaming என்ற நிறுவனமாகும். இது “லாட்டரி ராஜா” என்று சொல்லப்படும் மார்டின் என்பவனின் நிறுவனமாகும். இந்த நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக அமலாக்கத் துறையின் கண்காணிப்பிலிருந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் சுமார் ரூ.410 கோடி அசையும் சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை இந்த நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுபோல், தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக அதிகமாக நன்கொடைகள் கொடுத்த முதல் ஜந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளது.

நியூஸ் லாண்ட்ரி (News Laundry) செய்தித்தளம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.335 கோடி நன்கொடையாகக் கொடுத்த 30 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனைகள் நடந்துள்ளது.

தேர்தல் பத்திரங்களுக்குக் கைமாறாக, நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைத் தாரை வார்த்திருக்கிறது பா.ஜ.க.

அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா, பிரைட்ஸ்டார் இன்வஸ்மண்ட் (Bright star Investments) என்ற நிறுவனத்திடம் அந்த மாநிலத்தின் அரசு மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்கிறார். இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கியது தற்போது அம்பலமாகி உள்ளது.

படிக்க : தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டம்: போலி ஜனநாயக மாயையை விட்டெறியுங்கள்!

ஆனால், டாடா, ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் நேரடியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்கவில்லை.  ரிலையன்ஸ்  குறுக்கு வழியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது அம்பலமாகியுள்ளது. க்யூக் சப்ளை செயின் (Qwik Supply chain) என்ற நிறுவனத்தின் மூன்று இயக்குநர்களில் ஒருவரான தாபஸ் மித்ரா ரிலையன்ஸின் பிற நிறுவனங்களிலும் இயக்குநராக இருக்கிறார். இந்த க்யூக் சப்ளை செயின் (Qwik Supply chain) நிறுவனத்தின் மூலமாக ரூ.410 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், முகேஷ் அம்பானியின் பழைய கூட்டாளியான சுரேந்திர லுனியா என்பவர் தொடர்புடைய சில நிறுவனங்கள் மூலமாக ரூ.50 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2019, மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுக்கப்பட்டதாகும். இதுபோன்ற பலர் தேர்தல் காலங்களில் கொடுத்த தேர்தல் நிதிப் பத்திரங்கள்தான் மோடியை இரண்டாம் முறையாக பிரதமராக்குவதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஹிமாச்சல பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களவை தேர்தலின்போது வழக்கத்தைவிடக் கூடுதலாக 15 நாட்கள் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்க அனுமதிக்கும் வகையில் மோடி கும்பல் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.  இந்த சட்டத்திருத்தம் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் 2022 நவம்பர் 9 ஆம் தேதி மொத்தமாக 676 கோடி ரூபாய்க்குத் தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாங்கப்பட்டது. அவற்றில் 87 சதவீதம் அதாவது 590 கோடி பாஜகவிற்குச் சென்றுள்ளது. இதேபோல்  2022 டிசம்பரில் மொத்தம் 232 கோடி பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அதில், 71 சதவீதம் அதாவது 165 கோடி ரூபாய் பாஜகவிற்கு சென்றுள்ளது.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் தொடர்பான இந்த விவரங்களை நாம் கவனிக்கும்போது, தீர்மானகரமாக மூன்று முக்கியமான முடிவுகளுக்கு வருகிறோம். ஒன்று, தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்ற திட்டத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க அரசியல் அயோக்கியத்தனத்தைச் செய்யவில்லை, அந்த திட்டம் தன்னளவிலே அயோக்கியத்தனமானதுதான். இரண்டாவது, இவையெல்லாம் முதலாளித்துவ தேர்தல் அமைப்பில் நடக்கும் மற்றொரு ஊழல் என்று பார்க்கமுடியாது. இவை பண்பளவிலும் பரிணாமத்திலும் பாசிசமயமான கட்டத்தைக் குறிக்கிறது. மூன்றாவது, தேர்தல் நிதிப் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு லஞ்சமாகக் கொடுப்பதன்மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது சொந்த நலன்களை அரசாங்க கொள்கை முடிவுகளாகச் சாதித்துக் கொள்ளும், கியிட் ப்ரோ க்யோவ் (Quid pro quo) என்று சொல்லக்கூடிய அரசியல் கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பயனடைந்து கொள்வார்கள், மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்ற வாதம் பிரச்சினையின் ஒரு பகுதி  மட்டுமே.

படிக்க : தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!

மற்றொரு பக்கம், பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகளை வைத்து மிரட்டி பணம் வசூலித்துள்ளது. இந்தவகையில்தான் பா.ஜ.க என்ற பாசிச கட்சி மற்ற கட்சிகளிடமிருந்து வேறுபடுகிறது. மற்ற காட்சிகளைப்போல கார்ப்பரேட் நலனை வெறுமனே முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல பா.ஜ.க.வின் அரசியல் இருப்பு, பா.ஜ.க என்ற பாசிச கட்சி அதன் சொந்த இருப்பிலே பாசிசத்தன்மையானது.

2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து நடைபெற்ற எந்த தேர்தலும் “சொல்லிக்கொள்ளப்படும் ஜனநாயக முறைப்படி” நடத்தப்படவில்லை. காரணம், பா.ஜ.க தேர்தலுக்கு முன்பு, பின்பு, தேர்தலின்போது என அனைத்து வகைகளிலும் தனது பாசிச நடவடிக்கைகளின் மூலமாகத் தன்னை ஆட்சியில் தக்கவைத்துக் கொள்ளும் நிலையே இருந்தது. மேலும் இந்த தேர்தல் நிதிப் பத்திரங்கள் என்பது பா.ஜ.க பயன்படுத்தும் பலவகைப்பட்ட பாசிச வழிகளில் ஒன்று மட்டுமே.

சீனிச்சாமி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க