Saturday, May 25, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்உலகம்அமெரிக்க - இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!

அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை!

பாசிசக் கூறுகளைக் கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி. , இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும்.

-

லங்கையில் சீன – அமெரிக்க மேலாதிக்க போட்டாப்போட்டியால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அந்நாட்டின் பொருளாதாரம் திவால் அடைந்தது. 2022 ஜனவரியில் அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம், எரிபொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் எழுச்சி உருவானது. வெகுண்டெழுந்த மக்கள், ஜனாதிபதி மாளிகையைக் கைப்பற்றி, அப்போதைய ஜனாதிபதியான, சீன அடிவருடி கோத்தபய ராஜபக்சேவை நாட்டைவிட்டு விரட்டியடித்தனர். இதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம், ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இலங்கை நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினரைக் கூட கொண்டிராத அமெரிக்க கைக்கூலி ரணில் விக்கிரமசிங்கேவை ஜனாதிபதியாக்கியது.

அதன் பிறகு, அரசியல் குழப்பங்கள், கடுமையான பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களைக் காட்டி 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் தள்ளிப்போட்டது ரணில் கும்பல். இந்த இரண்டாண்டுகளில் மக்கள் மீது கடும் வரிச்சுமைகளை ஏற்றுவது, ஐ.எம்.எஃப்-இன் கடுமையான கட்டளைகளை அமல்படுத்துவது, போராடும் மக்களை இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவது என ஓர் எதேச்சாதிகார ஆட்சியை நடத்தி வருகிறது ரணில் அரசு.

இந்நிலையில்தான், இந்தாண்டு செப்டம்பர்-நவம்பர் மாதங்களுக்குள்ளாக இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளில் எதிர்க்கட்சி தலைவர்கள் வேட்டையாடப்பட்டு, சொல்லிக் கொள்ளப்படும் தேர்தல் ஜனநாயக வழிமுறைகள் அனைத்தையும் குழிதோண்டி புதைத்துவிட்டு தேர்தலை நடத்தி முடித்திருக்கிறது அந்நாட்டு ஆளுவர்க்க கும்பல். இந்தியாவிலும் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, எதிர்க்கட்சிகள் மீது பாசிச அடக்குமுறைகளை ஏவிவருகிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்நிலையில், தெற்கு ஆசிய பிராந்தியத்தில் ஒன்றான இலங்கையிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் சக்திகள் மத்தியில் முக்கியத்துவமுடையதாக பார்க்கப்படுகிறது.


படிக்க : ரணில்: இலங்கையின் மோடி!


அமெரிக்க-இந்திய மேலாதிக்கவாதிகள் உருவாக்கிய புதிய அடிமை ஜே.வி.பி.
கடந்த டிசம்பர் மாதத்தில், இலங்கையைச் சேர்ந்த சுகாதாரக் கொள்கை நிறுவனம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்குள்ளது என கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. அதில், எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவிற்கு 30 சதவிகித வாக்குகளும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 13 சதவிகித வாக்குகளும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்கு 6 சதவிகித வாக்குகளும் கிடைத்துள்ளன. ஆனால், பலரும் எதிர்பாராத வகையில், ஜே.வி.பி. என்றழைக்கப்படும் ஜனதா விமுக்தி பெரமுனாவின் (Janatha Vimukthi Peramuna) தலைவரும் சிங்கள இனவெறி பௌத்த மதவெறி போலி கம்யூனிஸ்டுமான அனுர குமார திசநாயக்கே-விற்கு 51 சதவிகித வாக்குகள் கிடைத்திருப்பதுதான் கவனிக்கத்தக்க முக்கிய விசயமாகும்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தொடர்ந்து எழுந்த மக்கள் எழுச்சிக்கு பிறகு, அனைத்து கட்சிகளின் மீதும் இலங்கை மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இந்நிலையில், ரணில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இலங்கை மக்கள், தங்கள் போராட்டத்தின் மூலம் விரட்டியடித்த கோத்தபய ராஜபக்சேவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜபக்சே கும்பலின் ஆதரவுடனே ரணில் பதவியேற்றார். ஐ.எம்.எஃப்-இன் கட்டுப்பாடுகளை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அதுவரை, நாட்டை மறுகாலனியாக்குவதாக விமர்சித்துவந்த எதிர்க்கட்சிகள், இலங்கை மக்கள் எழுச்சிக்குப் பின்னர் அடக்கி வாசிக்கத் தொடங்கின.

இந்நிலையில், ஆளும் வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்ட அதன் புதிய விசுவாசிதான் இந்த திசநாயக்கே. சென்ற ஆண்டுவரை, 3 சதவிகித வாக்குகளைக் கூட பெற முடியாத கூட்டணிதான், ஜே.வி.பி-யின் தலைமையில் இலங்கையில் இருக்கும் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை இணைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட “தேசிய மக்கள் சக்தி” (என்.பி.பி.) என்ற கூட்டணியாகும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நாட்டை அடகு வைக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்க அரசியலை மக்கள் வெறுத்து வந்த நிலையில், இடதுசாரி போர்வைப் போர்த்திக் கொண்ட இந்த கும்பலை ஆளும் வர்க்கம் புதிய முகமாக முன்தள்ளுகிறது.

ஒருபுறம் மக்களிடம் இருக்கும் ஆளும் வர்க்க எதிர்ப்புணர்வையும் இன்னொருபுறம் மக்களிடம் எழுந்துவரும் இடதுசாரி ஆதரவுப் போக்கையும் அறுவடை செய்து கொள்வதுதான் திசநாயக்கேவை ஆளும் வர்க்கங்கள் முன்தள்ளுவதற்கு முக்கிய காரணமாகும்.

ஆளும் வர்க்கத்தின் கடைக்கண் பார்வை தன் மீது திரும்பியுள்ளதை அடுத்து, ஜே.வி.பி. தலைமையில் அமைக்கப்பட்ட என்.பி.பி. கூட்டணியில் இளைஞர்களை இணைப்பது, சமூக வலைதளங்களில் திசநாயக்கேவை “வளர்ச்சி நாயகனாக”, “பொருளாதார மீட்பராக” முன்னிறுத்தி பிரச்சாரம் செய்வது அதிகரித்துள்ளது. இத்துடன் இலங்கையின் முன்னணி ஆளும் வர்க்க ஊடகங்கள், ஜே.வி.பி. 1980-களில் நிகழ்த்திய “இனப்படுகொலை வன்முறைகளுக்கு மன்னிப்பு தெரிவிக்குமா”, என்றெல்லாம் விவாதங்களைக் கட்டமைத்து, ஏ.கே.திசயநாயக்கேவைப் புனிதப்படுத்தி, அவரை அனைவருக்குமான தலைவராக ஏற்க வைக்கும் வேலையில் இறங்கியுள்ளன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-1


இந்திய நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இலங்கை
இலங்கையின் ஆட்சி அதிகார பீடத்தில் அமர்த்துவதற்காக சீன எதிர்ப்பு, இந்திய ஆதரவு அடிவருடியைத் தேடிக் கொண்டிருந்த அமெரிக்க ஆதரவு நாடுகள், ஜே.வி.பி-யின் தலைவர் ஏ.கே.திசயநாக்கேவை தமக்குத் தேர்ந்த அடிமையாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளன. இவர்தான் அடுத்த ஜனாதிபதியாக ஆக்கப்படுவார் என்ற நிலைமையில், இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இப்போதே இவரை தங்களது நாட்டிற்கு அழைத்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் பாசிச மோடி அரசின் அழைப்பின் அடிப்படையில், ஏ.கே.திசநாயக்கே பிப்ரவரி 5 முதல் 10-ஆம் தேதிகளில் இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டார். இச்சுற்றுபயணத்தின் போது இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோரைச் சந்தித்தார். இத்துடன், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதோடு அங்கிருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜே.வி.பி. அதன் தொடக்க காலத்திலிருந்தே இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வந்தது. 1980-களில் “இந்திய விரிவாக்கம்” என்ற கட்சி ஆவணத்தை எழுதி முன்வைத்த ஜே.வி.பி., இந்திய எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டது. “அமைதிப் படை” என்ற பெயரில் இலங்கைக்குள் அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தை எதிர்த்தது. 2021-ஆம் ஆண்டு கிழக்கு கொள்கலன் முனையத்தை அதானி குழுமத்திற்கு வழங்குவதை எதிர்த்து இலங்கையில் நடந்த போராட்டத்திலும் ஜே.வி.பி. கலந்துகொண்டது. ஆனால், இவையெல்லாம், எதிர்க்கட்சியாக இருக்கும் போது எதிர்ப்பது, ஆளும் கட்சியாக மாறிவிட்ட பின்னர் ஆதரிப்பது என்ற கார்ப்பரேட் அரசியலின் பிழைப்புவாத சீரழிவு என்பதை ஜே.வி.பி-யின் நடவடிக்கை இப்போது வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

அண்மை காலங்களாக, இந்தியாவுடனான ஜே.வி.பி-இன் அணுகுமுறை மாறி வருவதோடு இந்தியாவுடன் இணக்கம் பாராட்டுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 2023-இல் “தி இந்து” பத்திரிகைக்கு நேர்காணல் கொடுத்த திசநாயக்கே, “எங்கள் நெருங்கிய அண்டை நாடான இந்தியா ஒரு பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, நாங்கள் பொருளாதார மற்றும் அரசியல் முடிவுகளை எடுக்கும்போது, அது இந்தியாவை எப்படி பாதிக்கும் என்பதைப் பற்றி எப்போதும் அக்கறை காட்டுவோம்” என்றார். இதுமட்டுமின்றி, இவர் பொது இடங்களில் இந்திய ஆட்சியாளர்களை புகழ்ந்து பேசுவதும் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், கோத்தபய, ரணில் வரிசையில் திசநாயக்கேவும் இந்திய ஆதிக்கத்தின் தேர்ந்த அடிமை என்பதையே அவரது செயல்பாடுகள் நிரூபிக்கின்றன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-2


குஜராத் முதல்வரையும் அம்மாநிலத்தின் உள்ளூர் கார்ப்பரேட் முதலாளிகளையும் தனது இந்தியப் பயணத்தின் மூன்றாவது நாளன்று சந்திக்க ஏ.கே.திசயநாயக்கேவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், மோடியின் “குஜராத் மாடல்” பற்றிய விளக்கக்காட்சியும் அவருக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டது. அதேபோல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிற மூத்த இந்திய அதிகாரிகளுடனான திசநாயக்கேவின் இச்சந்திப்பின்போது, “முதலில் அண்டையர்கள்” (Neighbour First) மற்றும் “சாகர்” (SAGAR) உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் திட்டங்கள் குறித்து திசநாயக்கேவுடன் விவாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட இந்தியா, சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான உதவிகளை இலங்கைக்கு வழங்கியது. மேலும், இலங்கையை கடனிலிருந்து ‘மீட்க’ பாடுபடுவதாக நாடகமாடுவதன் மூலம், இலங்கையில் தனது பிராந்திய மேலாதிக்கத்தை நிறுவி வருகிறது. அமெரிக்க அடிவருடி ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது, இந்தியாவிற்கு மேலும் சாதகமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, இலங்கையில் இந்திய முதலீடுகளும் ஆதிக்கமும் அதிகரித்து வருகிறது.

ரணில் ஆட்சிக்கு வந்த பிறகு கோத்தபய ஆட்சியில் மக்களின் எதிர்ப்பின் காரணமாக நிறுத்திவைக்கபட்ட மன்னார் எரிசக்தித் திட்டம் மீண்டும் அதானிக்கு வழங்கப்பட்டது; இந்தியா-இலங்கை இடையிலான உறவு தொடர்பாக இந்தியா முன்வைத்த “கூட்டுப் பார்வையை” (joint vision) இலங்கை ஒப்புக்கொண்டது; இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் எரிசக்தித் துறையில் அதானியின் ஆதிக்கம் வளர்ந்து வருவது; இந்திய ரூபாயில் வத்தகம் செய்ய இலங்கை முயற்சித்து வருவது போன்றவை இலங்கையில் இந்தியாவின் மேலாதிக்கம் வளர்ந்து வருவதற்கான சான்றுகளாகும். தற்போது, இந்த ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்திக்கொள்ளும் நோக்கிலேயே ஏ.கே.திசநாயக்கேவை இந்தியா ஆதரிப்பதும் அமைந்துள்ளது.

ஏ.கே.திசயநாயக்கேவின் இந்தியப் பயணத்திற்குப் பிறகு, இலங்கைக்கான இந்தியாவின் உயர் ஆணையர் சந்தோஷ் ஜா, இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கும் தெற்குப் பகுதிகளுக்கும் தனித்தனியாக பயணம் மேற்கொண்டார். அவரை பிப்ரவரி 15-17 வரையிலான நாட்களில், வட இலங்கையின் முன்னணி தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். குறிப்பாக, இலங்கை தமிழ்கட்சிகளை இந்தியாவிற்கு வரவழைத்துப் பேச இருந்த திட்டம் கைவிடப்பட்டு பின்னர், இந்த சந்திப்புகள் நடந்தேறின. அந்தவகையில், பிழைப்புவாத தமிழினக் கட்சிகளைக் கொண்டு, ஏ.கே.திசநாயக்கேவிற்கு ஆதரவு திரட்டும் வேலையை இந்தியாவே முன்னின்று செய்வதை இந்த சந்திப்புகள் உறுதி செய்கின்றன. இவை அனைத்தும் இலங்கையின் அரசியலில் இந்தியா முழுமையான தலையீட்டைக் கொண்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அண்மையில், மாலத்தீவு அதிபராக பதவியேற்றுகொண்ட முகமது முய்சு முதல் அதிகாராப்பூர்வ பயணமாக சீனாவிற்குச் சென்று சீனாவின் மேலாதிக்கத்திற்கு முன்னுரிமைக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்தியா மாலத்தீவுக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்து தனது மேலாதிக்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், இலங்கையைப் பொருத்தவரை, 2021 கடும் பொருளாதார நெருக்கடியே அமெரிக்க-சீன போட்டாபோட்டின் விளைவாக உருவானதாகும். இந்தப் போட்டியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இலங்கையின் அரசியலை தனது மேலாதிக்கத்தின் கீழ் இந்தியா கொண்டுவந்திருப்பதையே அண்மைகால இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.


படிக்க : இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்: அமெரிக்க-சீன மேலாதிக்கப் போட்டியின் தெற்காசிய பகடைக்காய்கள்! | பாகம்-3


வளர்ந்துவரும் இன-மத முரண்பாடுகள்
இவைமட்டுமின்றி, ஈழத் தமிழ் மக்களின் எதிரியாக இருந்து செயல்பட்ட ஜே.வி.பி. கட்சி இத்தனை ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க முடியாமல் இருந்தது. ஆனால், தற்போது யாழ்ப்பாணத்திலேயே ஜே.வி.பி. கட்சிக்கு பல இடங்களில் கிளைகள் தொடங்கப்பட்டிருப்பது இத்தமிழினக் கட்சிகளின் துரோகத்தை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி உருவாகும் சூழலில், சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அடிப்படையிலான அமைப்புகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையில் அதிகரித்து வந்தன. சான்றாக, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு திருநாள் அன்று மூன்று கிறித்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

2020 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடத்தப்பட்ட இத்தாக்குதலைத் தொடர்ந்து, இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி சிங்கள இனவெறி, பௌத்த மதவெறியைத் தூண்டிவிடும் போக்குகள் அதிகரித்தன. முக்கியமாக, இந்தத் தாக்குதலின் விளைவாக இலங்கைக்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இது, இலங்கைப் பொருளாதார வீழ்ச்சியில் முக்கியப் பங்காற்றியது.

ஆனால், இத்தாக்குதலின் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு உறுதியளித்த கோத்தபய கும்பலும், ரணில் கும்பலும் தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை விமர்சிக்கும் முன்னணி ஊடகங்கள், இதில் சதிக்கோட்பாடுகள் இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளன.

மேலும், இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்குப் பின்னர் ஓரளவிற்கு குறைந்திருந்த சிங்கள இனவெறி, பௌத்த மதவெறி அரசியல் நடவடிக்கைகள், தற்போது மீண்டும் மேலோங்கி வருவதை அண்மைகால நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதுமட்டுமல்ல, இந்தியாவில் பாசிச மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்தது பின்னர், இலங்கையிலும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.


படிக்க : ஐ.எம்.எஃப்-வின் மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் இலங்கை!


வளர்ந்து வரும் புதிய பாசிசக் கும்பல்
இலங்கை மற்றும் பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் திசநாயக்கேவை தங்களது சுரண்டலுக்கான புதிய முகமாக கருதுகின்றன. அந்த முகம் இடதுசாரி வேடம் தரித்திருப்பது தற்போதைய இலங்கை மக்களின் மனநிலைக்கும் பொருத்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதுவர்களும் முக்கிய தலைவர்களும் ஜே.வி.பி. அலுவலத்தில் திசநாயக்கேவை சந்தித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி ஒரே சமயத்தில், பாலஸ்தீனம், துருக்கி, வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா, மாலத்தீவு உள்ளிட்ட ஆறு நாடுகளை சேர்ந்த தூதுவர்கள் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தனர். மார்ச் 8 அன்று கியூப நாட்டு தூதுவர் ஜே.வி.பி. அலுவலகத்தில் திசநாயக்கேவை சந்தித்தார். மார்ச் 13-ஆம் தேதி இலங்கைக்கான கனடாவின் உயரதிகாரி எரிக் வால்ஷ்-வும் 19-ஆம் தேதி ஜப்பான் தூதுவர் மிசுகோஷியும் திசநாயக்கேவை சந்தித்தனர்.

ஆளும் வர்க்கத்தால் தான் முன்னிறுத்தப்பட்டிருப்பதை தனது வளர்ச்சிக்கு சாதகமாக பயன்படுத்திகொள்ள துடிக்கும் திசநாயக்கே, பிற நாடுகளின் ஆளும் வர்க்கங்களை சந்தித்து ஆதரவு திரட்டவும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குகளை சேகரிக்கவும் அடுத்தடுத்து பல நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுகொண்டிருக்கிறார். அண்மையில், கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க திசநாயக்கே கனடா சென்றது அதற்கான சான்றாகும். இவை மட்டுமின்றி, ஸ்வீடன், தென் கொரியா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் திசநாயக்கேவின் அடுத்தடுத்த பயணப் பட்டியலில் அடங்கியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், திசநாயக்கேவும் ஜே.வி.பி-யும் ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டு, அக்கும்பலுக்கு ஆதரவு வளர்ந்து வருவதை சிலர் அடியோடு மறுக்கின்றனர். ஜே.வி.பி. சமூக வலைதளக் கட்டமைப்பில் பலமாக இருப்பதால் இவ்வாறு முன்னிறுத்தப்படுகிறது; தற்போது வெளியாகியுள்ள கருத்துகணிப்பு ஜே.வி.பி-யை இனவாதக் கட்சியாக பார்க்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் எடுக்கப்படாததால் அவர்களின் உணர்வு கருத்துகணிப்பு முடிவில் எதிரொலிக்கவில்லை, எனவே, திசநாயக்கே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற மாட்டார் என்கின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் உண்மை இருப்பதைப் போலத் தோன்றினாலும், பொருளாதார நெருக்கடிக்கு பிறகு ஜே.வி.பி. வளர்ந்து வருவதும் அதனை அமெரிக்க ஆதரவு நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் ஊக்குவிப்பதையும் மறுக்க முடியாது. அதேவேளையில், இலங்கை ஆளும் வர்க்கங்களும் இலங்கையைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் ஏகாதிபத்தியங்களும் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கும் இலங்கை மக்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கும் ஒரு வல்லமைமிக்க அரசியல் தலைவரை முன்னிறுத்தி, அவரை வெற்றிப் பெறச் செய்து, “நிலையான ஆட்சி”யை அமைக்க வேண்டியுள்ளது. இந்த உண்மையில் இருந்துதான் மொத்த நிகழ்வுகளையும் பார்க்க வேண்டும்.


படிக்க : மலையகத் தமிழ் மக்களை “இலங்கை வாழ் இந்தியத் தமிழர்” என குறிப்பிடுவது திட்டமிட்ட உள்நோக்கமுடையது | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி


தேவை, பாசிச எதிர்ப்பு அரசியல் பார்வை!
எனவே, திசநாயக்கே போன்றதொரு இனவெறி கும்பலை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவதற்கு இலங்கை ஆளும் கார்ப்பரேட் வர்க்கங்கள் அனைத்து ஜனநாயக விரோத வழிமுறைகளையும் மேற்கொள்ளும். மேலும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிச கும்பலும் அதன் தலைமையிலான ஆட்சியும் இலங்கையில் ஜனநாயகமான முறையில் மாற்றம் உருவாவதைத் தடுத்து தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளதையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆகையால், பாசிசக் கூறுகளை கொண்ட இனவெறிக் கட்சியான ஜே.வி.பி., இலங்கை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றப் போவது இலங்கை உழைக்கும் மக்கள் எதிர்கொண்டுள்ள முதன்மையான பிரச்சினையாகும். தற்போதைய நிலையில், அதன் அரசியல் வெற்றியை முறியடிப்பது மட்டுமின்றி, இலங்கை பேரெழுச்சி உருவாக்கிய ஒற்றுமை உணர்வை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பரந்துவிரிந்த மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும். இந்த இரண்டு கடமைகளையும் ஒருங்கே நிறைவேற்றும் வகையிலான அரசியல் செயல்தந்திரங்களை வகுத்து முன்னேறுவது இலங்கையில் உள்ள புரட்சிகர சக்திகளின் கடமையாகும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் வங்கதேசம், பாகிஸ்தானை அடுத்து இந்தியாவில் மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி அமைவதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள், இலங்கையில் பாசிச சிங்கள இனவெறி ஜே.வி.பி. தலைமையிலான ஓர் ஆட்சி அமைவதை முறியடிப்பதற்கு இலங்கை உழைக்கும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 | மின்னிதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க