Tuesday, October 15, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மருத்துவக் காப்பீட்டை சுரண்டலுக்கான கருவியாக பயன்படுத்தும் ஸ்விக்கி

மருத்துவக் காப்பீட்டை சுரண்டலுக்கான கருவியாக பயன்படுத்தும் ஸ்விக்கி

எந்த மாதிரியான மருத்துவக் காப்பீட்டை ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு தொழிலாளர்களை மூன்று நிலைகளில் தரம் பிரித்து வைத்துள்ளது ஸ்விக்கி நிறுவனம்.

-

ஸ்விக்கியில் ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆறு வருடங்களுக்கும் மேலாக உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். அவர், கடந்த ஜனவரி மாத இறுதியில், ஹைதராபாத் பகுதியில் உணவு ஆர்டர்களை டெலிவரிக்கு கொண்டு சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவரது மனைவியிடமிருந்து அவசர அழைப்பு வந்தது. ”எனக்கு உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் அவசரமாக வரவேண்டும்” என்று அவரது மனைவி ராகேஷுக்கு தெரிவித்தார். மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோயைக் கண்டறிவதற்காக விடுமுறை எடுத்த ராகேஷ் மூன்று வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.

அவரது மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோயை கண்டறிந்த பிறகு, சிகிச்சை செய்வதற்காக ராகேஷுக்கு ரூ.1,20,000/- தேவைப்பட்டது. சிகிச்சைக்கான பணத்தை ஸ்விக்கியின் மருத்துவக்காப்பீட்டின் மூலம் கட்டுவதற்கு ராகேஷ் முயற்சித்தபோது, மருத்துவக்காப்பீடு கிடைக்காது என்பதை தெரிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார். ஸ்விக்கியின் மருத்துவக் காப்பீட்டை பெறுவதற்கான நிபந்தனையை அவர் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அவருக்கான காப்பீட்டு நிதி நிராகரிக்கப்பட்டது. மூன்று வாரங்களாக வேலைக்கு செல்லாதால் ”கோல்ட்” (Gold) என்ற நிலையை  இழந்து அதற்குக் கீழான நிலைக்கு சென்று விட்டதை காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டார் ராகேஷ்.

அதென்ன ”கோல்ட்” (Gold) என்ற நிலை?

எந்த மாதிரியான மருத்துவக் காப்பீட்டை ஒரு தொழிலாளி பெற வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் பொருட்டு தொழிலாளர்களை மூன்று நிலைகளில் தரம் பிரித்து வைத்துள்ளது ஸ்விக்கி நிறுவனம். அவை: தங்கம் (Gold), வெள்ளி (Silver), வெண்கலம் (Bronze). ”தங்கம்” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீட்டைப் பெற முடியும். ”வெள்ளி” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் தனக்கு மட்டுமே காப்பீட்டைப் பெற முடியும்; அவரது குடும்பத்தால் காப்பீட்டைப் பெற முடியாது. ”வெண்கலம்” மதிப்பிடப்பட்ட தொழிலாளர்களால் விபத்துகளின் போது மட்டுமே மருத்துவக் காப்பீட்டை பெற முடியும்.


படிக்க : ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!


மேலே குறிப்பிடப்பட்ட, மூன்று நிலைகளும் நிரந்தரமானவையும் கிடையாது. இவை மாறக்கூடியது. ஒவ்வொரு வாரமும், டெலிவரி தொழிலாளர்கள் கோல்ட் தரவரிசையைத் தக்கவைக்க 70 புள்ளிகளுக்கு மேல் பெற வேண்டும். 50 முதல் 70 புள்ளிகளுக்கு இடையில் இருந்தால் அவர்கள் வெள்ளிப் பிரிவிலும், 50 புள்ளிகளுக்குக் கீழே இருக்கும் தொழிலாளர்கள் வெண்கலப் பிரிவிலும் சேர்க்கப்படுவார்கள்.

தனது உயிரைப் பனையம் வைத்து குறிக்கப்பட்ட நேரத்திற்குள் உணவை பத்திரமாக டெலிவரி செய்தால் மட்டுமே “பர்பெக்ட் டெலிவரி” (perfect delivery) ஆக கருதப்படும். ஒரு பர்பெக்ட் டெலிவரி செய்தால் ஒரு புள்ளி வழங்கப்படும்.

சில நேரங்களில் ட்ராஃபிக் காரணமாக ஆர்டர்களை சரியான நேரத்தில் தொழிலாளர்களால் டெலிவரி செய்ய முடியாது. அப்போதெல்லாம் ஸ்விக்கி செயலி அந்த ஆர்டரை மோசமான ஆர்டருக்குள் சேர்த்துவிடும். இதனால் அவர்களுடைய புள்ளிகள் குறையும்.

தொழிலாளர்கள் தங்களுடைய கோல்ட் தரவரிசையைத் தக்க வைப்பதற்காக ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்கிறார்கள்.


படிக்க : கிக் தொழிலாளர்களுக்கான நல வாரியம்: தீர்வாகுமா?


ராகேஷுக்கு நடந்ததைப் போன்றதொரு அவலம், கடந்த அக்டோபர் 2023 இல், மும்பையில் ஸ்விக்கி டெலிவரி தொழிலாளர் ஒருவருக்கும் நடைபெற்றுள்ளது. அவர் ஸ்விக்கி நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். தனது மனைவியின் மகப்பேறு செலவுக்காக ரூ. 23,000/- மதிப்புள்ள காப்பீட்டுக்கான கோரிக்கையை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தாக்கல் செய்தார். ஆனால், நான்கு மாதங்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் இந்த உரிமைகோரலை மறுத்து அவருக்கு பதில் கடிதம் அனுப்பியது. அதில் ”நீங்கள் சில்வர் மதிப்பிடப்பட்ட நிலையில் இருப்பதால் உங்கள் குடும்பத்தினருக்கான மருத்துவ செலவுகளை வழங்க முடியாது” என தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில், ஸ்விக்கி தனது கார்ப்பரேட் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அக்கோ ஜெனரல் இன்சூரன்ஸிலிருந்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸுக்கு மாற்றியது. அதன் பிறகுதான் தொழிலாளர்களை வகைப்படுத்தும் முறை கொண்டுவரப்பட்டது என்று ஸ்விக்கி தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான மருத்துவக் காப்பீட்டை தருவதற்கு கூட பல்வேறு நிபந்தனைகளை விதித்து கார்ப்பரேட் நிறுவங்கள் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றன. அவர்களை கசக்கிப் பிழிவதற்காகவே இது போன்றதொரு காப்பீட்டு மாதிரியை பின்பற்றுகின்றன. இதற்கு அரசும் எப்போதும் துணையாகவே இருந்து வருகிறது.

கிக் தொழிலாளர்கள் தங்களை சங்கமாக்கிக் கொண்டு தொடர்ந்து போராடுவதன் மூலம் மட்டுமே தங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளையாவது பெற முடியும்.

செய்தி ஆதாரம்: ரெஸ்ட் ஆஃப் வேர்ல்ட் (restofworld)


‌ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க