Saturday, September 14, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்இந்தியாவிவசாயத்துறையில் “ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!

விவசாயத்துறையில் “ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காற்று வீசும் திசையில் ரசாயன மருந்து பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

-

டந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி, டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் “நமோ ட்ரோன் சகோதரி” (Namo Drone Didi) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக ஹரியானாவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், மிகப்பெரிய ரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில், சுய உதவிக்குழுக்களில் இருக்கும் 300 பெண்களுக்கு ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆளில்லா விமானங்களை இயக்க பயிற்சி பெற்ற இப்பெண்களுக்கு 30 கிலோ எடையுள்ள ட்ரோன்களும் அவற்றைக் கொண்டு செல்வதற்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

நாடுமுழுவதும் 15,000 சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாம். மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் தகுதியான பெண் ஒருவருக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியானது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (Directorate General of Civil Aviation) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பால் நடத்தப்படும். பயிற்சியளிக்கும் இத்திட்டத்தில் நாட்டில் இருக்கும் இதர முன்னணி உர நிறுவனங்களும் இணைந்துள்ளன.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மூன்று ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும். இதில் 500 ட்ரோன்கள் முன்னணி உர நிறுவனங்கள் மூலமும் மீதம் 14,500 ட்ரோன்கள் “நமோ ட்ரோன் சகோதரி” திட்டத்தின் கீழும் விநியோகிக்கப்படும்.

விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்தும் வேலையில் மோடி அரசு ஈடுபடுவது புதிய நிகழ்வல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கான ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களுக்கும், அதை வாங்குபவர்களுக்கும் மானியங்கள் வழங்குவது; ட்ரோன் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை (Liberalized Drone Rules 2021) தளர்த்துவது; ட்ரோன் பைலட் உரிமத்திற்கான தேவையை நீக்குவது என பல ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்திய விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயத்துறையில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்தும் மோடியின் இந்த திட்டம் குறித்து, ஆங்கில ஊடகங்களில், “இந்திய விவசாயத்தை மாற்றும் ட்ரோன்கள்”; “ட்ரோன் புரட்சியை உருவாக்குகிறது”; “நவீன தொழில்நுட்பத்துடன் வருங்கால விவசாயத்துறை” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஆனால், உண்மையில் ட்ரோன் பயன்பாடு என்பது  சிறு, குறு விவசாயிகளையும், விவசாய கூலித் தொழிலாளர்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து விட்டு, விவசாயத் துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தைக் கொண்டுவரும் அபாயகரமான நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாகும்.

தற்போது பெண்களுக்கு இலவசமாக ட்ரோன் வழங்கியது என்பது வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த அல்ல. பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ட்ரோன்களை வழங்குவதன் மூலம் ட்ரோன் பயன்பாட்டை வழக்காமான நடைமுறையாக மாற்றத் துடிக்கிறது பாசிச மோடி அரசு.


படிக்க: இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!


விவசாயத்துறையில் ட்ரோன் பயன்பாடு:

விளை நிலத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது தொடங்கி ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்தர கேமராக்கள் மூலம் பயிரின் ஆரோக்கியம், வளர்ச்சி, மகசூல் பற்றி குறிப்பான தகவல்களை பெறுவது; வானிலை மாற்றத்தை தெரிந்து கொள்வது; நீர் பயன்பாட்டை கண்காணிப்பது, நீரை சிக்கனமாக உபயோகிப்பது; பெரிய மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை கண்காணிப்பது; பண்ணைகளில் இருந்து சந்தைகளுக்கு விளைப்பொருட்களை எடுத்து செல்வது போன்ற பல வேலைகளை ட்ரோன்கள் மூலம் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் பட்டியிலிடுகின்றனர்.

குறிப்பாக, “ட்ரோன் சகோதரி திட்டத்தின்” கீழ் ட்ரோன் பயன்பாட்டில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கின்றனர்.

இவற்றைக் கேட்க புரட்சிகரமானதாக தோன்றலாம் ஆனால் உண்மை என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முறையில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான் உரம், பூச்சிக்கொல்லி போன்ற மருந்து தெளிக்கும் வேலையில் ஈடுபடுவார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில்  இக்கூலித் தொழிலாளி ஒருவரைக் கொண்டு மருந்து தெளிக்க, ஏழு அல்லது எட்டு மணிநேரமாகும் என்றால், அதுவே ட்ரோன் கருவி மூலம் இரண்டரை ஏக்கருக்கு 12 முதல் 15 நிமிடங்களிலேயே மருந்து தெளித்துவிட முடியும் என்கிறார் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி.

இதனால் ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கும், இது ட்ரோன் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற ஒருவரால்தான் இனி இந்த பணியில் ஈடுபட முடியும் என்ற நிலையை உருவாக்கும். நவீன தொழில்நுட்பத்தால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற கூற்றே இங்கு உடைகிறது. பெண்கள் சிலருக்கு வேலை கிடைக்கலாம் ஆனால், அதைவிட பன்மடங்கு விவசாய கூலிகள் இந்த நவீன தொழில்நுட்பத்தால் உரம், பூச்சுக்கொல்லி மருந்து தெளிக்கும் வேலைகள் கிடைக்காமல் ஏதுமற்றவர்களாக துரத்தியடிக்கப்படுவார்கள்.


படிக்க: நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!


அதேபோல், சாமானிய சிறு, குறு விவசாயிகள் ட்ரோனை வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பேட்டரியில் இயங்கும் ட்ரோனின் விலை கிட்டத்தட்ட 6 லட்சம்; பெட்ரோலில் இயங்கும் ட்ரோனின் விலை சுமார் 12 லட்சம். இந்த செலவீனங்கள் காரணமாக ட்ரோன்கள் அதிகளவில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனினும், ஒருசில நடுத்தர, பணக்கார விவசாயிகள்தான் தற்போது ட்ரோனை வாங்கி பயன்படுத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதியின் ஒருசில இடங்களில் ட்ரோன் பயன்பாடு வந்துள்ளது. “அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், ட்ரோன்களைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.தனபாலன். 2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய விவசாயத் துறையில் ட்ரோன் கருவியின் பயன்பாடு 38.5 சதவிகிதமாக உயரும் என அமெரிக்காவில் இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

ட்ரோன் பயன்பாடு, சுற்றுச் சூழலுக்கு பேராபத்து:

ட்ரோன் பயன்பாட்டின் மற்றொரு மோசமான விளைவு பூச்சிக்கொல்லி மருந்தை வான்வழியாக தெளிப்பதால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பேராபத்து.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காற்று வீசும் திசையில் ரசாயன மருந்து பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மண் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

ஆக, ட்ரோன்கள் மூலம் மருந்தை தெளிக்கும்போது ட்ரோன் பறக்கும் உயரம், வேகம் உள்ளிட்டவை கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், இத்தகைய வழிகாட்டுதல்கள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க தற்போது எந்த வழியும் இல்லை என்கிறார் விவசாய சங்கத் தலைவர் ஒருவர்.


படிக்க: விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?


மேலும், ட்ரோன்களை பறக்கவிடுவதன் மூலம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவைகளும் பூச்சி இனங்களும் வராமல், இயற்கையான வளர்ச்சி என்பது தடைப்பட்டு போகும் அபாயமும் ஏற்படும். ட்ரோன்கள் பறக்கும்போது ஏற்படும் சத்தத்தால் பறவைகள் அச்சமடைகின்றன. அதிக உணர்திறன் கொண்ட பறவைகளின் இனப்பெருக்கத்தையே ட்ரோன் பாதிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆக, விவசாயத் துறையில் இருந்து மனித உழைப்பை விரட்டியடிக்கும் அதேவேளையில் இயற்கைக்கும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலத்திற்கும் மாபெரும் ஆபத்தை விளைவிக்கிறது.

கார்ப்பரேட்மயமாக்கமே நோக்கம்

மேலே குறிப்பிட்டிருப்பதை போல ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது மட்டுமல்ல,  நிலம் சம்பந்தமான விஷயங்கள் குறித்தும் உரம் பூச்சிக்கொள்ளி மருந்து எந்தளவிற்கு உபயோகிக்கப்படுகிறது; என்ன மாதிரியான விதைகள் பயன்படுத்தப்படுகிறது; என்பது குறித்தும் தரவுகள் சேகரிக்கப்படும். இதன் மூலம் மிகப்பெரிய தரவு களஞ்சியம் உருவாக்கப்பட்டு விவசாயத் துறையில் எவ்வித மாறுதல்களை கொண்டுவரலாம் என்ற திட்டமிடலை கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து கொள்ளும்  முடியும். முக்கியமாக, விவசாயிகள் பெருமளவில் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவரப்படுவார்கள். விவசாயிகளின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது டெல்லியில் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலைக்காகவும் விவசாயித்துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தை எதிர்த்தும போராடி வரும் சூழலில் விவசாய மேம்பாடு, விவசாய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் என பல்வேறு நாடகமாடி, விவசாயத் துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க