Thursday, September 19, 2024
முகப்புசெய்திமே நாள்: பாசிசத்தை வீழ்த்த சபதமேற்போம்!

மே நாள்: பாசிசத்தை வீழ்த்த சபதமேற்போம்!

பல நாடுகளில் வளர்ந்துவரும் பாசிஸ்டுகளை வீழ்த்துவதுதான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள முதன்மைக் கடமையாக இன்று இருக்கிறது. அந்த சர்வதேச ஒற்றுமையில் கரம் கோர்ப்பதன் மூலம்தான் நமது நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச சக்திகளை நம்மால் வீழ்த்த முடியும்.

-

முதலாளித்துவத்தின் சுரண்டலால், நாள்தோறும் சொல்லொன்னா துன்ப, துயரங்களுக்கு ஆளாகி வரும் உலகெங்கிலும் உள்ள கோடானகோடி மக்களை முதலாளித்துவத்தின் கொடூரத்திலிருந்தும், அதனால் ஆட்படும் பல்வேறு இன்னல்களில் இருந்தும் விடுவித்து, பூவுலகில் ஒரு சொர்கத்தை படைக்க, கிளர்ந்தெழுந்து வரும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சர்வதேசத் தொழிலாளர் தின புரட்சிகர வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உழைக்காமல் உண்டு கொழுக்கும் வர்க்கங்கள் தோன்றிய காலந்தொட்டே, உழைப்பாளர்களுக்கும் அதை சுரண்டித் தின்பவர்களுக்குமான போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. வரலாறு நெடுகிலும் இத்தகைய போராட்டங்களின் சாயல்களை நாம் கண்ணுற்று வருகிறோம். இதில் குறிப்பாக மே தினம் என்பது பாட்டாளி வர்க்க போராட்டங்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சரித்திரப்பூர்வ நிகழ்வுகளில் ஒன்றாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே தொழிலாளர் வர்க்க போராட்டங்கள் உலகம் முழுவதும் வெடித்தெழுந்து கொண்டிருந்தன. குறிப்பாக, அப்போதெல்லாம், பதினாறு மணி நேரம், பதினெட்டு மணி நேரம், இருபது மணி நேரம் கூட வேலை வாங்குதல், குறைவான ஊதியத்தை வழங்குதல், அதிலும் பல்வேறு அபராதங்களை விதித்தல், பெண்கள் – குழந்தைகள் அதிகளவு சுரண்டப்படுதல் போன்ற பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டமாக அது விளங்கியது.

அமெரிக்காவின் பிலடெல்பியா நகர இயந்திரத் தொழிலாளர் சங்கம்தான் முதன்முதலில் பத்து மணிநேர வேலைநாள் என்ற போராட்டத்தை அறிவித்தது. அப்போது வேன் பிரயூன் அரசாங்கம் பத்துமணி நேர வேலைநாளை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது. அதன் பிறகு அந்தக் கோரிக்கை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பரவத் தொடங்கியது. பல்வேறு இடங்களில் இந்தக் கோரிக்கை வெற்றியடையவே 8 மணி நேர வேலை நாளுக்கான போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டன.


படிக்க: வங்கதேசத்தில் ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம்!


தொழிற்சங்கங்களின் தீவிர வளர்ச்சியால் இக்கோரிக்கையானது காட்டுத்தீயாக உலகெங்கிலும் பரவத் தொடங்கியது. இருந்தபோதிலும், 1884-இல் அமெரிக்காவில் நடந்த 8 மணி நேர இயக்கத்தின் போது வெடித்த போராட்டங்கள் தான் மே தினம் உருவாக நேரடி காரணமாக அமைந்தன. இப்போராட்டத்தில் இடதுசாரி தொழிலாளர் இயக்கத்தின் மையமாக அமெரிக்காவின் சிகாகோ நகரம் விளங்கியது. அமைப்பு ரீதியான தொழிலாளர்கள் மட்டுமின்றி, உதிரித் தொழிலாளர்களும், பயிற்சியில் இருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் இப்போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதன்பிறகு மே முதல் நாள் என்பது சர்வதேச தொழிலாளர்களின் உரிமைகளைப் பெறுவதற்கான போராட்ட தினமாக மாறியது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற மே முதல் நாள் போராட்டங்களில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆளும்வர்க்கமும் இப்போராட்டங்களை கொடூரமான முறையில் ஒடுக்கியது. ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தொழிற்சங்கத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். இவ்வாறு, மே தினமானது அளப்பரிய தியாகங்களாலும், வீர தீரமிக்க நடவடிக்கைகளாலும், பாட்டாளி வர்க்கத்தின் பிரம்மாண்டத்தை உலகறியச் செய்த நாளாகும்.

8 மணி நேர வேலைக்கான போராட்டம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் மட்டுமல்ல, அவர்களது உடனடிக் கோரிக்கைக்கான போராட்டம் மட்டுமல்ல, அல்லது தங்கள் மீதான அடக்குமுறைகளைக் குறைத்துக் கொள்வதற்கான போராட்டம் மட்டுமல்ல. அது முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்தைப் படைப்பதற்கு, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளர் வர்க்கத்தின் முன்னால் இருந்த உடனடி வரலாற்றுக் கடமையாகும்.

இந்நாளை சர்வதேச பாட்டாளி வர்க்கமானது, எண்ணிலடங்கா போராட்ட அனுபவங்களை வரித்துக் கொண்டு செரித்து உரமாக்கி, உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும், முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்தை அடைவதற்கான தனது பாதையை செப்பனிட்டுக் கொள்ளும் நோக்கில், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையையும் வர்க்க உணர்வையும் தட்டியெழுப்பும் வகையில் போராட்ட தினமாக மே தினத்தை தீர்மானித்துள்ளது. உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள உழைக்கும் வர்க்கப் பிரதிநிதியையும் தனது வரலாற்றுக் கடைமையை ஆற்ற மே தினத்தில் அறைகூவுகிறது. அதற்கு எதிரான சக்திகளோ, இந்நாளை கூலி உயர்வுக்காகவும், போனசிற்காகவும், சில சலுகைகளை பெறுவதற்காகவும் பாட்டாளி வர்க்கத்தை திசை திருப்புகின்றன. அதனை சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் அங்கத்தினராகிய நாம் ஒருபோதும் அனுமதிக்கலாகாது.

ஏனெனில், மேற்குறிப்பிட்ட, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிலவிய எந்த சூழலும் தற்போது மாறிவிடவில்லை. சொல்லப்போனால் உழைக்கும் மக்களின் நிலையோ நாளுக்கு நாள் மோசமாகியே வருகிறது. பாட்டாளி வர்க்கமானது திட்டமிட்ட வகையில் ஆளும் வர்க்கத்தால் பிளவுபடுத்தப்படுகிறது. தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, இதன் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


படிக்க: தர்மபுரி: வேலை இழக்கும் அபாயத்தில் அரிசி அரவை ஆலைத் தொழிலாளர்கள்


இந்தியாவைப் பொருத்தவரை, சீருடை அணிந்த தொழிலாளர்களைக் காட்டிலும் சீருடை அணியாத தொழிலாளர்கள் இலட்சக்கணக்கில் இருக்கின்றனர். ஆயிரக்கணக்கான, விவசாயிகளும், சிறு-குறு வணிகர்களும் பாட்டாளி வர்க்கத்தின் நிலைக்கு நாள்தோறும் தள்ளப்படுகின்றனர். வேலையில்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் தாண்டவமாடுகிறது. உரிமைகளைப் பற்றி பேசவோ இங்கு என்ன இருக்கிறது? உரிமை என்பதற்கெல்லாம் இடமின்றி எந்த வேலையானாலும், எவ்வளவு குறைவான கூலியானாலும், உயிருக்கு உத்தரவாதமற்ற வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, வேலை என்ற ஒன்று கிடைத்தால்போதும் என்ற அவல நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது பாசிச மோடி அரசு.

மற்றொருபுறம், உழைக்கும் மக்களின் பணத்தில் முதலாளிகளுக்கு மஞ்சள் குளிப்பாட்டுகிறது மோடி அரசு. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு அதானியின் சொத்து மதிப்பு அதள பாதாளத்தில் வீழ்ந்தது. அடுத்த ஆறே மாதங்களில் அது மீட்டெடுக்கப்பட்டது. இது யாருடைய பணத்தால்? சமீபத்தில் அம்பானியின் வீட்டு திருமண ஒத்திகை என்ற பெயரில் சர்வதேச முதலாளிகளும் சினிமா கழிசடைகளும் குடித்து கூத்தடித்து களியாட்டம் போட, ஆயிரக்கணக்கான கோடி வாரி இறைக்கப்பட்டதே யார் உழைப்பு அது? கார்ப்பரேட் முதலைகளுக்கு இலட்சக்கணக்கான கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே யார் உழைப்பு அது? இந்திய மக்களின் இரத்தமும் வேர்வையும் சிந்தி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு மணிகளையும் உருவி அம்பானி, அகர்வால், அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை குளிப்பாட்டிக் கொண்டிருக்கும் இந்த பாசிச மோடி அரசு தான் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பெயரளவிலான உரிமைகளையும் பறிக்கத் துடிக்கிறது.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் உழைக்கும் மக்களின் நிலை மிகவும் துன்பதுயரங்கள் நிறைந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் கூட சாதி ஆதிக்க, நிலப்பிரபுக்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட பல்வேறு போராட்டங்கள் இந்திய உழைக்கும் வர்க்கத்தால் வீரதீரமிக்க முறையில் நடத்தப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட உரிமைகளும் முழுமையான வகையில் இல்லாமல் பெயரளவிற்கே செயல்படுத்தப்பட்டு வந்தன. அதிலும் காண்டிராக்ட் மயமாகிவரும் இன்றைய சூழலில் பெயரலவிலான சட்டங்கள் கூட பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு கைகொடுப்பதில்லை. ஆனால், தற்போது அத்தகைய பெயரளவிலான; தொழிலாளர்களின் உரிமைகளை எந்த வகையிலும் உத்தரவாதப்படுத்தாத; இந்த ஏட்டளவிலான தொழிலாளர் சட்டங்களைக் கூட திருத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது இந்த பாசிச கும்பல். விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், சிறு-குறு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் இதுவே தற்போதைய நிலையாகும்.

மேலும், இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இஸ்ரேல், இத்தாலி, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளில் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் நிதிமூலதன கும்பல்களின் நலனுக்காகவும் தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் பாசிச கும்பல்கள் தோன்றி வளர்ந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றன. மக்கள் நல சட்டங்கள் திருத்தப்படுவதும், உரிமைகள் வெட்டி சுருக்கப்படுவதும் போராடும் மக்களை போலீசு இராணுவத்தைக் கொண்டு ஒடுக்குவதும் என இப்பாசிச கும்பல்கள் ஒருபுறம் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்தி வருகின்றன.


படிக்க: தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சும் அமேசான் நிறுவனம்!


மற்றொருபுறம், இத்தகைய பாசிஸ்டுகளுக்கு எதிராகவும், அனைத்து மத, நிற, தேசிய இனத்தை சேர்ந்த மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும், மேலாதிக்க சக்திகளின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும் தங்களது வர்க்க உணர்வை வெளிப்படுத்தி அவர்களைப் பணியவைத்து வருகிறார்கள். இதுதான் பாசிஸ்டுகளை இன்றளவிலும் அச்சுறுத்தி வருகிறது, பணியவைத்து வருகிறது.

இவ்வாறு பல நாடுகளில் வளர்ந்துவரும் பாசிஸ்டுகளை வீழ்த்துவதுதான் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள முதன்மைக் கடமையாக இன்று இருக்கிறது. அந்த சர்வதேச ஒற்றுமையில் கரம் கோர்ப்பதன் மூலம்தான் நமது நாட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிச சக்திகளை நம்மால் வீழ்த்த முடியும். அதைவிடுத்து தேர்தலில் தோல்வியடையச் செய்தாலே இந்த பாசிச சக்திகளை வீழ்த்திவிடலாம் என்று கருதுவது எந்த வகையிலும் நகைப்புக்குரியதே அன்றி வேறில்லை.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிஸ்டுகளால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் அனைத்து தரப்பு மக்களையும் ஜனநாயாக சக்திகளையும் ஒன்றினைத்து அமைப்பாக்கி பாசிசத்திற்கெதிரான களப்போராட்டங்களை கட்டியமைப்பதும்; பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை நிறுவுவதும்தான் பாட்டாளிவர்க்கத்தின் முன்னிற்கும் இன்றைய வரலாற்று கடமையாகும். இதுவே, நமது மே நாள் சூளுரையாக இருக்கும்.

உலகம் முழுவதும் மேலோங்கி வரும் பாசிச சக்திகளை முறியடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்! சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை நீடூழி வாழ்க! – என முழங்குவோமாக.


குமார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க