கடந்த பத்தாண்டுகால பாசிச பேயாட்சியில் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் படுகுழிக்கு தள்ளிய பா.ஜ.க. கும்பல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் “ஆப்கி பார் 400 பார்” (இம்முறை 400-ஐ தாண்டும்), “பா.ஜ.க-விற்கு 370, என்.டி.ஏ-க்கு 400” போன்ற கோஷங்களை முன்வைத்து மிருகப் பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கப் போகிறது என்ற பிம்பத்தை தேர்தலுக்கு தொடங்குவதற்கு முன்னரே கட்டமைக்க தொடங்கியது. ஆனால், தற்போது இரண்டுகட்ட தேர்தலே நிறைவடைந்துள்ள நிலையில் பா.ஜ.க. கட்டமைத்துவந்த பிம்பம் சுக்குநூறாகி வருகிறது.
“அஞ்சி நடுங்கும் பா.ஜ.க. கும்பல்”, “150 தாண்டாது”, “பழிவாங்க காத்திருக்கும் அமைச்சர்கள், மோடிய கழட்டி விட்டுருவாங்க”,“மோடிக்கு தோல்வி பயம் வந்துடுச்சி, அவர் கண்ணுல அது தெரியுது” என மோடிக் கும்பலை நக்கலடித்துக் கொண்டிருக்கின்றன யூ-டியூப் சேனல்கள். தமிழ்நாட்டு ஊடகங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதுமுள்ள இந்தி, ஆங்கில ஊடகங்களும் சர்வதேச பத்திரிகைகளும் கூட மோடி கும்பல் நெருக்கடியில் உள்ளதை அம்பலப்படுத்தி செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
படிக்க : அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்த போலீசின் அடாவடி! | மக்கள் அதிகாரம்
ஏறக்குறைய, பாசிசக் கும்பல் தோல்வி முகத்தில் உள்ளது என்பதை அனைவருமே வெவ்வேறு வார்த்தைகளில் பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், பாசிசக் கும்பலின் இத்தோல்வி முகமானது நடந்துகொண்டிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் பா.ஜ.க-விற்கு பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் ஏற்படுத்தி வருகிறது.
ஆதிக்கச் சாதியினர் போராட்டம்
சரியும் பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளம்
2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்ததற்கு ஆதிக்க சாதியினரின் வாக்குகள் முக்கிய பங்காற்றின. அச்சமயத்தில் ஆதிக்கச் சாதிகளை சேர்ந்தோர் மகா-பஞ்சாயத்துகளைக் கூட்டி ஒட்டுமொத்த மக்களும் பா.ஜ.க-விற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ.க-வை வெற்றியடையச் செய்தனர். இதன் காரணமாக, 56 சதவிகித ஆதிக்க சாதியினரின் வாக்குகள் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணிக்கு விழுந்தது. இது 2009 நாடாளுமன்றத்தேர்தலுடன் ஒப்பிடும்போது 30 சதவிகிதம் அதிகமாகும். பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்திபேசும் மாநிலங்கள் இந்த வாக்கு சதவிகிதத்தில் பெரும்பகுதியை கொண்டிருந்தன. ஆனால், தற்போதைய 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ஜ.க. வெற்றிப்பெற காரணமாக இருந்த ஜாட், ராஜ்புத், மராத்தா உள்ளிட்ட ஆதிக்கச் சாதிகளை சேர்ந்த கணிசமானோர் பா.ஜ.க-விற்கு எதிராக திரும்பியுள்ளனர்.
பல ஆண்டுகளாக பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்துவந்த பணக்கார விவசாயிகளான ஜாட் சாதியினர், மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிரான “டெல்லி சலோ” போராட்டத்தில் பா.ஜ.க-வின் கோர முகத்தைக் கண்டுக்கொண்டனர். இப்போராட்டம் விவசாயிகளை ஜனநாயகப்படுத்தியதோடு ஜாட் சாதியில் கணிசமானோரை பா.ஜ.க-விற்கு எதிராக திருப்பியது. பா.ஜ.க-விற்கு எதிராக போராடும் மற்ற பிரிவினருடனும் விவசாயிகள் கைக்கோர்க்க ஆரம்பித்தனர்.
“ஹரியானாவின் சகோதரிகள்” என்று அழைக்கப்படும் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வல்லுறவு செய்த பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யுமாறு போராடிய வீராங்கனைகளை மோடி அரசு கொடூரமாக ஒடுக்கியது ஜாட் சாதியினரை ஆத்திரமூட்டியது. குறிப்பாக, மல்யுத்த வீராங்கனைகள் ஜாட் சாதியைச் சேர்ந்த€வர்கள் என்பதால் இப்போராட்டம் ஹரியானாவில் மட்டுமின்றி பிற மாநிலங்களில் வசிக்கும் ஜாட் சாதியினரிடமும் கடும் எதிர்ப்பை கிளப்பியது.
இந்நிலையில், பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷனின் மகனுக்கு பா.ஜ.க-வில் எம்.பி. சீட்டு கொடுக்கப்பட்டுள்ளதும் டெல்லி எல்லைகளில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளை மோடி அரசு மிருகத்தனமாக ஒடுக்கிவருவதும் ஜாட்களிடம் இன்னும் எதிர்ப்பை அதிகமாக்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த காலங்களில் ஜாட்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்றகட்சியாக திகழ்ந்த பா.ஜ.க., இத்தேர்தலில் ஜாட் அல்லாதோரின் வாக்குகளை குறிவைத்து தேர்தலை அணுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதேபோல், பா.ஜ.க-வின் அடித்தளமாக இருந்த மற்றொரு சாதியினரான ராஜ்புத் மக்கள் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பசுவளைய மாநிலங்களில் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் மாத இறுதியில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. பர்ஷோத்தம் ரூபாலா, ராஜ்புத் சாதியினரை இழிவுப்படுத்தும் விதமாக பேசியது ராஜ்புத் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட ராஜ்புத் சாதியினர் வேட்பாளராக நிற்கும் ரூபாலாவை திரும்ப பெறக்கோரி பா.ஜ.க-விற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களையும் மாநாடுகளையும் முன்னெடுத்தனர். இப்போராட்டத்தால் அஞ்சி நடுங்கிய பாசிசக் கும்பல், ராஜ்புத் மக்களை சமாதானம் செய்வதற்காக பர்ஷோத்தம் ரூபாலாவை மன்னிப்பு கேட்க வைப்பது, ராஜ்புத் சாதியைச் சேர்ந்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை வைத்து ராஜ்புத் மக்களிடம் சமாதானம் பேசுவது போன்ற முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை எதுவும் பலனளிக்கவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாக பெண்கள் முன்நின்று போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
படிக்க : எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!
மேலும், குஜராத் மட்டுமின்றி உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு மகாபஞ்சாயத்தை நடத்திய ராஜ்புத்கள் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை புறக்கணிக்கப் போவதாக தீர்மானம் நிறைவேற்றினர். “2013-ஆம் ஆண்டு நடைபெற்ற மகா பஞ்சாயத்து பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவியது. பின்னர் அவர்கள் எங்களை புறக்கணித்தனர். இங்கு எந்த வேலையும் இல்லை, எந்த திட்டங்களும் அமல்படுத்தப்படவில்லை. மக்கள் அக்னிவீர் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். இனி, இந்த நிலமே பா.ஜ.க-வின் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும்” என பாசிஸ்டுகளை கதிகலங்கச் செய்தனர்.
அதேபோல், ஒன்பது சதவிகித ராஜ்புத் மக்களை கொண்ட ராஜஸ்தானில் இப்போராட்டம் பா.ஜ.க-விற்கு தேர்தலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. மீது ஆத்திரத்தில் உள்ள ராஜ்புத்களில் கணிசமானோர் தேர்தலை புறக்கணித்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்குப்பதிவு விகிதம் பெரியளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக, 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 25 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க-விற்கு இம்முறை ராஜஸ்தான் பெரும் சவாலாக இருக்கும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ராஜ்புத் மக்களின் இப்போராட்டம் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. ஒருபுறம் ரூபாலாவை திரும்பபெறுமாறு ராஜ்புத் மக்கள் தேர்தல் சமயத்தில் நெருக்கடி கொண்டுக்கின்றனர். மற்றொருபுறம், படேல் சாதியைச் சேர்ந்த ரூபாலாவை திரும்ப பெற்றால் படேல் சாதி மக்களிடமும் ராஜ்புத் சாதி அல்லாத மக்களிடமும் எதிர்ப்பு கிளம்பும். இதனால் பா.ஜ.க. கும்பல் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறது.
அதேபோல், 33 சதவிகித மராத்தா சாதியினரைக் கொண்ட மகாராஷ்டிராவில் இடஒதுக்கீடுக்கோரி மராத்தா மக்கள் நடத்திய போராட்டம் இத்தேர்தலில் பா.ஜ.க-விற்கு பின்னடைவாக மாறியுள்ளது கடந்த காலங்களில் பெரும்பாலும் பா.ஜ.க-வை ஆதரித்துவந்த மராத்தா சாதியினர் பத்து சதவிகித இசஒதுக்கீடுக்கோரி கடந்தாண்டு இறுதியில் பிரம்மாண்டமான போராட்டங்களை முன்னெடுத்தனர். இப்போராட்டம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொளிக்கும் என்று அஞ்சிய பா.ஜ.க-வின் அடிமை ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த பிப்ரவரி மாதத்தில் மராத்தா மக்களுக்கு ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றியது.
ஆனால், இச்சட்டம் நீதிமன்றத்தின் முன் நிற்காது என்பதையும் மராத்தா மக்களின் கோவத்தை தணிக்க பா.ஜ.க. மேற்கொண்ட கண்துடைப்பு நாடகம் என்பதையும் மராத்தா மக்கள் உணர்ந்துகொண்டனர். மேலும், ஏக்நாத் ஷிண்டே வெறும் பொம்மைதான் என்றுணர்ந்துள்ள மக்கள் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்தான் தங்களை ஏமாற்றியதாக நம்புவதால் மக்களின் கோவம் நேரடியாக பா.ஜ.க-விற்கு எதிராகத் திரும்பியுள்ளது. இதன் காரணமாக, மராத்தா சாதியில் ஒரு பிரிவினர் தேர்தலை புறக்கணிக்கும் நிலையில் மற்றொரு பிரிவினர் பா.ஜ.க-விற்கு எதிராக வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.
பா.ஜ.க-வின் ‘கோட்டை’ என்று சொல்லப்பட்ட பசுவளைய மாநிலங்களில், பா.ஜ.க. ஆட்சிக்கு வர ஆதரவாக இருந்த ஆதிக்கச் சாதியினர் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பது பாசிசக் கும்பல் எதிர்ப்பார்க்காதப் பெரிய நெருக்கடியாகும். அது தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் தாக்கம் புரிந்து வருகிறது.
படிக்க : புதிய ஜனநாயகம் – மே 2024 | மின்னிதழ்
மேலும், ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்பு வெறுமனே வாக்குவங்கி சரிவு மட்டுமல்ல. பா.ஜ.க-வின் மக்கள் அடித்தளமே கொஞ்சம் கொஞ்சமாக சரியத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. சாதிவெறி, மதவெறியைத் தூண்டி மக்களிடையே பிளவை ஏற்படுத்தி தன்னுடைய அடித்தளமாக மாற்றிக்கொள்ளும் பா.ஜ.க-வின் உத்தி தற்போது பா.ஜ.க-விற்கே எதிராகத் திரும்பியுள்ளது.
மதவெறி போதையை கலைக்கும்
மக்கள் போராட்டங்கள்
கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிச மோடி அரசு பொதுத்துறைகள் நிறுவனங்களை கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்த்து விட்டு, அரசுத்துறை வேலைகள் அனைத்தையும் ஒப்பந்தமயமாக்ககி வருவதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளில் அரசு வேலைவாய்ப்புகள் பெரியளவில் குறைந்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நிலை இந்தியா முழுவதும் தாக்கம் செலுத்தினாலும் தனியார்த்துறை வேலைவாய்ப்புகள் உள்ள தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநிலங்களைக் காட்டிலும், அரசு வேலைகளை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள வடமாநிலங்களில் கோரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே வேலையின்மைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்னொருபுறம், கடந்த பத்தாண்டுகால பா.ஜ.க. இந்தியாவில் வறுமையும் ஏற்றத்தாழ்வும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதை பல ஆய்வறிக்கைகள் தரவுகளோடு நிரூபித்துள்ளன. ஆனால், இந்த கோரநிலையை உணர்ந்துகொள்ள முடியாத அளவிற்கு பெரும்பான்மை மக்களுக்கு மதவெறி போதை ஊட்டப்பட்டிருந்தது. ஆனால், மோடியின் இரண்டாவது ஆட்சி காலத்தில் இஸ்லாமியர்கள், விவசாயிகள், இளைஞர்கள் என பல பிரிவு மக்கள் பா.ஜ.க.வின் பாசிச திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தது. மக்களிடம் உள்ள மதவெறி போதையை கலைத்து மக்களை எதார்த்தத்தைக் காணச் செய்துள்ளது.
சான்றாக, கடந்த 2022-ஆம் ஆண்டு மோடி அரசு கொண்டுவந்த ராணுவத்தை கார்ப்ப்பரேட்மயமாக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் போர்குணமிக்க இளைஞர்களின் போராட்டம் வெடித்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட இத்திட்டத்திற்கு எதிரான இளைஞர்களின் எதிர்ப்பு இன்னமும் நீர்த்துப் போகாமல் அப்படியே உள்ளது,
அதேப்போல். இந்தாண்டு தொடக்கத்தில் போலீஸ் தேர்வு முறைகேடுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டம் மற்றொரு சான்றாகும். அம்மாநிலத்தில், வெறும் 67,000 போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கு 48 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் போட்டியிட்டனர். ஆனால், இத்தேர்வில் பல முறைகேடுகளும் வினாத்தாள் கசிவுகளும் நடந்தது அம்பலமானதையடுத்து, மறுத்தேர்வு நடத்த வேண்டுமென்று மாநிலம் முழுவதும் இளைஞர்கள் தெருக்களில் இறங்கி போராடினர். சாதி மற்றும் மதங்களைக் கடந்து பல ஆயிரம் இளைஞர்கள் பிரயாக்ராஜில் உள்ள உத்தரப்பிரதேச பொதுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தை நடத்தி பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். இளைஞர்களின் போராட்டத்தினால் பணிந்த யோகி ஆதித்யநாத் அரசு அத்தேர்வை ரத்து செய்தது.
இதேபோல், குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வேலைவாய்ப்பிற்காகவும் அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு எண்ணிக்கை குறைக்கப்படுவதற்கு எதிராகவும் இளைஞர்கள் போராட்டம் நடத்துவது தற்போது தொடர் கதையாகியுள்ளது. இதன்விளைவாக, மக்களிடையே பா.ஜ.க.வின் மதவெறி பிரச்சாரம் எடுபடாமல், வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் இந்தியாவின் முதன்மையான பிரச்சினையாக மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் களத்தில் எதிரொளித்த நெருக்கடி
மக்கள் போராட்டங்களால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிகளால் முதல் இரண்டு கட்ட தேர்தலில் பா.ஜ.க-விற்கு மிகப்பெரிய அடியை ஏற்படுத்தியது. முதல்கட்ட தேர்தல் முடிந்தவுடனேயே மோடியின் பேச்சில் பயம் தெரிவதாக பலர் சமூக ஊடகங்களில் பேசவும் எழுதத் தொடங்கினர்.
ஒன்றிரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என மோடி கும்பல் முயற்சித்துவந்த தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களின் வாக்குப்பதிவு நிலவரம் பா.ஜ.க-விற்கு ஏமாற்றமளித்ததோடு கர்நாடகாவும் இம்முறை கைக் கொடுக்காது என தகவல்கள் வெளியாகின.
வடக்கிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை, மணிப்பூரில் குக்கி இன மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்னின்று நடத்திய கலவரத்தின் காரணமாக குக்கி இன மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மேலும் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மெய்தி மக்களும் வாக்களிப்பதில் அக்கறை காட்டவில்லை. மேலும், நாகாலாந்தில் அங்குள்ள ஆயுதக் குழுக்களுடன் மோசமான அணுகுமுறையை மேற்கொண்டதாலும் கடுமையாக ஒடுக்கி வருவதாலும் கிட்டத்தட்ட நான்கு லட்சம் மக்கள் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ஆறு மாவட்டங்களில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை.
கடந்த தேர்தல்களில் காங்கிரசை விட ஒன்றிரண்டு சதவிகித வாக்குகள் மட்டுமே அதிகம் பெறுவதன் மூலம் கணிசமான தொகுதிகளில் வெற்றியை தக்கவைத்துள்ள பா.ஜ.க-விற்கு, இத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைவதானது மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.
இவ்வாறு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்கு விகிதம் குறைவது பா.ஜ.க-வை நேரடியாக பாதிக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. ஊழியர்கள் வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்களிக்க வலியுறுத்த வேண்டுமென்றும் மக்கள் வாக்களித்தனரா என்று சோதிக்குமாறும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.
மேலும், வாக்கு விகிதம் குறைவது மோடி பிராண்டுக்கு விழுந்த அடியாகும். எப்போது போல இத்தேர்தலிலும் மோடியே நட்சத்திர பிரச்சாரகராக முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் வாக்களிக்க வராததது மோடியின் பிராண்ட் போணியாகாததையேக் காட்டுகிறது.
மோடியின் வெறுப்பு பேச்சு
தோல்வி பயத்தின் வெளிப்பாடு
இத்தகைய கடுமையான நெருக்கடி காரணமாக எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட மோடி-அமித்ஷா கும்பல், கடைசி அஸ்திரமான மதவெறி பிரச்சாரத்தை கையிலெடுத்தது. எதிர்க்கட்சிகளுக்கு இந்து-விரோதி சாயம் பூசுவது, இஸ்லாமிய வெறுப்பு பேச்சு பேசுவது, போணியாகாத பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தூக்கியெறிந்துவிட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கொண்டு இஸ்லாமிய வெறுப்பு-பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என அப்பட்டமான இந்துமுனைவாக்க வேலையில் இறங்கியது. இதனை மோடியே முன்னின்று தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது, தோல்வி பயம் தலைக்கேறிய மோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை கூட பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்று பேசியது சர்வதேச அளவில் விவாதமானது. ஏன் ‘விஷ்வகுரு’ முதல்கட்ட தேர்தலுக்கு பிறகு தனது முகமூடி நழுவ அனுமதித்தார்? என பத்திரிகைகள் கட்டுரை எழுதின.
படிக்க : முடிவுறாப் பயணம்? | புலம்பெயர் தொழிலாளர்கள் | கவிதை
உண்மையில், குஜராத் படுகொலை குற்றவாளியான மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ். கும்பலும் ஆளும் வர்க்க கும்பலும் முகமூடிகளை அணிவித்து 2014 தேர்தலில் ‘வளர்ச்சி நாயகனாக’ முன்னிறுத்தியது. ஆனால், அடுக்கடுக்கான மக்கள் போராட்டங்களால் அந்த முகமூடி கிழித்தெறியப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தலில் தனது சுயரூபத்தை காட்ட வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டுள்ளார். ஆனால், இந்துமதவெறி ஊட்டப்பட்ட வாக்காளர்ப் பிரிவினர் மத்தியில் மோடியின் இந்துத்துவ பிரச்சாரம் தாக்கம் செலுத்தினாலும், போராட்டங்களால் விழிப்படைந்துள்ள பெரும்பான்மை மக்கள் முன்னர் போல் மோடியின் மதவெறி பேச்சுக்கு பலியாகப்போவதில்லை.
எனவே, இதற்கடுத்தடுத்த கட்டதேர்தலில் இந்துமதவெறி பிரச்சாரத்தை தொடரலாமா? கைவிட்டுவிடலாமா? எனப் புரியாமல் மோடி-அமித்ஷா கும்பல் தலையை பிய்த்துக்கொள்கிறது.
மோடிக்கும்பலை திக்குமுக்காட வைப்பது மக்கள் போராட்டங்களே
பாசிச பா.ஜ.க. கும்பலுக்கு இத்தேர்தலில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலும் ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்பு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வாக்குவிகிதம் குறைவது, மக்கள் வாழ்வாதார பிரச்சினைகளை கண்ணுற்றுள்ளது போன்றவையெல்லாம் மோடி-அமித்ஷா தோல்விமுகத்தில் இருப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ஆனால், இத்தோல்வி முகத்திற்கு, பா.ஜ.க. கட்சிக்குள் உள்ள நெருக்கடி, ஆளும் வர்க்க முரண்பாடு, இந்தியா கூட்டணியின் செயல்பாடுகள் போன்றவையே காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.
உண்மையில், களத்தில் நடந்த மக்கள் போராட்டங்களே பாசிசக் கும்பலை தோல்வி முகத்திற்கு தள்ளியது, பா.ஜ.க தற்போது தேர்தல் களத்தில் சந்தித்துவரும் நெருக்கடிகள் அனைத்திற்கும் அடிப்படையானது மக்கள் போராட்டங்களே என்பதை யாரும் பேசுவதில்லை.
கடந்த 2019-ஆம் ஆண்டு பா.ஜ.க. இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பிறகு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, ராமன் கோவில் தீர்ப்பு, சி.ஏ.ஏ. சட்டம் நிறைவேற்றம் என தன்னுடைய நிகழ்ச்சிநிரல்களை மூர்க்கமாக நடைமுறைப்படுத்த தொடங்கியது. இதற்கிடையே பா.ஜ.க-விற்கு எதிராக ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடந்துவந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு இறுதியில் சி.ஏ.ஏ-க்கு எதிராக இந்தியா முழுவதும் கிளர்ந்தெழுந்த இஸ்லாமிய மக்களின் போராட்டம் பாசிச கும்பலுக்கு தோல்வி முகத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றியது. அதனைத்தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு மூன்று வேளான் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் முன்னெடுத்த “டெல்லி சலோ” போராட்டம், அக்கும்பலை தோல்வி முகத்திற்கு அடித்து வீழ்த்தியது.
தற்போது வரை பாசிசக் கும்பலால் இந்த தோல்வி முகத்திலிருந்து மீள முடியவில்லை. அடுத்தடுத்து நிகழ்ச்சிநிரல்களை அமல்படுத்தி வந்தாலும் அதிகபட்சம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மக்கள் போராட்டங்கள் மேலெழுந்து பாசிசக் கும்பலை திக்குமுக்காடச் செய்கின்றன. குறிப்பாக, மணிப்பூரில் தனது காவி-கார்ப்பரேட் நலனிற்காக குக்கி பழங்குடியின மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் பா.ஜ.க கும்பலுக்கு எதிராகவே திரும்ப ஆரம்பித்தது. குக்கி இன பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பா.ஜ.க-விற்கு எதிராக குரல் எழுப்ப வைத்தது.
2023-ஆம் ஆண்டு இறுதியில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு, ராமர் கோவில் திறப்பு, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றம், சி.ஏ.ஏ. அமல் என அடுத்தடுத்த நிகழ்ச்சிநிரல்களை மோடி-அமித்ஷா கும்பல் அமல்படுத்தி வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் புகைக்குப்பி வீசிய சம்பவம், மூன்று தண்டனைத் திருத்தச்சட்ட அம்சங்களுக்கு எதிராக இந்திபேசும் மாநிலங்களில் நடந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் போன்றவை பா.ஜ.க-வை பயமுறுத்தி வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டமானது பாசிசக் கும்பலின் நெருக்கடியை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இந்த மக்கள் போராட்டங்களின் தொடர்ச்சியாகதான் இன்று தேர்தல்களத்தில் பா.ஜ.க கும்பல் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
ஆனால், பா.ஜ.க தேர்தல் களத்தில் சந்திக்கும் நெருக்கடிகளை பார்த்து நம்பிக்கையடைந்து பேசும் எதிர்க்கட்சிகளுக்கும் மற்றவர்களுக்கும் இத்தனை ஆண்டுகளாக நடந்த மக்கள் போராட்டங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. சிலர், “ஒருவேளை தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிப்பெற்றுவிட்டால் அமைதிவழி மக்கள் போராட்டங்களை கட்டியமைக்கலாம்” என்கிறார்கள். இது இவர்கள், பா.ஜ.க.-வை வீழ்த்தி ஆட்சியை பிடிப்பதற்கு மக்கள் போராட்டங்களை எப்படி பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது.
படிக்க : குறையும் வாக்குப்பதிவு: பா.ஜ.க – விற்கு மட்டும்தான் நெருக்கடியா?
மாறாக எதிர்க்கட்சிகளுக்கே மக்கள் போராட்டங்கள்தான் பல கட்டங்களில் நம்பிக்கையளித்துள்ளது. சான்றாக, பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம்தான் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் நகர்வை ஏற்படுத்தியது. தற்போது தேர்தலில் கூட பா.ஜ.க. கும்பலுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், பா.ஜ.க. எம்.பி-க்களின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி மக்கள் நிராகரித்தாலும் மாற்று கொள்கை வைத்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்க காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தயாராக இல்லை. பா.ஜ.க. எதிர்ப்பு மற்றும் கவர்ச்சிவாதத்தை மட்டுமே நம்பி எதிர்க்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த கையாலாகத்தனம் மக்கள் போராட்டங்களால் நெருக்கடியில் இருக்கும் பா.ஜ.க-விற்குதான் ஆதரவாக போய் முடியும்.
எனவே, பா.ஜ.க கும்பலை அச்சுறுத்தும் ஒரே ஆயுதமாக இருக்கும் மக்கள் போராட்டத்தை கட்டியெழுப்புவது மட்டுமே பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கும், பாசிச கும்பலுக்கு முறியடிப்பதற்கான ஒரே வழி! ஆகவே, பா.ஜ.க-விற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வளர்த்தெடுத்து, பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை நோக்கி முன்னேறுவோம்!
துலிபா
புதிய ஜனநாயகம்
மே 2024
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube