உத்தராகண்ட்: தொடர் காட்டுத்தீயை கண்டுகொள்ளாத பாஜக அரசு

தேர்தல் ஆணையம் மற்றும்  தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் உத்தரவுகளையும் மீறி வன ஊழியர்கள் மற்றும் வாகனங்களை தேர்தல் பணிக்கு மாநில அரசு அனுப்பி உள்ளது. 13 மாவட்டங்களில் இருந்து வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

த்தராகண்ட் மாநிலத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காட்டுத்தீ பரவிக் கொண்டிருக்கிறது. 71 சதவிகித நிலப்பரப்பு காடுகளைக் கொண்ட உத்தராகண்டில் காட்டுத் தீ பரவலின் காரணமாக இதுவரை 1500 ஹெக்டேர்களுக்கு அதிகமான காட்டு நிலம் எரிந்து நாசமாகி உள்ளது. இந்தக் காட்டுத்தீயினால் சுற்றுச்சூழல், உணவு சங்கிலி, பொருளாதாரம் என பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

உத்தராகண்டில் ஏற்பட்ட காட்டுத் தீ சம்பவங்களுக்கு முக்கியமாக மனித நடவடிக்கைகளே காரணம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உள்ளூர்வாசிகள் சில சமயங்களில் விவசாயம் அல்லது கால்நடை மேய்ச்சலுக்கான பகுதிகளை அழிக்க புல்வெளிகளை பற்றவைப்பதாகவும், கவனக்குறைவாக பெரிய காட்டுத்தீயை தூண்டுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், குறைவான பருவமழை காரணமாக மண்ணின் ஈரப்பத இழப்பு மற்றும் காய்ந்த இலைகள், பைன் மர இலைகள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்கள் காடுகளில் இருப்பதும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உத்தராகண்டில் பிப்ரவரி 15 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டம் ” காட்டுத்தீ” பருவமாக கருதப்படுகிறது. மேலும் அதை கட்டுப்படுத்துவதற்கான தயாரிப்புகள் ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறுவது தான். இருந்த போதிலும் இந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவியதன் காரணமாக இதுவரை ஆறு பேர் உயிரிழந்து உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் பரவிய காட்டுத்தீயால் ஏற்பட்ட புகையினால் அங்கிருந்த பழங்குடி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பழங்குடியினர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேற தொடங்கியுள்ளனர். தீயை கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகாப்டரில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. பல இடங்களில் மீண்டும் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

தேர்தல் ஆணையம் மற்றும்  தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் உத்தரவுகளையும் மீறி வன ஊழியர்கள் மற்றும் வாகனங்களை தேர்தல் பணிக்கு மாநில அரசு அனுப்பி உள்ளது. 13 மாவட்டங்களில் இருந்து வன ஊழியர்கள் தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நைனிடால், அல்மோரா, பவுரி, ருத்ரபிரயாக் மற்றும் உத்தர்காஷி ஆகிய மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீயை தடுப்பதில் மாநிலத்தின் அக்கறையில்லாத அணுகுமுறைக்கு பதிலளிக்க, மே 17 ஆம் தேதி உத்தராகண்ட் தலைமைச் செயலர் நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


படிக்க: சிலியில் பேரழிவை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீ | புகைப்படக் கட்டுரை


நீதிபதிகள் பி.ஆர்.கவாய், எஸ்.வி.என்.பாட்டி, சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் வனத்துறைக்கு விலக்கு அளித்தும் குறித்தும், வனத்துறை அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியது ஏன் என்றும் கேட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்த அம்மாநில அதிகாரிகள் முதல் கட்டமாக தேர்தல் பணியில் சில காலம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டதாகவும், தற்போது அது முடிந்துவிட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். தீ விபத்துகள் நடப்பதை கருத்தில் கொண்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதுவரை உத்தராகண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத உத்தராகண்ட் மாநில அரசு வனத்துறையினரை தேர்தல் பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிக்கும் தீ விபத்துக்கும் சம்பந்தமில்லை என்று கூறியுள்ளார் உத்தராகண்டின் முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி.

இதுவரை 1500 ஹெக்டருக்குமேல் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த பழங்குடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரை ஐந்து பேர் காட்டுத் தீயினால் உயிரிழந்துள்ளனர். இதைப் பற்றி எல்லாம் அக்கறை கொள்ளாத உத்தராகண்ட் அரசு ரோடு இல்லாத ஊருக்கு கழுதையின் மேல் ஈ.வி.எம் மிஷினை ஏற்றிக்கொண்டு வாக்குகளை சேகரிக்க வனத்துறையினரை தேர்தல் பணிக்கு ஈடுபடுத்தியுள்ளது.

காட்டுத்தீ பருவம் என்று தெரிந்தும் தேர்தல் பணிக்கு வனத்துறையினரை ஈடுபடுத்தியது மட்டுமில்லாமல் தீ விபத்துக்கு காரணம் மனித நடவடிக்கைகளே என்று பழங்குடியினர் மீது பழியையும் போட்டுள்ளது. பி.ஜே.பியின் ’இரட்டை எஞ்சின்’ அரசாங்கத்திற்கும் சரி தேர்தல் ஆணையத்திற்கும் சரி, மக்களைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை இல்லை என்பதையே இவர்களின் நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க