கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.05.2024) அன்று ரஃபாவின் மத்தியப் பகுதியின் வடமேற்கில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள தல் அல்-சுல்தான் (Tal as-Sultan) எனும் இடத்தில் அமைந்துள்ள ஐ.நா. முகாமுக்கு அருகே இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த கூடாரங்களின் மீது பாசிச இஸ்ரேல் அரசானது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்த தாக்குதலில் சுமார் 45 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் தீவிர தீக்காயங்கள், எலும்பு முறிவு, குண்டடி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாசிச இஸ்ரேல் அரசு நடத்திய இந்த தாக்குதலின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த காணொளியில் ஒன்றும் அறியா இளம் குழந்தைகள் தலையில்லா முண்டங்களாகக் கிடக்கும் கொடூரமான காட்சிகள் நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.
தலையில்லா முண்டங்களாகக் கிடக்கும் குழந்தைகள் யாருடைய குழந்தைகள் என்று தெரியாமல் அடையாளம் காண முடியாமல் பாலஸ்தீன தாய்மார்களும் தந்தைமார்களும் கதறுவதை நாம் அனைவரும் பார்க்கிறோம். தீயினால் எறிந்த பொம்மைகளை தேடும் குழந்தைகள் போல, பாலஸ்தீன தாய்மார்களும் தந்தைமார்களும் தங்களுடைய குழந்தைகளின் சாம்பல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
படிக்க: காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
இந்த தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் தான் அதிக அளவில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் இந்த கொடூரமான தாக்குதலைக் கண்டித்து, பல்வேறு நாடுகளும், பல்வேறு தரப்பட்ட மக்களும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இஸ்ரேல் அரசைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், இந்த தாக்குதலை “போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரச ஆதரவு பயங்கரவாதம்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், “இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சர்வதேச குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்படியாக பலரும் இஸ்ரேல் அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். நாமும் அதற்கான எதிர்ப்புக் குரல்களை உயர்த்த வேண்டி இருக்கிறது. ஏனென்றால் மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.
நாம் அமைதியாக இருந்தால் இந்த இனப்படுகொலைகள் இன்னும் கொடூரமான முறையில் நடத்தப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோமாக!
இன்பா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube