Will never forget Palestine

டந்த சில நாட்களாக
அச்சமும் பதட்டமும்
மாறி மாறி
வந்தென்னை வாட்டுகின்றன.

காலை எழுந்த உடனே
பிணங்களும் குண்டுகளும்
இடிபாடுகளில் இரையைத் தேடும் அவலமும்
கண்ணில் படக் கூடாதென நினைக்கிறேன்.

செய்திகளைப் பார்க்க பிடிக்கவில்லை
அழுத்தி அழுத்தி
ரிமோட் பட்டன்கள் பழுதாகிவிடும் போல;
ஆனாலும் இறுதியில்
செய்திச்சேனலையே பார்க்கிறேன்.

பார்ப்போரிடம் எல்லாம்
எரிந்து விழுந்து கொண்டிருக்கிறேன்.
அவநம்பிக்கை என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொள்கிறது.

இனி ஏதும் செய்ய முடியாமல்
போய்விடுமோ என்ற எண்ணம் என்னை பிடித்தாட்டுகிறது.

2009 மே மாதத்திலும்
இப்படித்தான்..

பல்லாயிரக்கணக்கானோர் கொத்து குண்டுகளால் கொலை செய்யப்பட்ட போதும்
துடித்துக் கொண்டு இருந்தேன்;
பேச்சிலும் எழுத்திலும் செயல்களிலும் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தேன்.

15 ஆண்டுகள் போய்விட்டன.
உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து போய் விட்டேன்.

எத்தனை போராட்டங்கள் உலகம் முழுவதும்
இத்தனை கோடிபேரின் எதிர்ப்புகளை மீறி
ரஃபாவின் மீது தினம் குண்டு மழை..

ஏன் பதட்டம் கொள்கிறாய் என்றபடி
காசாவின் இடிந்து போன சுவர்கள் சொல்கின்றன
Will never forget Palestine..

ஒருபோதும் தளராதே என்றபடி
குடும்பத்தை இழந்த சிறுவன் சொல்கிறான்
Will never forget Palestine..

அச்சம் கொள்ள ஏதுமில்லை என்றபடி  முதியவர்கள் சொல்கிறார்கள்
Will never forget Palestine..

நம்பிக்கையுடன்
என்னைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்கள்
ரஃபாக்களின் முள்ளிவாய்க்கால்களின் வழியாக..

உரத்து  முழங்குகிறார்கள் என்னையும் முழங்கச் செய்கிறார்கள்
இந்த உலகம் இருக்கும் வரை
ஒரு செல் உயிரி இருக்கும் வரை
விடுதலை உணர்வு
ஒருபோதும் மரிப்பதில்லை !


மருது

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க