கடந்த ஜூன் 6 ஆம் தேதி மத்திய காசாவில் உள்ள நூசிராத் (Nuseirat) நகரில் ஐநா ஏஜென்சியுடன் (UNRWA) இணைக்கப்பட்ட அல்-சர்டி (al-Sardi school) என்ற பள்ளியில் தஞ்சம் அடைந்த பாலஸ்தீன மக்கள் மீது எந்தவொரு முன் அறிவிப்புமின்றி இஸ்ரேலின் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை பற்றி எதுவும் அறியாத 14 குழந்தைகள் 9 பெண்கள் உட்பட பாலஸ்தீனர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். 74 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
“இறந்தவர்களும், காயமடைந்தவர்களும் மருத்துவமனை முழுவதும் நிறைந்துள்ளனர். மருத்துவமனையில் எங்கே சென்றாலும் ரத்த வாடை வீசிக்கொண்டே இருகிறது. இருக்கும் உபகரணங்களால் அவர்களது காயத்தை குணப்படுத்த முடியாத அளவிற்கு கோரமான நிலையில் இருக்கிறார்கள். இறந்தவர்களின் உடலை கருப்பு பைகளில் வைத்து மூடிக் கொண்டே இருக்கிறோம். வலியில் கதறும் குழந்தைகள் வலியை மறந்தாலும், சிறிது நேரத்திலேயே தன் பெற்றோர்கள் எங்கே என்று கேட்டு அழத் தொடங்கி விடுகின்றனர்” என்று பாலஸ்தீனத்தின் மருத்துவர் ஒருவர் அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இதைப் போன்றதொரு படுகொலையை நடத்துவது இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதல்ல. பல நாடுகள் கண்டனம் தெரிவித்தும் ஐ.நா எச்சரித்தும் தன் தாக்குதலை சிறிதும் குறைத்துக் கொள்ளாத இஸ்ரேல், நிலம் – வளம் ஆக்கிரமிப்புக்காக பாலஸ்தீன மக்கள் மீது இனவெறி தாக்குதலை ஈவு இரக்கமின்றி நடத்தி நரவேட்டையாடி வருகிறது. இது மட்டுமன்றி, அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து தன் கபடதாரி ஆட்டத்தை கச்சிதமாக ஆடி வருகிறது.
படிக்க: பாலஸ்தீன விடுதலைப் போரில், வெல்வது நிச்சயம் நாங்களே! | கவிதை
அல்-சர்டி பள்ளியில் போடப்பட்ட குண்டுகளின் கழிவுகளைக் கொண்டு அவை அமெரிக்காவில் உள்ள ஹனிவெல் என்ற கூட்டு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தப் போர்க்காலங்களில் அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் ஆயுதங்களை அதிகளவு வாங்கி வருகிறது. அது மட்டுமன்றி இந்தியாவிடமும் ஆயுதங்களை வாங்கி உள்ளது. முக்கியமாக முனிசன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமும் அதானி நிறுவனத்திடமும் இஸ்ரேல் ஆயுதங்களை வாங்கி உள்ளது.
ஏதோ ஒரு கண் துடைப்புக்கு இஸ்ரேல் இனப்படுகொலையை நிறுத்த வேண்டும் என்று கூறும் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள், ஹமாசை காட்டி அதே படுகொலையை தவிர்க்க முடியாத சேதம் என்று நியாயப்படுத்தியும் வருகின்றன. இது ஹமாசின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் தாக்குதல் என்று கூறிவரும் ஊடகங்களின் மூலம் பொய் பிரச்சாரத்தை பரப்புகின்றன. எந்த விதத்திலும் பாலஸ்தீனர்களுக்கு ஒரு சிறு உதவி கூட கிடைக்கக்கூடாது என்பதற்காக எல்லையிலே உணவுகளை நிறுத்தி வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ரஃபா பகுதியில் முகாம் என்ற திறந்த வெளி சிறைச்சாலையின் மீது வான்வழி தாக்குதல் நடத்தி தஞ்சம் அடைந்த பாலஸ்தீனர்களின் மீது குண்டு மழையை பொழிந்து வருகிறது இஸ்ரேல் அரசு.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube