பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்விடங்களையும் அழித்து விமானம் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராடிவரும் கிராம மக்கள், தற்போது தமிழ்நாட்டைவிட்டு வெளியேறி ஆந்திராவில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஒன்றிய-மாநில அரசின் இந்த நாசகர திட்டத்திற்கு எதிராக சுமார் இரண்டு ஆண்டுகளாக மக்கள் போராடிவரும் நிலையில், தற்போதுவரை தி.மு.க. அரசு போராடும் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில், வருகின்ற ஜூன் 24-ஆம் தேதியுடன் பரந்தூர் மக்களின் போராட்டம் 700-வது நாளை எட்டுகிறது. அத்தேதிக்கு முன்னர் தங்களுக்கான தீர்வு கிடைக்காவிட்டால் வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுகப் போவதாகவும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களும் ஆந்திராவிற்கு இடம்பெயர இருப்பதாகவும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இதற்காக, சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க பரந்தூர் போராட்டக் குழு நேரம் கேட்டுள்ளது. அதனடிப்படையில், போராட்டத்தின் 700-வது நாளான ஜூன் 24 அன்று ஏகனாபுரம் அம்பேத்கர் சிலையில் இருந்து போராட்டக் குழு ஆந்திராவிற்கு புறப்படுகிறது. இவர்களை வழியனுப்பி வைக்க 13 கிராம மக்களும் அம்பேத்கர் சிலையிடம் கூடுமாறு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவின் தலைவர் ப.ரவிச்சந்திரன், ஜி.சுப்பிரமணியன் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய பரந்தூர் கிராம மக்கள், தங்களது கோரிக்கைகளை ஏற்காத, செவி கொடுத்து கேட்காத, தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவது பெருமைக்குரியதே என தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் போராட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ஜூன் 24 அன்று ஆந்திர மாநிலத்தை நோக்கிய தங்களது கண்ணீர் பயணம் தொடங்குகிறது என வேதனை தெரிவித்துள்ளார். இந்த செய்தி ஊடகங்களில் பரவி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படிக்க: தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள பரந்தூர் மக்கள்!
பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம மக்கள் ஆந்திராவிற்கு குடிபெயர்வதாக அறிவித்துள்ளது ஏதோ திடீரென்று நடந்ததல்ல. 13 கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையையும் ஒட்டுமொத்தமாக அழிக்கும் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சொல்லபோனால், தற்போதைய அறிவிப்பே போராட்டத்தின் 700-வது நாளை முன்னிட்டே வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தி.மு.க. அரசை தங்களது கோரிக்கையை ஏற்க வைப்பதற்காகவும் கடைசியாக நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலையும் புறக்கணித்தனர்.
இவ்வாறு வெவ்வேறு வடிவங்களில் பரந்தூர் மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டிய வண்ணமே உள்ளனர். ஆனால், தற்போதுவரை மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க தி.மு.க. தயாராக இல்லை. மாறாக, போராடும் மக்கள் மீது குண்டர் சட்டம் போடுவது; பரந்தூர் மக்களின் போராட்டத்தை ஆதரிக்கும் ஜனநாயக சக்திகள், அரசியல் இயக்கங்களை கிராமத்திற்குள் வரவிடாமல் போலீசை கொண்டு அடக்குமுறை செலுத்துவது என போராட்டத்தை ஒடுக்கும் வேலையைத்தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு செய்து வருகிறது.
மேலும், மக்களின் போராட்டம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள எடையார்பாக்கம் கிராமத்தில் மேலும் 147.11 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அனுமதி ஆணையை தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பரந்தூர் அருகே உள்ள வளத்தூர், தண்டலூர், சிங்கிலிபாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம், திராவிட மாடல் அரசு, மக்களுக்கான ஆட்சி என்று சொல்லிக்கொண்டே, தி.மு.க. அப்பட்டமான கார்ப்பரேட் மாடல் அரசாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதையே தோலுரித்துக் காட்டுகிறது. ஒருபுறம் பாசிச பா.ஜ.க-வை விமர்சித்துக்கொண்டே, கட்டற்ற கார்ப்பரேட் சேவை புரிந்து வருகிறது. அந்த கார்ப்பரேட் சேவைக்காக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவந்த பரந்தூர் கிராம மக்களை சொந்த கிராமத்திலிருந்தே அடித்து விரட்டி அகதிகளாக்க எத்தனிக்கிறது, தி.மு.க.
எனவே போராடிக்கொண்டிருக்கும் பரந்தூர் மக்களின் நியாயமான கோரிக்கைக்காக பலதரப்பட்ட மக்களும் மாணவர்களும் ஜனநாயக சக்திகளும் இணைந்து ஒன்றுபட்ட போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அவர்களுடன் தோளோடு தோள் நின்று நம்பிக்கையளித்து பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முறியடிக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube