தேர்தல் புறக்கணிப்பை அறிவித்துள்ள பரந்தூர் மக்கள்!

”விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை எங்கே மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்.”

0

ரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் 600 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மார்ச் 16 அன்று 600-ஆவது நாள் போராட்டம் ஒப்பாரிப் போராட்டமாக நடந்து முடிந்தது. அரசால் இத்திட்டம் கைவிடப்படாத நிலையில், வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

பரந்தூர் உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மு.க. ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 2, 2022 அன்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம்.


படிக்க: பரந்தூர்: நிலம் கையகப்படுத்த ஒப்புதல்! திராவிட மாடல் என்பதும் கார்ப்பரேட் மாடலே!


இத்திட்டம் அறிவிக்கப்பட்டது முதலே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றனர். இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இப்போராட்டம் ஊடக வெளிச்சம் இன்றி 600 நாட்களைக் கடந்துவிட்டது.

இந்நிலையில் அரசின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு, மார்ச் 16 அன்று 600-ஆவது நாள் போராட்டத்தை, ஒப்பாரிப் போராட்டமாக நடத்தினர். போராட்ட நாளன்று, பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் போலீசு குவிக்கப்பட்டது. அன்று மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டம் நடக்கும் அனைத்து நாட்களிலும் இப்பகுதி முழுமையாக போலீசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. மேலும் மக்கள் ஒரே இடத்தில் கூடி போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அந்தந்த கிராமங்களிலேயே போராட்டம் நடத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

மக்களின் போராட்டங்களை கண்டுகொள்ளாத அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது.

ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி வருவதற்கு காரணம், 908 ஏக்கர் பரப்பளவும் 2,400 பேர் மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், இத்திட்டத்திற்காக முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.

இவ்வளவு நாட்களாகப் போராடியும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை. அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் என்றாலும், அது தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு, பரந்தூர் பக்கமே வராதது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக ஏகனாபுரம், நெல்வாய் கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.


படிக்க: பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு


பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் செயலாளர் சுப்பிரமணியன் “மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை இங்குள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சி பேதமின்றி சேர்ந்து போராடுகிறோம். எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை எப்போதாவது குரல் கொடுப்பார். போராடத்திற்கு வரமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு இந்தப் பகுதிக்கு வந்ததே கிடையாது. ஓட்டுக் கேட்கும்போது, நான் எம்.பியானால் இந்தத் திட்டம் வராது என்று வாக்குறுதியளித்தார். அப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்தான். இதுவரை அவர் ஒரு அறிக்கைகூட விடவில்லை. மக்களைச் சந்திக்கவும் இல்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூட வரவில்லை.

இந்த முறை நாங்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிக்கப் போகிறோம். விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை எங்கே மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், நிலவுகின்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பை ஒரு போராட்ட வடிவமாகக் கையிலெடுத்துள்ளனர்.

செய்தி ஆதாரம்: பிபிசி தமிழ்


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க