கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள்: நெஞ்சைப் பிளக்கும் மரண ஓலங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது அனைவரும் அறிந்ததே. போலீசு இலஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச் சாராய விற்பனை கரை புரண்டு ஓட அனுமதித்து வந்தது என்பதே உண்மை.

0

ள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி , விழுப்புரம் மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20/06/2024) மாலை வரை 40 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கள்ளக்குறிச்சியை அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்ததாகக் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் நேற்று (19/06/2024) உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை (17/06/2024) கள்ளச்சாராயம் அருந்திய அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

நேற்று (19/06/2024) நண்பகல் 12 மணி முதல் கருணாபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, மது அருந்திய பலரும் அதிக வயிற்றுப்போக்கு, கை கால் மரத்துப் போதல் போன்ற பிரச்சனைகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர தொடங்கினர். அவர்களில் அதிக பாதிப்பு உள்ளவர்கள் சேலம், பாண்டிச்சேரி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்; தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!


கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் அவரது தம்பி தாமோதரன் ஆகிய இருவரை போலீசு கைது செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சமய்சிங் மீனா உள்ளிட்ட சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் மற்றும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு தலா ₹50 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.

திமுக அரசு மேற்கொண்டுள்ள மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் வெறும் கண்துடைப்பு நாடகமே. இந்த சம்பவம் பெரும் பேசு பொருளாக மாறிவிட்டதால், தன்னை யோக்கியவானாகக் காட்டிக் கொள்ள இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது திமுக அரசு.


படிக்க: மூடு டாஸ்மாக்கை! கள்ளச்சாராய பலிகள் – திமுக அரசே முதல் குற்றவாளி! || தோழர் வெற்றிவேல் செழியன்


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் தொடர்ந்து கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவது அனைவரும் அறிந்ததே. போலீசு இலஞ்சம் வாங்கிக்கொண்டு கள்ளச் சாராய விற்பனை கரை புரண்டு ஓட அனுமதித்து வந்தது என்பதே உண்மை. அவ்வப்போது மதுவிலக்கு சோதனை என்ற பெயரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராயத்தைக் கண்டுபிடித்து அழிப்பதாக நாடகத்தை நடத்தி வந்தது போலீசு.

கருணாபுரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இப்பகுதி தொழிலாளர்கள் பலர் வேலை செய்துவிட்டு, உடல் வலியைப் போக்க மது அருந்துவது வழக்கம். கள்ளச் சாராயம் விலை மலிவு என்பதால் ஏழை கூலித் தொழிலாளர்கள் அதை வாங்கி அருந்தியுள்ளனர்.

எனவே, கள்ளச் சாராயத்தை அனுமதித்த போலீசும், கள்ளச் சாராயம் விற்கப்படுவதே தனக்குத் தெரியாதது போல நாடகமாடும் திமுக அரசும் தான் இந்தக் கள்ளச் சாராயக் கொலைகளில் முதன்மைக் குற்றவாளிகள்.


பொம்மி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க