கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்;
தமிழ்நாடு அரசே முதல் குற்றவாளி!
உயிர்ப்பலிகளுக்கு காரணமான மதுவிலக்குத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட குற்றவாளிகள் அனைவரையும்
உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்!
20.06.2024
கண்டன அறிக்கை
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த பலருக்கும் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அதில் தற்போது வரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 90க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்னும் எத்தனை பேர் இறந்து போவார்களோ என்ற அச்சம் நம்மை பிடித்து ஆட்டுகிறது.
விஷச்சாராய உயிர்ப்பலிகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்தும் மாவட்டக் கண்காணிப்பாளர், டிஎஸ்பி உள்ளிட்ட பலரை பணியிடை நீக்கமும் செய்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
மதுவிலக்கு துறை அமைச்சர் முதல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளே இந்த படுகொலைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதுடன் அவர்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து அந்தப் பணத்தையே உதவித் தொகையாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம், போதை மருந்துகளும் ஆறாக ஓடிக்கொண்டு தான் இருக்கின்றன. இதெல்லாம் தமிழ்நாடு போலீசுக்கும் அரசுக்கும் தெரியாதா?
காவல் நிலையம், நீதி மன்றத்தின் அருகிலேயே இந்த விற்பனை நடைபெற்று இருக்கிறது. போலீசும் உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கு பதில் கூற வேண்டியது முதலமைச்சரின் பொறுப்பு.
உயிர்ப்பலிகள் நடந்தவுடன் அதை மூடி மறைப்பதற்கு இடமாற்றமும் பணியிடை நீக்கமும் தீர்வா என்ன?
கள்ளச்சாராயம், போதை பொருட்கள், டாஸ்மாக் கள்ளச் சந்தை விற்பனை ஆகியவை அரசின் ஒத்துழைப்போடுதான் நடைபெற்று வருகின்றன.
மக்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்காகவும் அரசியல் பிரச்சனைகளுக்காகவும் போராடுவோர் மீது கடும் அடக்கு முறையை ஏவும் தமிழ்நாடு போலீசு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்ற அடிப்படை ஜனநாயாக உரிமை கூட நிறைவேற்ற விடாமல் தடுக்கும் தமிழ்நாடு போலீசு, மக்களுக்காக போராடுவோர் பின்னே சென்று அவர்களுக்கு வீடு கொடுக்க விடாமலும் வேலை செய்யும் இடங்களில் மிரட்டியும் தன்னுடைய சேவையை செய்யும் இந்த தமிழ்நாடு போலீசுக்குத் தெரியாமல் தான் விசச்சாராய விற்பனை நடந்திருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா என்ன?
ஆக, கள்ளக்குறிச்சி விசச்சாராய விற்பனை – உயிர்ப் பலியில் திமுக அரசே முதல் குற்றவாளி. அதை மூடி மறைக்கும் நாடகங்களை நிறுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் மற்றும் போதை விற்பனையில் தொடர்புடைய அனைத்து போலீஸ் அதிகாரிகளும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube