கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால், 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இது ஒரு படுகொலையாகும். இந்தக் கொடூர நிகழ்விற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், கள்ளச்சாராய கிரிமினல்களின் கூட்டாளிகளாக செயல்பட்ட உள்ளூர் போலீசு, மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், இத்துறையின் அமைச்சர் ஆகிய அனைவரையும் கொலைக்குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை மாவட்ட கிளையின் சார்பாக 26.06.2024 அன்று மாலை 4:30 மணியளவில் ஓச்சேரி- பனப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மக்கள் அதிகாரம் தோழர் திலகவதி மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர் சுந்தர் ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் சரவணன் அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். அவர் தனது தலைமை உரையில், “கள்ளச்சாராய உயிர் பலி என்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காணம் பகுதியில் 26 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானார்கள். அதிலிருந்து இந்த அரசு எந்த படிப்பினையையும் எடுக்கவில்லை. இதற்கு முன் 2008 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயத்தால் பலியானார்கள். இப்படியாக, “கள்ளச்சாராய சாவுகள்” என்பது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இதை ஒழிப்பதற்கான எந்த ஒரு திட்டமும் இந்த அரசிடம் இல்லை. இந்த அரசால் அதை ஒழிக்கவும் முடியாது. கள்ளக்குறிச்சி சம்பவம் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது!
கள்ளச்சாராயத்தை முழுமையாக ஒழிக்க வேண்டுமென்றால், 2015-இல் மக்கள் அதிகாரம் சார்பாக “மூடு டாஸ்மாக்கை” இயக்கத்தில், “மக்களே தங்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்” என்று முன்வைத்தோமே அதுபோல செயல்பட வேண்டும். நமது பிரச்சாரம், போராட்டங்களின் விளைவாக தமிழ்நாடு முழுவதும் மக்களே ஆங்காங்கே உழைக்கும் மக்களின் வாழ்வை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை அடித்து உடைத்து மூடினார்கள். அதுபோல கிராமம்தோறும் குழுக்கள் அமைத்து ஒவ்வொரு ஊரிலும் கள்ளச்சாராய கும்பல்களைக் களையெடுக்கும் வேலையை நாம் செய்ய வேண்டும்” என்று பேசினார்.
அடுத்ததாக, கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிர் பலி என்பது இந்த அரசினுடைய தோல்வியைக் காட்டுகிறது. கள்ளச்சாராயம் அருந்தி பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்ந்தவர்களுக்கு வாந்தி, பேதி அறிகுறி இருக்கும்போதே அந்த மாவட்டத்தின் கலெக்டர் “இது சாதாரண நிகழ்வுதான்; கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டது அல்ல” என்று செய்தி கொடுத்தார். அதன் பிறகுதான் அதில் இறந்தவர்கள் வீட்டுக்கு செல்லும்போது மேலும் பலர் கள்ளச்சாராயத்தை குடித்து கிட்டத்தட்ட 50-க்கும் அதிகமானோர் பலியானார்கள். முதலில், உண்மையை மூடி மறைத்த மாவட்ட கலெக்டர் முதல் குற்றவாளி. அதற்கு துணை போன போலீஸ் கண்காணிப்பாளர், மதுவிலக்கு துறை அதிகாரிகள் ஆகிய அனைவரும் குற்றவாளிகள். இவர்களை கொலைக் குற்றவாளிகளாக அறிவித்து கைது செய்ய வேண்டும். அவர்களிடமுள்ள சொத்துகளைப் பறிமுதல்செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் காத்திருப்போர் பட்டியல், பணியிடமாற்றம் என அதிகார வர்க்கத்தை பாதுகாக்கிறது அரசு. தவறு செய்தவர்கள் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்கள் மட்டுமல்ல; இந்த அதிகார வர்க்கமும் கூட்டுதான்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் சாமானிய மக்கள் 13 பேரை சுட்டுக்கொன்ற போலீசு இன்றுவரை தண்டிக்கப்படவில்லை, மணல் மாஃபியாக்களுக்கு எதிரான மக்களுடைய போராட்டங்களிலும் மணல் மாஃபியா கும்பலுக்கு போலீசும் அதிகார வர்க்கமும் துணை போகிறது. கார்ப்பரேட் முதலாளிகளைப் பாதுகாக்கும் இந்த அதிகார வர்க்கத்திற்கு ஒரு பிரச்சினை என்றால், ஒட்டுமொத்த அரசும் சேர்ந்து அவர்களைப் பாதுகாக்கிறது. இன்று கள்ளக்குறிச்சி சம்பவத்திலும் அதிகார வர்க்கம் பாதுகாக்கப்படுகிறது.
ஆக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்களுக்கான எந்த ஒரு மாற்றமும் நிகழப்போவதில்லை, மக்கள்தான் போராடி நமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு நாம் அமைப்பாய் திரள வேண்டியிருக்கிறது” என்பதை வலியுறுத்தி தனது கண்டன உரையை முடித்தார்.
இறுதியாக, தோழர் வெங்கடேசன் அவர்கள் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவண்
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம் – ராணிப்பேட்டை மாவட்டக் கிளை.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube