பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாததால் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜூலை 3 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

ரந்தூர் ‘பசுமை’ விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் 20 பேர் ஜூலை 3 அன்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் அருகே 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது ‘பசுமை’ விமான நிலையம் அமைக்க மத்திய – மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 700 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 30 அன்று “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் சிறப்பு கிராம சபைக் கூட்டம்” ஏகனாபுரம் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடத்தப்பட்டுள்ளது. ஏகனாபுரத்தை அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர். கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாததால் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜூலை 3 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.


படிக்க: ஆந்திராவிற்கு தஞ்சம்புகும் பரந்தூர் மக்கள்: தி.மு.க-வின் கார்ப்பரேட் சேவையால் அகதிகளாக்கப்படும் மக்கள்


இந்நிலையில், ஜூலை 3 அன்று காலை 9 மணி அளவில் போராட்டக் குழுவினர் 20 பேர் ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு கூடி விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் காஞ்சிபுரம் நோக்கிப் புறப்பட முயன்றனர். ஆனால், அவர்களைத் தடுத்து நிறுத்திய போலீசு அவர்களைக் கைது செய்து சுங்குவார்சத்திரம் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.

இந்தக் கைது நடவடிக்கையின்போது கிராம மக்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தையொட்டி ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலும், மதிய உணவை ஏற்க மறுத்து அங்கேயே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளனர் போரட்டக் குழுவினர்.

தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக திமுக அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தி வரும் பரந்தூர் மக்களுக்குத் துணைநிற்போம்.


சிவா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க