கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக் கோரும் பேச்சுவார்த்தை தோல்வி:
சுங்கச்சாவடியை அகற்றும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!
உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு 50 சதவிகித சுங்கக் கட்டண உயர்வு மற்றும் நான்கு ஆண்டுகளில் டோல்கேட்டை கடந்து சென்றதற்காக 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை அபராதம் என திருமங்கலம் டோல்கேட் நிர்வாகம் அறிவித்ததைக் கண்டித்து கடந்த 10.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 6.30 வரை மதுரை திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கப்பலூர் டோல்கேட்டை ஆயிரக்கணக்கான மக்கள் டோல்கேட் எதிர்ப்பு குழு தலைமையில் முற்றுகையிட்டனர். காலை முதல் மாலை வரை எந்த வாகனங்களும் டோல்கேட்டை கடந்து செல்ல போராட்டக் குழு அனுமதிக்கவில்லை. “விதிமுறைகளை மீறி அமைந்துள்ள டோல்கேட்டை நிரந்தரமாக அகற்று, அதுவரை 10 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டை காண்பித்தால் கட்டணம் இல்லாமல் செல்வதற்கு அனுமதி வழங்கு” என்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சிபிஐ, சிபிஎம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கலந்து கொண்டனர். மாலையில் போலீசு டோல்கேட் எதிர்ப்பு குழுவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அதில், “15.07.2024 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் அமைச்சர்கள் டோல்கேட் நிர்வாகிகள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடக்கும்; அதுவரை உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படாது” என அறிவித்தனர். இதன் பிறகு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நேற்றைய முன்தினம் (15.07.2024) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு, வாகன ஓட்டிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டதில் எமது மக்கள் அதிகாரம் சார்பாகவும் கலந்து கொண்டோம்.
மதுரை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பி.மூர்த்தி, போலீஸ் அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், டோல்கேட்டை காண்ட்ராக்ட் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.
படிக்க: கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் போராட்டங்களே தீர்வு!
இதில் அமைச்சர் பி மூர்த்தி மாவட்ட ஆட்சியர் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உள்ளூர் வாசிகளுக்குக் கட்டணம் வசூலிக்க கூடாது, டோல்கேட்டை அகற்றுவதெல்லாம் முடியாது என பேசி உள்ளார்கள். சட்டத்திற்குப் புறம்பாக உள்ள இந்த டோல்கேட்டை அகற்றியாக வேண்டும் என்ற மக்கள் கோரிக்கையை புறக்கணித்தனர்.
அமைச்சர்களின் அதிகாரிகளின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய சுங்கச் சாவடி அதிகாரிகள், தங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என வானளாவிய அளவில் புளுகி, உள்ளூர் வாசிகளுக்கு கட்டணம் விதிக்கத் தான் செய்வோம் என திமிராகப் பேசினர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திடம் குத்தகைக்கு எடுத்து வரி வசூல் செய்யும் இந்தத் தனியார் நிறுவனத்திற்கு எப்படி நஷ்டம் வந்ததாம்? எவ்வளவு ஆண்டுகள் குத்தகை? எவ்வளவு பணம் வசூல் செய்தார்கள் என எந்த விவரங்களையாவது வெளியிடுவார்களா? தொடர்ந்து மக்களைச் சூறையாடி வரும் இந்த கொள்ளை கும்பலை அமலாக்கத் துறை, ஐ.டி ரெய்டுகள் விசாரிக்குமா? என்ற கேள்விகள் எழுகிறது.
அதிகாரிகள் அமைச்சர்கள் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேசிய எதிலும் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதிலும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என இழுத்தடிக்க முயற்சி செய்கிறார்கள்.
படிக்க: டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள் | விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி
டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஓயப்போவதில்லை என அமைதிப் பேச்சுவார்த்தையின் முகத்தில் கரியைப் பூசினர்.
நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் செயலாளர் முன்னிலையில் அடுத்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படும் வரை உள்ளூர் வாசிகளுக்கு கட்டணம் வசூலிக்கப் படாது என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதுவும் கூட மக்களின் போராட்டத்திற்கு பயந்து தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
மக்கள் போராட்டங்கள் தான் இது போன்ற கொள்ளைக் கும்பல்களைப் பணிய வைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டை அகற்றக் கோரும் போராட்டம்.
பத்து ஆண்டுகளாக இந்த டோல்கேட்டின் அடாவடிக்கு எதிராகவும் விதி மீறல்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறார்கள் திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதி மக்கள். இந்த உறுதி தான் கப்பலூர் டோல்கேட்டை விரட்டி அடிக்கப் போகிறது.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube