மின் கட்டண உயர்வு: உழைக்கும் மக்கள்,
சிறு வணிகர்களின் வயிற்றில் அடித்த தமிழ்நாடு அரசு!
17.07.2024
கண்டன அறிக்கை
தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் வயிற்றில் அடித்து இருக்கிறது தமிழ்நாடு அரசு.
கடந்த 2022 செப்டம்பர் மாதம் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2023 ஜூலை மாதம் 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது 4.83 சதவீத அளவில் மின் கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.
வருடம் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து நிதியை பெற முடியும் என்றும், ஆறு சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருந்த போதும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இக்கட்டண உயர்வை உயர்த்தியுள்ளதாகவும் அரசு தன்னுடைய விளக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தனியார்மயம், தாராளமயம் உலகமயத்தின் விளைவாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு ஆணையங்களின் கீழ் ஒட்டுமொத்த நாடும் சிக்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கீழ்படிந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுவதைக் கைவிட்டு விட்டு மக்கள் தலையில் சுமையை ஏற்றியுள்ளது திமுக அரசு. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதுடன் உதய் மின் திட்டத்திலிருந்து தமிழ்நாடு வெளியேறுவதற்கான சிறப்பு தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube