பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த ஜூன் மாதத்தில் பொதுவெளிhயில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
000
கேள்வி : இத்தேர்தலில் பா.ஜ.க. 63 இடங்களை இழந்து தனிபெரும்பான்மை பெறமுடியாமல் போனாலும் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 0.8 சதவிகிதம் மட்டுமே குறைந்துள்ளது. அதிலும், இத்தேர்தலில் 68.97 லட்சம் மக்கள் பா.ஜ.க-விற்கு கூடுதலாக வாக்களித்துள்ளனர் என்ற தரவு அதிர்ச்சியளிக்கக்கூடியதாக உள்ளது. இதனை எப்படி பார்ப்பது?
நாடுதழுவிய அளவில் மட்டுமின்றி மாநில வாரியாக பரிசீலித்தாலும், பா.ஜ.க. தனது வாக்குவங்கியை பெரியளவில் இழக்காமல் 36.6 சதவிகித வாக்குகளை தக்கவைத்துக் கொண்டுள்ளது என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய உண்மை. சான்றாக, மகாராஷ்டிராவில், 60 சதவிகித இடங்களை பா.ஜ.க. இழந்தபோதிலும் வெறும் 1.62 சதவிகித வாக்குகளே குறைந்துள்ளது.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க-விற்கு வாக்கு சதவிகிதம் குறைந்து இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் தீவிரமாக வேலை செய்து வரும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியின மக்கள் பா.ஜ.க-விற்கு வாக்களித்துள்ளனர். தென் மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதமும் வெற்றிபெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த வாக்குகளில் கணிசமானவை பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கும் கொள்கைகளுக்கும் விழுந்த வாக்குகளே. நாடு முழுக்க மோடி அரசுக்கு எதிராக தீவிரமாக போராட்டம் நடந்திருந்தாலும் பா.ஜ.க. தனது வாக்குவங்கியை தக்கவைத்திருப்பது பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளத்தை காட்டுகிறது.
அதேபோல், உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலை நிராகரித்திருந்தாலும், மத்தியப்பிரதேசத்தில் இந்துத்துவ அரசியல் வாக்குகளாக அறுவடையாகி மொத்த தொகுதிகளையும் பா.ஜ.க. வசம் சேர்த்துள்ளது. மகாராஷ்டிராவில், காங்கிரஸ், உத்தவ்-சிவசேனா, ஷிண்டே-சிவசேனா, சரத் பவார் என்.சி.பி., அஜித் பவார் என்.சி.பி. என அனைத்து கட்சிகளும் பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்குள் கரைந்து போய்விட்ட நிலையில், அக்கட்சிகளுக்கு விழுந்த வாக்குகளில் கணிசமானவை இந்துத்துவ அரசியலுக்கு விழுந்த வாக்குகள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மேலும், இம்மாநிலங்களில் பா.ஜ.க-வின் நெடுங்கால மக்கள் அடித்தளமாக இருந்துவந்த ராஜ்புத், மராத்தா உள்ளிட்ட ஆதிக்கச் சாதி மக்கள் இம்முறை பா.ஜ.க-வை புறக்கணித்திருந்தாலும் பெரும்பாலான இடங்களில் அவர்கள் யாரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கப்பதாக முடிவெடுக்கவில்லை என்பது அம்மக்கள் மாற்று அரசியல்-சித்தாந்தத்தின்கீழ் அணித்திரட்டப்படவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இவர்களை மீண்டும் தங்களது அடித்தளமாக மாற்றிக்கொள்ள பாசிசக் கும்பல் அனைத்து வழிகளிலும் முயற்சிக்கும்.
மேலும், பா.ஜ.க. என்பது பிற ஓட்டுக் கட்சிகளைப் போன்றது அல்ல, ஆர்.எஸ்.எஸ்-எனும் பாசிச சித்தாந்தத்தைக் கொண்ட அமைப்பின் அரசியல் கருவி. எனவே கலவரங்களின் மூலம் மக்களை பிளவுப்படுத்தி தனது அடித்தளத்தைப் பலப்படுத்திகொண்டு இத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்துகொள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் தீவிரமாக முயற்சிக்கும். இவையெல்லாம், இந்துத்துவ அரசியல்-சித்தாந்தத்திற்குகீழ் அணித்திரட்டப்பட்டுள்ள மக்களை மாற்று அரசியல்-சித்தாந்தத்தை முன்வைத்து அணித்திரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube