ஒன்றிய அரசு ஊழியர்கள் பாசிச ஆர்.எஸ்.எஸ்-இல் சேர்வதற்கான தடை நீக்கம்!
பாசிசமயமாகும் இந்திய அரசு!
24.07.2024
கண்டன அறிக்கை
68 ஆண்டுகளுக்கு பின்னர், ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது நீக்கப்பட்டிருக்கிறது. காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு பாசிச ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் சில காலங்கள் கழித்து மீண்டும் அத்தடை விலக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டு பசுக்கொலைகளை தடுக்கிறோம் என்ற பெயரில் இந்திய பாராளுமன்றத்தை முற்றுகையிட்டது பாசிச ஆர்.எஸ்.எஸ். அதன் விளைவாக அந்த அமைப்பில் ஒன்றிய அரசு ஊழியர்கள் சேரக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டது.
பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் மூன்றாவது ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்ட நூறாவது ஆண்டில் தற்பொழுது அந்தத் தடை மீண்டும் விலக்கப்பட்டு, ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இன்றி கூட்டணி ஆட்சியை மேற்கொண்டிருக்கும் நிலையிலும் கூட இந்து ராஷ்டிரத்தை நிறைவேற்றும் வகையில் அரசு உறுப்புகள் முழுமையையும் காவிமயமாக்குவதில் முதன்மையான நடவடிக்கையே இது.
அயோத்தி, குஜராத் முதல் குமரி வரை இந்தியா முழுவதும் நடைபெற்ற பல்வேறு மதக்கலவரங்கள், சாதிக் கலவரங்களுக்கு பாசிச ஆர்.எஸ்.எஸ், சங்கப் பரிவாரங்களுமே அடிப்படையாக செயல்பட்டிருக்கின்றன. இனி இந்த நாட்டில் நடைபெறும் அனைத்து சாதி மற்றும் மதக் கலவரங்களில் அரசு உறுப்புகளும் நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகளும் நெருங்கி விட்டன.
ஆகவே, பாசிச பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இயல்பானதொரு அமைப்பாக மாற்ற முயற்சிக்கும் இந்த நடவடிக்கையையும், அரசு நிறுவனங்களை காவிமயமாக்கும் நடவடிக்கையையும் மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.
பாசிச மோடியின் மேற்கண்ட இந்த நடவடிக்கையை தமிழ்நாட்டில் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube