பஞ்சாபில் நடைபெற்ற புதிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான மாநாடு!

அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷங்கத் ஹூசைன் மீதான வழக்கு, அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன கருத்து மற்றும் போராட்ட உரிமை மீதான பாசிச தாக்குதல்களாகும்.

மீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து மூன்று டஜனுக்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் ஜூலை 21 அன்று பிரமாண்ட மாநாட்டை நடத்தியுள்ளனர். அம்மாநாட்டில், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் இலக்கிய மற்றும் கலாச்சார மன்றப் பிரமுகர்கள் அடங்கிய ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகள் தலைமைத் தாங்கினர். இம்மாநாடு ஜனநாயக உரிமைகளுக்கான சங்கம், பஞ்சாப் பகுத்தறிவாளர் சங்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

மாநாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜக்மோகன் சிங், பகுத்தறிவாளர் சங்கத்தின் அமைப்புச் செயலர் திரு. ராஜிந்தர் பதவுர் மற்றும் வழக்கறிஞர்கள் என்.கே.ஜீத், தல்ஜீத் சிங் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் பாஷா சிங் ஆகியோர் உரையாற்றினர்.

மாநாட்டில் மூத்த பத்திரிக்கையாளர் பாஷா சிங் பேசுகையில், “தற்போதைய அரசங்கம் பலவீனமானது என்ற மாயையை நாம் கொண்டிருக்கக் கூடாது. அது முன்பிருந்ததை விட அடக்குமுறை செலுத்துவதாக இருக்கும். அருந்ததி ராய் கடினமான காலங்களில் எவ்வாறு போராடுவது, எழுதுவது மற்றும் சிரிப்பது என்பதற்கான அடையாளமாக உள்ளார். இந்த புன்னகைக்கும், மக்கள் போராட்டத்திற்கும் தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த போராட்டங்களின் குரல் தான் அருந்ததி ராய். மேலும், இந்த குரல் அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது. அதனால் தான் அவரை குற்ற வழக்குகளில் சிக்கவைக்கிறது. இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்காவிட்டால், மக்களும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள்.” என்று தற்போதைய அரசியல் சூழலை விளக்கிப் பேசினார்.


படிக்க: மோடி 3.0: பாசிச அபாயம் நீங்கிவிட்டதா?


பேராசிரியர் ஜக்மோகன் சிங் பேசுகையில், “புதிய குற்றவியல் சட்டங்கள் காலனித்துவச் சட்டங்களின் மேலாதிக்க நிழலில் கொண்டுவரப்பட்டுள்ளன. அவர்களின் உண்மையான நோக்கம் இந்திய அரசை போலிஸ் ராஜ்ஜியமாக மாற்றுவதுதான். மேலும், அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷங்கத் ஹூசைன் மீதான வழக்கு, அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஆகியன கருத்து மற்றும் போராட்ட உரிமை மீதான பாசிச தாக்குதல்களாகும். இந்திய மக்களால் உருவாக்கப்பட்ட இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும், சுரண்டவும் கார்ப்பரேட் சார்பான புதிய தாராளமயக் கொள்கையின் நிகழ்ச்சி நிரலுடன், தற்போதைய ஆட்சி செயல்படுகிறது” என்றார்.

வழக்கறிஞர்கள் தல்ஜீத் சிங் மற்றும் என்.கே ஜீத் ஆகியோர் கூறுகையில், “புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட ஜனநாயக உரிமைகளை நிர்மூலமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியா கையொப்பமிட்ட பல்வேறு மனித உரிமைகள் உடன்படிக்கைகளையும் இந்தச் சட்டங்கள் மீறுகின்றன” என்றனர்.

பகுத்தறிவாளர் சங்கத்தின் அமைப்புச் செயலாளர் ராஜிந்தர் பதவுர் பேசுகையில், “மோடி ஆட்சியின் பாசிச சூழ்ச்சிகளுக்கு எதிரான இந்திய மக்களின் போராட்டங்களில் இந்த மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும் என்றும், மூன்று கொடூரமான விவசாயச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு வெற்றிபெற்றது போல, இந்த முயற்சியிலும் மக்கள் வெற்றி பெறுவார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாநாட்டின் இறுதியாக, பாசிச மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், பேரணி அணிவகுப்பும் நடத்தப்பட்டது. பேரணியில் பேசிய ஜனநாயக உரிமைகளுக்கான சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் பர்மிந்தர் கூறுகையில், பஞ்சாபில் உருவாகி வரும் ஜனநாயக உரிமைகளின் உணர்வு மற்றும் இயக்கம், நாட்டின் மக்கள் போராட்டங்களில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்றும், அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத செயல்களில் இறங்குவதை தவிர்க்குமாறு அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்” என்றார். மேலும், பஞ்சாப் மக்கள் இதுபோல ஒன்றுகூடுவது, பகத்சிங்கின் காலனித்துவ எதிர்ப்பு பாரம்பரியத்தை எப்போதும் தங்கள் உயிர் மூச்சாக வைத்திருப்பதாகவும், புதிய குற்றவியல் சட்டங்கள் மற்றும் அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷங்கத் ஹூசைன் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என்றும் கூறினார்.


படிக்க: புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்


மாநாட்டின் இறுதியாக, “புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு, டிஜிட்டல் ஊடக விதிமுறைகள், தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், பொதுப் பாதுகாப்பு சட்டம், மகாராஷ்டிரா பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் ஊஃபா போன்ற அனைத்து கருப்பு சட்டங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், IPC 295/295A பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்; பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அறிவுஜீவிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் விடுதலை; தண்டனை முடித்த அனைத்து குற்றவாளிகளும் விடுவிக்கப்பட வேண்டும்; கார்ப்பரேட் நிறுவனங்களால் வளர்ச்சி என்ற பெயரில் பழங்குடியின மக்கள் இடம்பெயர்வதையும், சிறைவைக்கப்பட்டு போலீசால் போலி என்கவுண்டர்களில் கொலை செய்யப்படுவதையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்; காஷ்மீரில் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் விடுதலை; மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான கொலைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்; மேலும், காஸாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு அவர்களின் நிலத்தின் மீதான ஏக உரிமையும் ஏற்கப்படுகிறது; மேலும், இந்த புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை பஞ்சாப் அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் மாநாடு தீர்மானத்தில் கோரியது.

அனைத்து தீர்மானங்களும் திரு. நர்பிந்த சிங் அவர்களால் முன்மொழியப்பட்டது மற்றும் மக்கள் தங்கள் கைகளை உயர்த்தி ஒருமனதாக நிறைவேற்றினர்.


மணிவண்ணன்

செய்தி ஆதாரம்: கவுன்டர் கரண்ட்ஸ் (Countercurrents)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க