பொட்டலூரணி: கழிவு மீன் லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்!
மக்கள் கோரிக்கைக்கு அடிபணிந்த போலீசு!

“கழிவுமீன் நிறுவனங்களை உடனடியாக மூடு!

பொது மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!”

இந்த கோரிக்கையை முன்வைத்து மூன்று ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராம மக்கள் போராடி வருகின்றனர்!

இந்த ஊரைச் சுற்றி மூன்று கழிவுமீன் நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு கேரளா, நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் இருந்து தினமும் 30 லாரிகளுக்கு மேல் கழிவுமீன்கள் கொண்டு வரப்படுகிறது. வண்டிகளில் வரும் கழிவு மீன்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஊரின் தெருக்களில் கொட்டிச் செல்கிறது.

மேலும், இந்த கம்பெனியிலிருந்து வெளியேறும் புகையானது பிணவாடையை விட கடுமையான துர்நாற்றம் வீசி, சுகாதாரக் கேடு உருவாக்கி நோய்த் தொற்று, மூச்சுத் திணறல் மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தி, இந்த ஊரில் குடியிருக்க முடியாத அளவிற்கு மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்துகிறது.

ஊரில் நிம்மதியாக வாழ முடியவில்லை, விவசாய வேலை செய்ய முடியவில்லை. ஆகையால் சாதி, மதம், கட்சி கடந்து மக்கள் தங்கள் கிராமத்தை இந்த சுகாதாரச் சீர்கேட்டில் இருந்து பாதுகாக்க போராடி வருகின்றனர்.

பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் போலீசிடமும் புகார் மனு கொடுத்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பையும் இம்மக்கள் செய்து உள்ளார்கள்.

பல முறை ஊருக்குள் வந்த மீன் கழிவு லாரிகளை மக்கள் போராடி வேறு பாதைக்கு திருப்பி விட்டுள்ளனர்.

ஊருக்குள் வரக் கூடாது என்ற தாசில்தார் வாய் வழியாக உத்தரவு இருந்தும் ஆகஸ்டு 4 அன்று கழிவு மீன் லாரி இரவு ஊருக்குள் வந்துள்ளது. லாரியை மறித்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

50-க்கும் மேற்பட்ட போலீசு படையுடன் வந்த டி.எஸ்.பி ராஜ் சுந்தர், புதுக்கோட்டை ஆய்வாளர் வனசுந்தர் ஆகியோர் போராடிய மக்களை மிரட்டியுள்ளனர். கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்திற்கு எந்த ஆவணமும் கிடையாது. அதைப் பற்றி கேட்க வக்கில்லாத போலீசு மக்களை மிரட்டுகிறது. ஆனால் மக்கள் எதற்கும் அஞ்சாமல் உறுதியாக நின்று போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் மீது பொய் புகார்களைப் பதிவு செய்வது, மக்கள் புகார் கொடுத்தால் புகாரை வாங்காமல் அலட்சியம் செய்வது என பல வகைகளில் தன்னுடைய மீன் கழிவு நிறுவனத்தின் மீதான விசுவாசத்தை காட்டி வந்தது போலீசு.

லாரியை சிறை பிடித்த மக்கள் இரவும் பகலும் தூங்காமல் போராடி கம்பெனியின் மீதும், லாரியின் மீதும் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) போட வைத்துள்ளனர்.

பலமுறை கம்பெனியின் மீது எஃப்.ஐ.ஆர் போடாமல் மக்களை போலீசு அலைக்கழித்தது. ஆனால், இது மக்களின் முறை; எஃப்.ஐ.ஆர் போட்டு எங்கள் ஊரில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு பிறகு வண்டியை எடுத்துச் செல்லுங்கள் என மக்கள் இப்போது உத்தரவிட்டனர்.


படிக்க: பொட்டலூரணி கள ஆய்வு | நெல்லை மக்கள் அதிகாரம்


அதுமட்டுமில்லாமல் பெண்கள் தண்ணீர் பிடிக்கும் இடத்தில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்பது, போலீசும், உளவுப்பிரிவு போலீசாரும் சேர்ந்து ஊருக்குள்ளேயே மது அருந்திவிட்டு காலிபாட்டிலை குளத்தில் போடுவது, மக்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்துவது போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் “எங்கள் ஊரை நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம். போலீசு துணை எங்கள் ஊருக்கு தேவை இல்லை” என்று போலீசை மக்கள் வெளியேற்றினர்.

இதுதான் மக்களின் அதிகாரம். உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துவிட்டால் ஆள், அம்பு, படை, பரிவாரம், ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் அனைத்தும் மக்களின் முன் மண்டியிட்டே ஆக வேண்டும் என்பதை தங்கள் போராட்டத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள் பொட்டலூரணி மக்கள்‌.

மக்கள் தங்களிடமிருந்து வண்டியை விடுவிக்கும் போது எச்சரிக்கையாக வண்டியை சோதனை செய்ய வைத்து எந்த சேதாரம் ஆகவில்லை என்று வி.ஏ.ஓ மூலம் எழுதி வாங்கி உள்ளனர். அதையும் வீடியோ எடுத்து உள்ளனர். தாங்கள் பலமுறை பொய் புகாருக்கு ஆளானதே இதற்கு காரணம்.

மக்கள் கேட்கும் கேள்வி

“கம்பெனியை ஆய்வு செய்யுங்க? மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை என்று எதாவது தூத்துக்குடியில் இருக்கிறதா?” என்பதே மக்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது.

“இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு அமைச்சர்கள், ஒரு எம்.பி.. தூத்துக்குடி மக்களுக்காக தான் இருக்கிறார்களா இல்லை கம்பெனிக்காக இருக்கிறார்களா? என்கிற சந்தேகம் எழுகிறது” என்று போராடும் மக்கள் கேட்கின்றனர். ஏனெனில் பல நாட்களாக மக்கள் போராடி வரும்போது மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் யாரும் வரவில்லை.

ஊரையும், இயற்கையும் காப்பாற்ற ஜனநாயக முறையில் போராடிக் கொண்டு இருக்கும் பொட்டலூரணி மக்களுக்கு, உழைக்கும் மக்களாகிய நாம் தோள் கொடுப்போம்!


மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க