பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்

அரங்கக் கூட்டங்கள்

ஆகஸ்ட் 2024 | சென்னை, மதுரை, கோவை.

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பாசிச மோடி அரசு மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தவுடனே மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சியினர். ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம், பேரணி என பல்வேறு வகையில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

சட்டத்தின்படி நீதி வழங்கும் அதிகாரத்தை நீதித்துறையிடமிருந்தே பறித்து, அதனை போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கும் இம்மூன்று புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள், “இந்தியாவில் ஒரு போலீசு ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான நடவடிக்கை” என்றே போராடும் வழக்குரைஞர்களும் ஜனநாயக சக்திகளும் அறிவிக்கின்றனர்.

போலீசு காவல் 15 நாட்கள் என்பது மாற்றப்பட்டு, 60 முதல் 90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. புகார் அளித்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்ற பெயரளவிலான சட்ட வாய்ப்பும் மறுக்கப்பட்டு, புகாரை பதிவு செய்வதற்கே போலீசுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. குற்றவாளியை கைது செய்யும்போது கைவிலங்கிடக் கூடாது, பலப்பிரயோகம் செய்யக்கூடாது போன்ற அம்சங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுவரை குற்றவழக்கில் முதன்மை ஆதாரங்களாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த போலீசு

சாட்சியங்கள், இப்போது ஏற்றுக்கொள்ளப்படும். விசாரணைக்கு முன்பாகவே ஒருவரை குற்றவாளியாக முடிவு

செய்து, அவரது சொத்துக்களை பறிக்கும் அதிகாரமும் போலீசுக்கே வழங்கப்பட்டுள்ளது. ஊபா (UAPA) போன்ற பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள், சிறப்பு பிரிவிலிருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதன் மூலம் இனி போலீசு அதிகாரிகளே மக்களை பயங்கரவாதியாக சித்தரித்து சிறையில் அடைக்க முடியும். யார் மீது வேண்டுமானாலும் பயங்கரவாத தடுப்பு சட்டம் பாயலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் கையறுநிலையில் உண்ணாநிலை போராட்டம் நடத்துவதும் கூட அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுக்கும் பயங்கரவாதக் குற்றம் என்றாக்கப்பட்டுள்ளது. இதுவே குற்றம் சாட்டப்படுபவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், மேலதிகாரியின் ஒப்புதல் இல்லாமல் அவர் மீது வழக்கு கூட பதிய முடியாது. இவையெல்லாம் அதிகார வர்க்கத்திற்கு இச்சட்டம் அளித்துள்ள கட்டற்ற அதிகாரத்தில் சில துளிகளே. இன்னும் இதுபோல ஏராளமான அம்சங்கள் உள்ளன.

பொதுவில் போலீசு ராஜ்ஜியம் என்பது போல் இல்லாமல், இன்று அரசுக் கட்டுமானங்களின் பல்வேறு உறுப்புகளிலும் ஊடுருவி அதைக் கட்டுப்படுத்தும் நிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்- பிஜேபி கும்பல் நம் நாட்டு மக்கள் மீது ஒரு பாசிச ஆட்சியை சட்டப்பூர்வ வடிவில் திணிப்பதற்கான ஏற்பாடாகவே இச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

124A என்ற பிரிவிலிருந்த “ராஜதுரோகச் சட்டத்தை” நீக்கிவிட்டோம், காலனிய கறையை துடைத்து விட்டோம் என்கிறது மோடி அரசு. ஆனால், அச்சட்டம் அப்படியே BNS 150 பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இப்பிரிவில் தேச ஒருமைப்பாடு, இறையாண்மை, பிரிவினைவாதம் போன்ற அம்சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இச்சட்டப்படி, மக்கள் உரிமைப் போராளிகள், சனாதன எதிர்ப்பாளர்கள், தேசிய இன-மொழிப் பற்றாளர்கள் ஆகியோரை பிரிவினைவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரித்து, ஆயுள் தண்டனைவரை வழங்க முடியும். மோடி அரசுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் பிஜேபிக்கு எதிராக யார் ஒருவர் கருத்து தெரிவித்தாலும் அவர் ஒரு “பயங்கரவாதி” என்பதே இச்சட்டத்தின் சுருக்கம். சமூக ஊடகப் பதிவாக இருந்தாலும் இச்சட்டப்படி கணக்கில் கொள்ளப்படும்.

மதவெறி, வெறுப்புப் பேச்சு ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் நீக்கப்பட்டு, அதற்கு ஆதரவான சட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் குண்டர் படைகள் எவ்வித தடையுமின்றி சட்டப்பூர்வமாக கலவரங்களை கட்டியமைப்பதற்கு ஏதுவாக கும்பல் படுகொலையை வரையறை செய்வதில் மதரீதியான அம்சம் நீக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்வதை தடை செய்யும் பிரிவும் நீக்கப்பட்டுள்ளது.

“பொருளாதாரப் பாதுகாப்பு” என்ற அம்சத்தை குறிப்பிட்டு கார்ப்பரேட் பேரழிவு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களைக்கூட “பயங்கரவாத குற்றங்களாக” சித்தரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி சாராத தொழிற்சங்க முன்னோடிகள், போராடும் தொழிலாளர்கள், அதுமட்டுமல்ல பரந்தூரிலும் எண்ணூரிலும் போராடுகிற விவசாயிகளும், மீனவர்களும் கூட இப்போது பயங்கரவாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே குற்றவியல் திருத்தச் சட்டங்கள் என்ற பெயரில் பரந்துவிரிந்துள்ள ஆக்டோபஸ் கரங்கள் ஒரு கும்பல் ஆட்சியை நிறுவுவதற்கானதாகும். இது ஆர்.எஸ்.எஸ்-பிஜேபி அம்பானி அதானி பாசிசக் கும்பலின் ஆட்சியாகும். இந்தக் கும்பலின் நலனுக்காகத்தான் வரம்பற்ற அதிகாரங்கள் போலீசிடம் குவிக்கப்படுகின்றன.

ஒரு ஜனநாயக நாட்டின் குடிமக்களாக வாழ்வதா, அல்லது ஒரு பாசிச கும்பலாட்சியின் கீழ் அடிமைகளாக ஒடுங்கிக் கிடப்பதா என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணமிது.

சமஸ்கிருதப் பெயர்கள், மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் கொண்டு வந்தது போன்றவை மட்டுமே பிரச்சினை அல்ல. எதிர்க்கட்சிகள் முன்வைப்பது போல, இது திருத்தம் கோரப்பட வேண்டிய சட்டங்கள் அல்ல; தூக்கி எறியப்பட வேண்டியவை.

“பாசிச மோடியே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு” என்று வீதியில் இறங்குவோம்!

  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: இந்துராஷ்டிரத்திற்கான போலீசு இராஜ்ஜியமே!
  • முடிவுக்கு வரும் சட்டத்தின் ஆட்சி! அரங்கேற்றப்படும் பாசிச கும்பல் ஆட்சி!
  • எதிர்க்கட்சிகளே, சட்டங்களைத் திருத்துவது அல்ல; திரும்பப் பெறுவதே தீர்வு!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9791653200, 9444836642, 7397404242, 9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க