12.08.2024
ஆணவப் படுகொலையைத் தூண்டும் ரஞ்சித்..
கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!
பத்திரிகை செய்தி
இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம் படம் திரையரங்கில் வெளியானது. இதையொட்டி நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் சொன்ன கருத்து அப்பட்டமாக தமிழ்நாட்டில் சாதி ஆதிக்கத்தையும் சாதி கலவரங்களையும் தூண்டும் விதமாகவும் இருந்தது. குறிப்பாக மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பெண்களை வசப்படுத்துவார்கள் என்று திமிர்தனமாகப் பேசியுள்ளார். மேலும் “கொங்கு மண்டலத்தில் வசிக்கக்கூடிய எங்கள் சமூகப் பெண்களை கற்பழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு எங்கள் சாதிப் பெண்களே துணை போகிறார்கள்” என பெண்கள் மீதான வக்கிரத்தை கக்கியுள்ளான்.
மேலும் ஒரு பத்திரிக்கையாளர் ஆணவப் படுகொலைகள் நடப்பதை பற்றி கேள்வி கேட்கும் போது, ”அதை ஒரு வன்முறையாக கலவரங்களாகப் பார்க்க முடியாது. அது பெற்றோர்கள் தன் பிள்ளைகள் மீதுள்ள அக்கறையினால் நடத்தப்படும் ஒன்று. இது எப்படி ஆணவ கொலைகளாகும்” என்று ஆணவப் படுகொலைகளை ஆதரித்து பேசினார்.
இன்றைக்கு தமிழ்நாட்டில் ஆணவ படுகொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதை மேலும் ஊக்குவித்து சமூகத்தில் மிகப் பெரிய கலவரங்களை உருவாக்கும் படி பேசிய இந்த சாதி வெறி பிடித்த ரஞ்சித்தை தமிழ்நாடு அரசு உடனடியாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்கள் இந்தியா முழுக்க பல மாநிலங்களில் மத கலவரங்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி வருகிறது. அதில் தமிழ்நாட்டை குறி வைத்துப் பல்வேறு சதி வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் என்னதான் முயற்சித்தாலும் அது எடுபடவில்லை என்பதற்காக மீண்டும் மீண்டும் சாதியை மையப்படுத்தி தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் அதைத் தொடர்ந்து கொங்கு மண்டல பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க வேலை செய்து வருகிறது.
அதன் வெளிப்பாடாக ரஞ்சித், மோகன்ஜி போன்ற சாதிவெறி சாக்கடைகளை கொண்டு சாதி ஆதிக்க பின்னணி கொண்ட படங்களை எடுக்க அனுமதி கொடுத்து சாதி வெறியைத் தூண்டிவிட முயற்சித்து வருகிறது. மேலும். அதன் மூலம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்து வருகிறது.
ஏதோ பெண்களை பாதுகாக்க வந்த காவலர்கள் போல பேசும் ரஞ்சித், மோகன்ஜி போன்ற கோமாளிகள் கொங்கு மண்டலத்தில் பெண்களுக்கு நேர்ந்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் என்ன செய்தார்கள்? அப்போது எங்கு போனார்கள், அதில் ஈடுபட்ட பல்வேறு பாலியல் பொறுக்கிகள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்தாரா? நீட் தேர்வு என்கின்ற பெயரில் பெண்களை தேர்வுக்கு முன் சோதனை செய்கிறோம் என்று இழிவுபடுத்தி வருகிறார்களே அதற்கு இதுவரைக்கும் ஏதாவது வாய் திறந்திருக்கிறார்களா? இந்த சாதி வெறி பிடித்த கோமாளிகள்.
காதல் மூலம் தான் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என தலித் மக்களை கொச்சைப்படுத்தி அன்று ராமதாஸ் பேசியதை இன்று ரஞ்சித், மோகன்ஜி போன்ற சாதி வெறி பிடித்த கோமாளிகள் திரைப்படங்கள் மூலம் கூறி வருகின்றனர்.
சமூகத்தில் அமைதியை சீர்குலைத்து சாதி வெறியூட்டும் விதமாக படங்களை எடுக்கும் ரஞ்சித், மோகன்ஜி போன்றவர்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு இவர்களுடைய படங்களை தடை செய்ய வேண்டும். இவர்கள் படங்கள் எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி இவர்களின் கருத்தின் பின்புறத்தில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலைக் கைது செய்!
தமிழ்நாட்டில் சாதி கலவரங்களை உருவாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்கள் மற்றும் ஆதிக்க சாதி சங்கங்களைத் தடை செய்!
என்று முழங்குவோம். சாதி ஒழிப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!
தோழர் ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு,
9791653200.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
💯✔️