போராட்டம் ஓய்வதில்லை!
பல கனவுகளோடும்
எண்ணங்களோடும்
மருத்துவம் படிக்க வந்தேன்…
பிறகுதான் தெரிந்தது
மருத்துவ பணியில்
நீண்ட காலம்
நீடிக்க முடியாதென்று..
மக்களின் மருந்துகளை
மறுவழியில் விற்கலாமா?
எதிர்த்து கேள்வி கேட்டேன்!
மிரட்டல் வந்தது
உன்னைக் கொன்றுவிடுவோம்
பயப்படவில்லை
துணிந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்…
கேள்விகள் கேட்கிறேன் என்பதற்காக
இரவில் வேலைக்கு
வரச் சொல்வது..
இயந்திரத்தை மிஞ்சிய
வேலை வாங்குவது என
பழிவாங்கப்பட்டேன்
அதிகார வர்க்கத்தால்..
அந்த நாளும் வந்தது
கண்கள் விழித்து
வேலை பார்த்து
பார்வை மங்கியது,
எழுந்திருக்க முடியாத
அளவிற்கு உடல்வலி
வயிறு வலியும் கூடவே…
அரைத் தூக்கத்தில்
அறைக்குச் சென்று
தூங்கினேன்
சிறிது நேரத்தில்
வெறிபிடித்த நரிகளாலும் நாய்களாலும்
குதறப்பட்டு
கண்களில் கண்ணீருடனும்
கால்கள் வலியுடனும்
உதிரம் சிந்த… சிந்த..
கொடூரமாய் கொல்லப்பட்டேன்…
இரவு மிருகங்களிடமிருந்து
தப்பிப்பதற்கு
இறுதிவரை போராடினேன்..
போராட்டத்தின் அடையாளங்களாய்
என் உடம்பில் மிருகங்களின் நகக் கீறல்கள்..
கடித்துக் குதறியதால்
கழுத்தில் ஏற்பட்ட
காயங்கள்..
சொல்ல முடியா வலி மிகுந்த
இரத்தப் போக்கு..
இறுதியில் போராட்டம் ஓய்ந்தது..
நான் எழுப்பிய கேள்விகளின்
ஓசை
அடங்கியிருக்கலாம்..
மெழுகுவர்த்தி போல்
போராட்டமும்
மாணவர்கள் மனதில்
எரிந்து கொண்டிருக்கும்
போராட்ட உணர்வும்
ஓயப் போவதில்லை…
இனியன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube