ண்ணூர் முருகப்பா கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் (சி.ஐ.எல்.) ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்துள்ளது சி.ஐ.எல். நிறுவனம். இதற்கு தி.மு.க. அரசும் துணை நின்றுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

டிசம்பர் 26, 2023 அன்று சி.ஐ.எல். நிறுவனத்தின் கடல் படுகையில் அம்மோனியா வாயுவைக் கொண்டு செல்லும் குழாய்களின் அழுத்தம் குறைந்து அம்மோனியா கசிவு ஏற்பட்டது.  சி.ஐ.எல். இன் பைப்லைனில் இருந்து 15 நிமிடங்களுக்குள் 67.638 மெட்ரிக் டன் அம்மோனியா கசிந்துள்ளது என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (NGT) சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கசிவின் காரணமாக அப்பகுதி மக்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நாற்பத்திரண்டு பேர் மூச்சுத் திணறல் மற்றும் தோல் எரிச்சல், மற்ற உடல்நலப் பிரச்சினைகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதனையடுத்து சி.ஐ.எல். நிறுவனத்தை நிரந்தரமாக மூடக் கோரி எண்ணூரில் உள்ள 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் டிசம்பர் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். “எண்ணூரில் எந்த ஒரு தொழிற்சாலையும் தேவையில்லை. இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் எங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. நாங்கள் எங்களுடைய குழந்தைகளுக்காகவும் எங்களின் எதிர்காலத்திற்காகவும் போராடுகிறோம்” என்று அப்பகுதி மக்கள் உறுதியுடன் போராடி வந்தனர். சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூ.5.92 கோடியை அந்நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) வசூலித்தது. ஆனால் எந்த ஒரு நிவாரண நிதியும் மக்களுக்குக் கொடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மே 21, 2024 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் சில பெயரளவிலான நிபந்தனைகளுடன் மீண்டும் ஆலையைத் தொடங்கலாம் என்று சி.ஐ.எல். நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெறவில்லை. இது குறித்து “தி நியூஸ் மினிட்” (the news minute) கள ஆய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளது.


படிக்க: எண்ணூர்: முருகப்பா – கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட போராடிவரும் மக்களுடன் கரம்கோர்ப்போம்!


சி.ஐ.எல். நிறுவனம் நான்கு கிராமங்களைச் சேர்ந்த ஒரு சில மக்களிடம் வலுக்கட்டாயமாகப் பணத்தைக் கொடுத்துப் போராட்டம் நடைபெறாமல் செய்துள்ளது. நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் கிராமங்களுக்கு தலா ஒரு கோடியும் பெரிய குப்பம், சின்னக்குப்பம் கிராமங்களுக்கு முறையே 50 லட்சமும் 35 லட்சமும் கொடுத்துள்ளது என்று தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள கள ஆய்வு கூறுகிறது.

“தி.மு.க. திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தான் நிறுவனத்திடம் இருந்து பணத்தைப் பெற்று ஊர்த்தலைவர்கள் மூலமாக வீடு வீடாக பணப்பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்தார். இந்த நிறுவனம் மீண்டும் தொடங்குவதில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை என்றும், இந்நிறுவனத்தை எதிர்த்து ஒருபோதும் போராட மாட்டோம் என்றும் எழுதி வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுத்தனர்” என்று மக்கள் தெரிவித்ததாக தி நியூஸ் மினிட் கூறியுள்ளது.

நூறு நாட்களுக்கும் மேலாக அம்மக்கள் போராடி வந்த நிலையில், அந்த நிறுவனத்தை மூடுவதற்கு திமுக அரசு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. கோரமண்டல் ஆலையிடமிருந்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் பெறப்பட்ட 5.92 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு மக்களுக்கான நிவாரண நிதியையும் வழங்கவில்லை.

மக்கள் பக்கம் நிற்பதற்கு மாறாக, தீர்க்கமாக நடந்துவந்த மக்கள் போராட்டத்தைச் சதி செய்து நிறுத்துவதற்காக கோரமண்டல் நிறுவனத்துடன் திமுக அரசு கைகோர்த்துள்ளது. இந்த வெட்கக்கேடான செயல் திமுக அரசின் வர்க்கப் பாசத்திற்குத் தக்க சான்றாகும்.


மித்ரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க