ம.பி: முஸ்லீம் தலைவரின் வீட்டை இடித்து பா.ஜ.க அரசு அட்டூழியம்

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

த்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாக சாமியார் ராம்கிரி மஹாராஜ்க்கு எதிராகக் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி போராட்டம் நடந்தது. அப்போராட்டத்தின் போது போலீசு நிலையம் தாக்கப்பட்டதாகவும் சூறையாடப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரையடுத்து ஷாஜி ஷாஜாத் அலி (Haji Shehzad Ali) என்ற உள்ளூர் முஸ்லீம் தலைவரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கியுள்ளனர்; அவரது கார்களையும் புல்டோசரால் நசுக்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 21 ஆம் தேதி மதியம் 2.45 மணியளவில், உள்ளூர் முஸ்லீம் தலைவர்கள் ஜாவேத் அலி மற்றும் ஷாஜாத் அலி தலைமையில் சுமார் 100 முதல் 150 முஸ்லீம்கள் பேரணி சென்றனர். அங்குள்ள கோட்வாலி போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு நபிகள் நாயகத்தைப் பற்றி இழிவாகப் பேசிய மஹந்த் ராம்கிரி மகாராஜ்-ஐ கைது செய்யுமாறு போராட்டம் நடத்தினர். அப்போது கைகலப்பு ஏற்பட்டதாகவும், போலீசு மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து ஷாஜாத் அலி உள்ளிட்ட 150 பேர் மீது போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது. கோட்வாலி போலீசு நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஷாஜாத் அலியின் ரூபாய் 10 கோடி மதிப்பிலான பங்களா ஆகஸ்ட் 22 அன்று புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சியினர் உட்பட ஜனநாயக சக்திகள் பலரும் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.


படிக்க: முஸ்லீம் மக்களை ஒடுக்கும் ‘புல்டோசர் நீதி’ – முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம் !


காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “ஒருவரின் வீட்டை இடித்து அவர்களின் குடும்பத்தை வீடற்றவர்களாக மாற்றுவது மனிதாபிமானமற்றது; அநீதியானது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் தொடர்ந்து குறிவைக்கப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படும் சமூகத்தில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமில்லை.

குடிமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாயமாக புல்டோசரைப் பயன்படுத்தி, அரசியலமைப்பை அப்பட்டமாக அவமதித்ததற்காக பா.ஜ.க மாநில அரசாங்கங்களைக் காங்கிரஸ் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. அராஜகத்தால் இயற்கை நீதியை மாற்ற முடியாது. குற்றங்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வுகாண வேண்டும்; அரசு ஆதரவு அச்சுறுத்தல்கள் மூலம் அல்ல” என்று கடுமையாக பா.ஜ.க அரசை விமர்சித்துள்ளார்.

“பா.ஜ.க-வின் ‘புல்டோசர் நீதி’ முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

குற்றச் செயலில் ஈடுபட்டிருந்தால் கூட நியாயமான முறையில் விசாரித்து தண்டனை வழங்கப்பட வேண்டுமே தவிர, இப்படி வீடுகளை இடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. காவிக் குண்டர்கள் கலவரங்களில் ஈடுபடும் போது அவர்கள் மீது முறையாக வழக்குகள் கூட பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், முஸ்லீம்களின் வீடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்படாமல் இடிக்கப்படுகிறது.

பாசிச பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் முஸ்லீம்களின் வீடுகளை (அதாவது குடிசைகள் முதல் பங்களாக்கள் வரை) இடித்து அவர்களை வீடற்றவர்களாக மாற்றுவது என்பது தொடர் நிகழ்வாகி விட்டது. இதன் மூலம், முஸ்லீம்களை ஒரு அச்ச உணர்விலேயே வைத்துள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

முஸ்லீம்களை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. நீதிமன்றங்கள் அமைதி காக்கலாம்; ஆனால், மக்கள் மன்றங்கள் அமைதி காக்காது.


தினேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க