மூன்றாம் அடி..!

மூன்றடி நிலம் கேட்ட பெருமாளுக்கு
மூன்றாவது அடிக்காக (மகாபலி) தலையைக் காட்டியது போல
நாங்கள் இருக்கும் சேரியைக் காட்டினர் அதிகாரிகள்…

பெரிய பெரிய ஃபேக்டரி வரவிருப்பதால்
எங்களை விடை பெறவும் சொல்லினர்..

“காணி நிலமோ
கஞ்சித் தண்ணியோ இல்லாதப்போ வராத கம்மனாட்டிங்க
கம்பெனி வரப் போகுதுனு
சொல்ல வாரானுங்க..

கம்பெனிக்காரன் தர்ற துட்டுல
மஞ்சக் குளிக்குறவ புருஷனுங்கோ வந்து காலி பண்ண சொல்றானுவ கஸூமாலங்க”னு
பாட்டி மண்ணை வாரி இறைத்தாள்

“யாரும் போ மாட்டோம்
குயந்தைலேருந்து இருந்த எடத்தை வுட்னு போ சொல்றியே
உன் வூட்டுக்கு இட்னு போவ போறீயா எங்கள”னு மீன்பாடி வண்டி மிதிக்கிற மைக்கேல் அண்ணா கேள்வி கேட்டார்..

“ஆதி இனத்து ஆளுங்க நாங்கோ..
இந்த ஊர உருவாக்குனது நாங்க..
குப்பை மேடும்
பீக் காடுமா கிடந்தத
நாங்கதான் சுத்தம் செஞ்சு
நீங்க சொகுசா வாழ உருவாக்கித் தந்தோம்ன்ற
மறவாத ஆபிசரே”னு அரசியல் பேசினார்
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் நடத்தும் கலையரசன் அண்ணா..

காற்றின் மென்மையைக்
கிழித்துப் போட்டது
இன்னும்
இன்னும் ஆயிரம் குரல்கள்..

ஜேசிபிகூட இயங்கி இருக்காது
இத்தனைப் பேரின் சத்தத்தையும் கேட்க
அதற்கு காது இருந்திருந்தால்..

ஒருவேளை கருணையும் வந்து
எதிர்த்திசையில்
எந்திர கையை வீசியும் இருக்கும்..

காதுகளும் கருணையுமற்ற எந்திரங்களைக் கொண்டே
எதையும் சாதித்துக் கொள்கிறது அதிகார வர்க்கம்..

அத்தனைப் பேரின் கதறல்களையும், கண்ணீரையும் கண்டுகொள்ளாமல்
ஓரடி கூட மிச்சம் வைக்காமல்
எங்கள் தலை மீது கால் வைத்து
மூன்றாவது அடியையும் அளந்து கொண்டிருந்தது அதிகார வர்க்கம்….


ஏகலைவன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க