அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளை விசாரிப்பதாக நாடகமாடிக்கொண்டிருந்த இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) தலைவரான மாதபி புரி புச் அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை ஹிண்டன்பர்க் ஆய்வமைப்பு கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து மாதபி புரி புச் செபியின் உறுப்பினராக இருந்த காலத்திலேயே பல முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததை காங்கிரஸ் கட்சியும் அம்பலப்படுத்தியது.
இந்திய பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்துதல், முதலீட்டாளர்களின் நலன் பேணுதல், சந்தை மோசடிகளுக்கு எதிராக செயல்படுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டிய செபியின் தலைவரின் மீதே ஹிண்டன்பர்க் ஆய்வமைப்பும் காங்கிரஸ் கட்சியும் ஆதாரப்பூர்வமாகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பது இந்திய முதலீட்டாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாதபி புரி புச்சை பதவி விலக வலியுறுத்தி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பாசிச மோடி அரசானது ஹிண்டன்பர்க் மற்றும் காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. கண் துடைப்பிற்காக செபி தலைவரை விசாரிப்பதற்கு விசாரணைக் கமிட்டியை கூட அமைக்கவில்லை. பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு உடந்தையாக இருந்ததோடு, செபியின் விதிமுறைகளை மீறி மோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ள செபி தலைவரைக் காப்பாற்றுவதற்காக தனக்கே உரிய பாசிசத் திமிருடன் நடந்து கொள்கிறது, மோடி அரசு.
ஹிண்டன்பர்க் மற்றும் காங்கிரஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவரான மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. முதலாவதாக, மாதபி புரி புச் மற்றும் அவரது கணவரான தாவல் புச் ஆகிய இருவரும் 2015-ஆம் ஆண்டில் சுமார் ரூ.60 கோடியை கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானியால் நடத்தப்படும் “ஐ.பி.இ. ப்ளஸ் ஃபண்ட்” (IPE Plus Fund) என்ற ஷெல் (வரி ஏய்ப்பு, பண மோசடி செய்வதற்காக கரிபீயன் தீவுகளில் நடத்தப்படும் பதிவு செய்யப்பட்ட வர்த்தகம் செய்யாத) நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்; இதனால்தான் அதானி குழுமத்தின் மீது செபி நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ள நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதை ஒப்புக்கொண்ட மாதபி புரி புச் குடும்பம், அந்நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்து அனில் அஹூஜா, தவால் புச்சின் இளமைக்கால நண்பர் என்பதால்தான் முதலீடு செய்தோம் என்று தன்னுடைய மறுப்பு அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் அனில் அஹுஜா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அதானி குழுமத்தின் உயர்பதவிகளில் இருந்தவர் என்ற தகவல் வெளியாகி அதானி குழுமத்திற்கும் புச் குடும்பத்திற்கும் உள்ள உறவு அம்பலப்பட்டு நாறிப் போனது.
படிக்க: அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
இரண்டாவதாக, எந்தவொரு ரியல் எஸ்டேட் அனுபவமும் இல்லாத மாதபி புச்சின் கணவர் தவால் புச், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை (REIT – Real Estate Investment Trust) எனப்படும் ரெய்ட் திட்டங்களில் மிகப்பெரிய முதலீட்டாளராக இருக்கும் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் ஆலோசகராக 2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது; அதன்பிறகு செபி ரெய்ட் திட்டங்கள் குறித்து பல்வேறு ஒழுங்குமுறைகளைக் கொண்டுவந்திருப்பதன் மூலம் பிளாக்ஸ்டோன் நிறுவனமும் புச் குடும்பமும் ஆதாயம் அடைந்திருக்க வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது. மும்பையில் அதானி குழுமத்திற்குச் சொந்தமாக உள்ள பந்த்ரா-குர்லா வளாகத்தை வாங்குவதற்காகப் பேச்சுவார்த்தையில் பிளாக்ஸ்டோன் ஈடுபட்டு வருவதன்மூலம் அவ்விரு நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு இங்கு குறிப்பிடத்தக்கது.
மூன்றாவதாக, செபியின் முழுநேர ஊழியர்கள் பணம் சம்பாதிக்கும் வகையில் பிற எந்த பொறுப்பிலும் இருக்கக்கூடாது என்ற சட்டவிதியையும் மீறி, 2017-ஆம் ஆண்டிலிருந்து அகோரா கன்சல்ட்டிங் என்ற வர்த்தக ஆலோசனை நிறுவனத்தை இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மாதபி நடத்தி வந்துள்ளதையும் ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம், மாதபி புச் எந்த இந்திய நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினார் என்று பொதுவெளியில் கூற வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஹிண்டன்பர்க்கின் இக்குற்றச்சாட்டானது, 2014-க்குப் பிறகு அதானி குழுமத்தின் ஆக்டோபஸ் கரங்கள் நாட்டின் பல துறைகளுக்கு விரிவடைந்த நிலையில், தன் குழுமத்தின் வளர்ச்சிக்காக அதானி குழுமமானது மாதபி புரி புச்சுடன் கூட்டு வைத்துக்கொண்டிருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.
இவையன்றி காங்கிரஸ் கட்சியும் மாதபி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மாதபி புரி புச் செபியின் முழுநேர ஊழியராக இருந்த 2017 முதல் 2024 வரையிலான காலத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிடமிருந்து ரூ.16.80 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளது; செபி விசாரணை நடத்தி வரக்கூடிய வொக்கார்ட் லிமிடெட் (wockhardt limited) நிறுவனத்துடன் இணைந்த கேரோல் இன்ஃபோ சர்வீசஸ் நிறுவனத்திற்கு தன்னுடைய சொத்துகளை வாடகைக்கு விட்டிருப்பதன் மூலம் ரூ.2.16 கோடி சம்பாதித்திருப்பது; மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட், டாக்டர் ரெட்டிஸ், பிடிலைட், ஐ.சி.ஐ.சி.ஐ., செம்கார்ப், விசு லீசிங் & பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு தன்னுடைய அகோரா கன்சல்ட்டிங் நிறுவனத்தின் மூலம் ஆலோசனைகளை வழங்கி ரூ.2.95 கோடி சம்பாதித்தது ஆகிய முறைகேடு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
இவ்வாறு மாதபி அதானி குழுமத்திற்கு ஆதரவாகவும் சட்டதிட்டங்களை மீறியும் பணம் சம்பாதிப்பதற்காக முறைகேடுகளில் ஈடுபட்டுச் செயல்பட்டுக் கொண்டிருந்தது செபி நிர்வாகக் குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் மோடி அரசுக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. மாதபியின் நடவடிக்கைகளைத் தெரிந்தேதான் அனுமதித்துள்ளார்கள். இவர்களும் மாதபியை போன்று அதானியுடன் உறவு வைத்துள்ளதற்கும் முறைகேடுகளில் ஈடுபட்டு பணம் சம்பாதித்துள்ளதற்கும் வாய்ப்புகளே உள்ளது. ஆகவே, இதன்மூலம் ஹிண்டன்பர்க் விவகாரத்தில் ஒட்டுமொத்த செபி அமைப்பும் மோடி அரசும் அதானிக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது உறுதியாகிறது. ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளும் உண்மையாகின்றன.
படிக்க: “அதானியே வெளியேறு” என முழங்கும் கென்ய மக்கள்
ஹிண்டன்பர்க் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் ஆரம்பத்திலிருந்தே அதானி குழுமத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஜனவரியில் 2024-இல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் வலைப்பின்னல் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அதானி குழுமத்திற்கு எதிராக நடக்கும் விசாரணையைச் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போது, மூன்றாம் தரப்பு அமைப்பின் அறிக்கையை உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது என்று கூறி விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற மறுத்தது சந்திரசூட் தலைமையிலான அமர்வு.
ஆனால், தற்போது அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு செபியின் தலைவரே உடந்தையாக இருந்திருக்கிறார் என்று ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்ட போதிலும், குற்றம் சுமத்தப்பட்டவரே நீதிபதியாக இருக்க முடியாது என்ற நியதியின் படி கூட, விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற தனக்கு அதிகாரம் உள்ள போதிலும் உச்சநீதிமன்றம் அதை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது அதானிக்கு ஆதரவான நடவடிக்கையே அன்றி வேறல்ல.
செபி அரசு நிறுவனமல்ல.. “அதானியின் நிறுவனம்”
ஹிண்டன்பர்க் குற்றஞ்சாட்டியுள்ள அதானி குழுமத்தின் மீதான பங்குச்சந்தை மோசடிகளை விசாரித்து வருவதற்கு முன்பிருந்தே செபி அதானி குழுமத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாவதற்கு முன்னரும் அதானி குழுமம் பங்குச்சந்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாகப் பலமுறை குற்றஞ்சாட்டி விசாரித்த செபி, அவ்வழக்குகளில் பெரும்பாலானவற்றை மிகச் சொற்பமான அபராதத் தொகையோடு முடித்துவைத்துள்ளது.
மேலும் 2023-இல் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர், அதைப் பற்றி செபி உடனே விளக்கம் அளிக்காமல் இருந்தது; செபியின் முக்கியப் பொறுப்புகளில் அதானியின் உறவினர் இருப்பதாகச் செய்தி வெளியாகியது; அதானியின் பங்குச்சந்தை மோசடிகளுக்கு எதிரான விசாரணையை செபியிடம் இருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றக்கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் விசாரணையை செபியிடம் இருந்து மாற்ற மறுத்ததை வரவேற்று கௌதம் அதானியே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்துகளைப் பதிவிட்டது ஆகிய நடவடிக்கைகளும் செபி அதானி குழுமத்தின் கைப்பாவையாகச் செயல்பட்டு வருவதையே நமக்கு உணர்த்துகின்றன.
அந்த அடிப்படையிலிருந்துதான், அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரித்து முடிக்காமல் செபி இழுத்தடித்து வருகிறது. 2023 ஆகஸ்ட் மாதத்திலேயே, மொத்தமுள்ள 24 விவகாரங்களில் 22 விவகாரங்கள் மீதான விசாரணைகள் நிறைவடைந்து விட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த செபி, அந்த ஆவணங்களைக் கூட வெளிப்படையாக வெளியிடவில்லை. மேலும், மீதமுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளையும் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாய் விசாரித்து வருவதாக நாடகமாடியே வந்துள்ளது.
தற்போது, செபி தலைவரைக் குற்றஞ்சாட்டி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னரே, மக்கள் மத்தியில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக மீதமுள்ள இரண்டு விவகாரங்களில் ஒன்றை விசாரித்து முடித்துள்ளதாகச் செபி அறிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகவில்லை என்றால், நிச்சயம் அதைக்கூட அறிவித்து இருக்காது. இன்னும் சில ஆண்டுகள் விசாரணையை இழுத்தடித்து வழக்கை ஊற்றிமூடவே முயன்றிருக்கும்.
ஆகவே, இன்னும் சில மாதங்களில் அதானி குழுமத்தின் மீதான விசாரணையை முடித்து அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் செபி தாக்கல் செய்யலாம். அந்த அறிக்கையை வெளிப்படையாக வெளியிட்டால் அதை ஹிண்டன்பர்க் மீண்டும் அம்பலப்படுத்தும் என்பதால், உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறைகளில் தாக்கல் செய்யப்படலாம். கடந்த காலங்களைப் போல, அதானி குழுமம் சில பங்குச் சந்தை முறைகேடுகளில் மட்டும் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அபராதத் தொகையோடு வழக்கு முடிக்கப்படலாம்.
படிக்க: இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி
இவ்வாறு அரசு நிறுவனத்தைப் போலச் செயல்படாமல் அதானியின் நிறுவனத்தைப் போலச் செயல்பட்ட செபி, மோடி அரசும் அதானி குழுமமும் “வெளிநாட்டுச் சதி” என்று பரப்புரை செய்துவருவதற்குச் சாதகமாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அதை நிறுவும் நடவடிக்கையில் மட்டும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதானி குழுமத்தின் பங்குகளை ஷார்ட் செய்தது குறித்து விளக்கம் அளிக்கும் படியும், நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஹெட்ஜ் நிதி மேலாளருடன் அதானி குழுமத்தின் தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், அதனை வர்த்தகம் செய்ய அவரை அனுமதித்ததாகவும் குற்றஞ்சாட்டி செபி ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், 2022-ஆம் ஆண்டு செபியின் தலைவராக மாதபி புரி புச் பதவியேற்ற பிறகு, அவரை கௌதம் அதானியே இரண்டு முறை நேரடியாகச் சந்தித்துப் பேசியுள்ளார் என்ற தகவலும் ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் தற்போது வெளியாகியுள்ளது. செபியின் தலைவர் அதானி குழுமத்தின் கைப்பாவையாகவே செயல்பட்டுள்ளார் என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று கூற முடியும்.
இந்துராஷ்டிரத்தின் அடிநாதமே கும்பலாட்சி
அதானி குழுமத்திற்கும் செபி தலைவருக்கும் உள்ள உறவை அம்பலப்படுத்தி வெளியாகிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் மிகச் சொற்ப அளவே சரிந்தன. அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.20,000 கோடி வரையிலேயே இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு சென்ற முறை ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை ஒப்பிடும்போது மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசமாகும்.
2023-இல் வெளியாகிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலகப் பணக்காரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்திலிருந்த கௌதம் அதானி, ஒரு மாதத்தில் 30-ஆவது இடத்திற்குச் சரிந்தார். ஆனால் தற்போது ஃப்ளூம்பெர்க் இணையதளத்தின் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவரப்படி அதானி உலகப்பணக்காரர்கள் வரிசையில் 105 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் 14-வது இடத்தில் உள்ளார். இவ்வாறு அசுர வேகத்தில் அதானி சரிவிலிருந்து மீண்டெழுந்ததற்கு மோடி-அமித்ஷா கும்பலே காரணமாகும்.
அதற்குச் சான்றாக, சென்ற ஆண்டு ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கியது; கிரீஸ் நாட்டின் கவாலா, வாலோஸ், அலெக்ஸாண்ட்ரூபோலி ஆகிய துறைமுகங்களில் அதானி முதலீடு செய்ய கிரீஸ் பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது; மகாராஷ்டிரா சிவசேனா-பா.ஜ.க. மாநில அரசு ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியை அதானிக்கு தாரைவார்ப்பதற்காக தாராவி மறுசீரமைப்புத் திட்டத்தை அதானிக்கு வழங்கியது உள்ளிட்ட மோடி அரசின் பல நடவடிக்கைகளை நாம் கூற முடியும்.
தற்போதும் கூட, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதானி-செபி கூட்டு மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு அதற்கெதிராக கண்டனங்கள் எழுந்து கொண்டிருக்கிற சமயத்திலும் மோடி அரசு அதானியின் நலனுக்காக அண்டை நாடுகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கான சட்ட விதிகளைத் திருத்தி இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருப்பது பெயரளவிலான சட்டப்பூர்வ, ஜனநாயக ஆட்சி அல்ல; ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல்களின் ஆட்சி என்பதற்கு இதைவிட வேறென்ன சான்றாக அமைய முடியும்.
படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்
மேலும், இரண்டு ஹிண்டன்பர்க் அறிக்கைகளுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் அறிக்கை, பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் ஆய்வு செய்தி ஆகியவை வெளியாகியுள்ள போதிலும், அவை அதானி நிறுவன பங்குகள் மீது பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை. ஹிண்டன்பர்க் அறிக்கை மீதான விவாதங்களும் சில நாட்களில் மறைந்துவிடும். அந்த அளவிற்கு ஊடகத்துறையில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.
இந்துராஷ்டிரம் என்பதே ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க; அம்பானி-அதானி கும்பலின் ஆட்சியை நிறுவுவதே ஆகும். அரசியல் அதிகாரத்தில் காவிகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது என்றால், பொருளாதாரத்தில் அம்பானி-அதானிகளின் ஆதிக்கம் நிறுவப்படுகிறது. மோடி ஆட்சியில் அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பலுக்காக சட்டத்திட்டங்கள் மாற்றப்படுவது மட்டுமின்றி, பார்ப்பன, பனியா, குஜராத், சிந்தி, மார்வாடி வகைப்பட்ட அதிகார வர்க்கத்தினர் அரசின் அனைத்து உறுப்புகளிலும் புகுத்தப்படுவதும் அந்த நோக்கத்திற்காகத்தான். சட்டப்பூர்வ வழிமுறைகளிலும் சட்டத்தை மீறியும் இவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். செபியின் தலைவரே அதற்கு சிறந்த சான்றாவர்.
செபியின் தலைவர் மாதவி புரி புச்சின் குடும்பப்பெயரான புச், குஜராத்திலும் மும்பையிலும் வாழும் ஓர் குறிப்பிட்ட பார்ப்பன மற்றும் பார்சி சமூகப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடும்பப் பெயர் ஆகும். செபியின் தலைவர் போன்ற அரசின் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக பணியாற்றியவர்களே நியமிக்கப்பட்ட நிலையில், தனியார் நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் பணியாற்றிய மாதபி செபியில் பணியமர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே செபியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதும் அம்பானி-அதானி கும்பலின் நலனுக்காகத்தான்.
ஆகவே, ஹிண்டன்பர்க் அறிக்கை மூலமும் காங்கிரஸின் குற்றச்சாட்டுகள் மூலமும், இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க; அம்பானி-அதானி என்ற சிறு கும்பலுக்கான பாசிச ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது நிரூபணமாகிறது. இந்த கும்பலாட்சி நாட்டின் கோடானுகோடி உழைக்கும் மக்களின் நலன்களுக்கு நேரெதிரானது ஆகும். எனவே, இந்த கும்பலாட்சிக்கு எதிராக எத்தகைய வழிமுறையில் செயலாற்றப் போகிறோம் என்பதே பாசிசத்திற்கு எதிராகச் செயலாற்றிக் கொண்டிருக்கும் புரட்சிகர, ஜனநாயக சக்திகளை எதிர்நோக்கியிருக்கும் கேள்வியாகும்.
அமீர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram