டந்த செப்டம்பர் 4 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜயினி பகுதியின் கொய்லா படக் என்னும் பரபரப்பான சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அவ்வழியாகச் சென்ற மக்கள் எவரும் தடுக்காமல் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்குக் கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அப்பெண் “லோகேஷ் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மது அருந்தச் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக” போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

அப்பெண் அளித்த புகாரின் பேரில் அந்த இளைஞர் மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது குற்றத்தை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து அந்நபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பரப்பிய நபரை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “மத்தியப் பிரதேசம் உஜ்ஜயினியில் பட்டப்பகலில் பெண் ஒருவர் நடைபாதையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கொடூரமானது. இன்று நம் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என மொத்த நாடும் திகைத்துப் பார்க்கும் நிலையில் அந்த பெண்ணை காப்பாற்றுவதற்குப் பதிலாக அவ்வழியாகச் சென்றவர்கள் அதனை வீடியோ எடுத்துள்ளனர். இதுபோன்ற மனிதநேயமற்ற சம்பவம் கலங்கத்தை ஏற்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: பாலியல் பொறுக்கிகளை பாதுகாக்கும் பா.ஜ.க கும்பல்!


மேலும் இச்சம்பவம் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, “திறந்தவெளி சாலையில் பாலியல் வன்புணர்வுகள் தொடங்கியுள்ளன. மாநிலத்தில் தினமும் 18 பெண்கள் பாலியல் வன்புணர்வுகளுக்கு ஆளாகின்றனர் அல்லது பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். முதலமைச்சரின் சொந்த ஊரிலேயே நிலைமை இப்படியெனில் மற்ற பகுதிகளில் என்ன நிலைமை என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். தலித் மற்றும் பழங்குடியின பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களையும் உணர்ந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

முக்கியமாக கடந்த வருடம் செப்டம்பரில் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டது. அதில் உஜ்ஜயினியில் 15 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ரத்தம் தோய்ந்த அரை நிர்வாண ஆடைகளுடன் வீடு வீடாகச் சென்று ஒவ்வொருவர் வீட்டின் கதவைத் தட்டி உதவி கேட்டதற்கு யாரும் உதவ முன்வரவில்லை. அதேபோன்று தான் இந்த வருடமும்; பொதுவெளியில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படும்போது அதனைத் தடுக்காமல் வீடியோ எடுத்துச் செல்லும் மக்களின் மனநிலை எப்படியானது என்பதை வார்த்தைகளால் கூற முடியாது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மனவலி அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை சக பெண்களும் உணராமல் கடந்து சென்றுள்ளனர்.

பார்ப்பனியம் பெண்களை போகப் பொருளாகக் கருதுவதை போதிக்கிறது. அந்த பார்ப்பனியத்தை உயர்த்திப்பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் சமூகத்தில் வேரூன்றி வருகிறது. அதன் காரணமாக, இது போன்ற கொடூர சம்பவங்கள் மக்கள் மத்தியில் இயல்பானதாக மாறி வருகின்றன.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க