செப்டம்பர் 10 ஆம் தேதி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த மூன்று ஆண்டுகளிலிருந்ததை விட தற்போது மிகப்பெரிய அளவிற்கு குறைந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 68.56 டாலராக குறைந்துள்ளதாக பெட்ரோலியம் அமைச்சகத்தின் கீழ் உள்ள பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசானது கச்சா எண்ணெய்யினை ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் போன்ற மேற்கத்திய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. இதில் ரஷ்யாவிடமிருந்து மட்டும் 40 சதவிகிதம் கச்சா எண்ணெய்யைக் குறைவான விலைக்கு இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடங்கியவுடன் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொண்டன. இதனால் மேலும் அதிகமான கச்சா எண்ணெய்யினை மிகக் குறைவான விலைக்கு இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதன்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 46 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யினை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செத்துள்ளது.
இந்நிலையில்தான் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் உள்ள திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு செல் (PPAC) வெளியிட்ட தகவலின்படி சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது மிகவும் குறைந்து, 1 பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 68.56 டாலராக உள்ளது. மேலும் கச்சா எண்ணெய்யின் தொடர் விலை குறைப்பால் பிப்ரவரி மாதத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 1 லிட்டர் கச்சா எண்ணெய்யினை சுத்திகரிப்பு செய்ததற்கு 9.57 சதவிகிதம் லாபத்தைப் பெற்றன. அதன்படி நிகலாண்டில் கச்சா எண்ணெய் விலை குறைப்பால் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு 33.58 கோடி வரை லாபம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
படிக்க: பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!
அடுத்ததாக சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நிலவரப்படி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையினை தினமும் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில் கச்சா எண்ணெய் விலை 68.56 டாலராக குறைந்துள்ள போதும் ஒன்றிய அரசானது 1 லிட்டர் பெட்ரோலை 100.75 ரூபாய்க்கும் டீசலை 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது. இந்நிலையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 42. 90 ரூபாய் அடக்க விலைக்கும் டீசல் 42.63 ரூபாய் அடக்க விலைக்கும் குறைக்கப்பட வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13.60 ரூபாயும், டீசலுக்கு 13.82 ரூபாயும் குறைக்கப்பட வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய அரசானது பெட்ரோலுக்கு 32.9 சதவிகிதமும் டீசலுக்கு 31.8 சதவிகிதமும் கலால் வரி விதித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு பெட்ரோல் டீசல் வரி மூலம் 7.48 லட்சம் கோடியை மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ளது. அதேபோன்று இந்த நிதியாண்டில் இதுவரை 7.51 லட்சம் கோடியினை பெட்ரோல் டீசல் வரி மூலம் மக்களிடமிருந்து வழிப்பறி செய்துள்ளது. பெட்ரோல், டீசல் வரிவிதிப்பின் மூலம் தனிநபர் குடும்ப வருவாயில் ஏழரை சதவீதம் எரிபொருளுக்காகச் செலவிடப்படுகிறது. இத்தொகையானது உணவிற்காகச் செலவிடப்படும் தொகையை விட அதிகம் என்று சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கச்சா எண்ணெய் விலை குறைப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 32.5 சதவிகிதம் குறைந்துள்ள போதிலும் பெட்ரோல், டீசல் விலையினை குறைப்பதற்கு ஒன்றிய அரசு மறுக்கின்றது என்று கூறியுள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் ஒன்றிய மோடி அரசானது கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்திற்காகவும், மக்களிடமிருந்து அதிகப்படியான வரியினை சுரண்டுவதற்காகவும் பெட்ரோல், டீசல் விலையினை குறைக்காமல் உள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram