“புதிய மூன்று குற்றவியல் சட்டங்களைத் திரும்பப்பெறு”
கோவை – மேட்டுப்பாளையம் அரங்கக்கூட்டம் | செய்தி – புகைப்படம்
பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறு என்ற தலைப்பில் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்து அதனூடாக அரங்கக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் செப்டம்பர் 22 அன்று இரண்டாவது அரங்கக் கூட்டம் எழுச்சிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த அரங்கக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் தோழர் மாறன் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைக்குழுவின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
தோழர் மாறன் தனது தலைமையுரையில், மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் பிரச்சாரம் மற்றும் அரங்கக் கூட்டங்களை நடத்தி வருகிறோம். இந்த சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் ஒருபக்கம் போராடினாலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜனநாயக சக்திகள், மாணவர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகள் இணைந்து மாபெரும் மாநாட்டை நடத்தியுள்ளனர். அதற்கடுத்து மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் வகையிலான தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தை அறிவித்து தொடர்ச்சியாக நான்கு அரங்கக் கூட்டங்களை நடத்தியுள்ளோம். தற்போது மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகள் மற்றும் இயக்கங்களை இணைத்துக் கொண்டு இந்த அரங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். இந்த சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து செயல்பட வேண்டும் எனப் பேசினார்.
வாழ்த்துரையில் மக்கள் அதிகாரத்தின் தோழர் இராஜன் அவர்கள் பேசுகையில், மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த போது ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலை எதிர்கொண்டோம். பாசிச கும்பலுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யக் கூடாது என பாசிச பி.ஜே.பி குண்டர்படையை சேர்ந்தவர்கள் மிரட்டுகின்றனர். அக்கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகிறோம். இனி நாம் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது எனக் கூறி முடித்தார்.
மேலும், வழக்கறிஞர் சுலைமான் அவர்கள் பேசுகையில், பிரிட்டிஷ் காலத்துச் சட்டம் என்று கூறித் தான் திருத்தத்தை மேற்கொண்டார்கள், ஆனால், மக்கள் போராடக் கூடாது என்பதற்காக ஊஃபா போன்ற கருப்பு சட்டங்களை மீண்டும் சிறப்புப் பிரிவாக பொது சட்டத்தின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இனம், மொழி, சாதி, ரீதியாக கும்பல் வன்முறை நடைபெற்றால் அதற்கு ஆயுள் தண்டனை எனக் கூறப்பட்டுள்ளதில், மதம் மட்டும் இல்லை. வடமாநிலத்தில் நடைபெறும் மதவெறி கும்பல் படுகொலைகளிலிருந்து தவிர்க்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சர்வாதிகாரம் நோக்கிக் கொண்டுசெல்வது மக்கள் புரட்சிக்குத் தான் இட்டுச் செல்லும். வழக்கறிஞர்கள் செய்யும் பணியை மக்கள் மத்தியில் மக்கள் அதிகாரம் அமைப்பு கொண்டுசேர்த்து வருகிறது. மேலும், மக்கள் மத்தியில் விவாதப் பொருளை உருவாக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்று கூறினார்.
மேலும், அகில இந்திய வழக்கறிஞர்கள் குழுமம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெமிஷா அவர்கள் பேசுகையில், ஆட்டுமந்தைகளாக வீதிகள் தோறும் உலாவிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியிலே பொதுவுடைமை கருத்துகளை விதைத்து இந்த தேசமெங்கும் ஒரு பொதுவுடைமை கொள்கையோடு அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்கிற உன்னத லட்சியத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய மக்கள் அதிகாரம் அமைப்பினருக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிட்டிஷ் காலனியாக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் 75 முறைக்கும் மேல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் 35 முறை இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் திருத்தம் செய்யப்பட்ட சட்டம் இது. அப்படியென்றால் இப்போது இருக்கிற சட்டத்தைச் சங்கப் பரிவார கும்பல் சொல்வது போல காலனியாதிக்க சட்டம் என்று சொல்ல முடியுமா? ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மக்களுடைய உரிமையை நசுக்குவதற்காகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கு எதிராக ஜல்லிக்கட்டு போராட்டம் போலக் கட்டியமைக்க வேண்டும் என்றார்.
சிறப்பு பேச்சாளரான ஜாக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தோழர் சக்திவேல் அவர்கள் பேசுகையில், இந்த அரங்கத்தின் ஒரு பகுதி இளைஞர்கள் அமர்ந்திருந்திருக்கின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வணிகர்கள் அனைவரின் உரிமையை ஒடுக்குவதற்கான சட்டம் தான் இது. இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்படப் போவது சாமானிய மக்கள் தான், கார்ப்பரேட் முதலாளிகள் அல்ல. இனிமேல் காவல் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடமாக மாறிவிடும். இந்த சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென்றால் விஜய் போன்ற நபர்கள் உருவாக்கும் கட்சிக்கும் பின் செல்லாமல் இப்படிப்பட்ட இயக்கங்களோடு இணைந்து போராடுவதுதான் ஒரே ஆயுதமாக இருக்கும். அதற்காக மக்கள் மத்தியில் இந்த சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வைத் தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்று கூறினார்.
சிறப்புப் பேச்சாளர் மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பேசுகையில், இது வழக்கறிஞர்களுக்கான பிரச்சனை அல்ல அனைத்து மக்களுக்குமான பிரச்சனை. சட்டத்தின் ஆட்சியை ஒழித்துக்கட்டிவிட்டுச் சிறு கும்பலின் ஆட்சியை உருவாக்குவதே இக்கும்பலின் நோக்கம். அது பிரதமர் மற்றும் ஆணையங்களை வைத்துக்கொண்டு தாங்கள் உருவாக்க இருக்கும் பாரத வாசம் வீசும் பல்வேறு சட்டங்களைத் திருத்தியுள்ளது பாசிசக் கும்பல். அதன் தொடர்ச்சி தான் இந்த மூன்று புதிய குற்றவியல் சட்டத் திருத்தம். ஆர்.எஸ்.எஸ் மற்றும் கார்ப்பரேட் நலனுக்காகச் சேவை செய்யும் வகையிலான பல்வேறு சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கெதிராக போராடும் மக்களை ஒடுக்குவதற்காகப் போலீசுக்கு அதிக அதிகாரத்தைக் கொடுத்துள்ளது இச்சட்டம். எனவே இந்த சட்டத்தை நீதிமன்றத்தில் முறையிட்டு முடிவுக்குக் கொண்டுவர முடியாது. மாறாக லாரி ஓட்டுநர்கள் போராட்டம் மற்றும் விவசாயிகள் போராட்டம் போன்றதொரு நடவடிக்கைகள் மூலம் தான் பாசிசக் கும்பலைப் பணிய வைக்க முடியும். ஓர் அரசியல் நோக்கம் கொண்ட, மக்களுக்கு ஜனநாயகம் வழங்கக் கூடிய அமைப்பு வேண்டும். அந்நோக்கத்தில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைக்கப் போராட வேண்டும் என்று கூறி உரையை முடித்தார்.
நன்றியுரையில் மக்கள் அதிகாரத்தின் மண்டல இணைச் செயலாளர் தோழர் குமார் அவர்கள் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்ட மாணவர்களுக்கும், பெண்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இறுதியாக, ம.க.இ.க.வின் சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்று கூட்டம் நிறைவடைந்தது.
தகவல்
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
94889 02202.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram