மக்கள் சீனக் குடியரசு – 72 | மீள் பதிவு
தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, நிலப் பிரபுக்களையும் பிற்போக்கு முதலாளிகளையும் ஏகாதிபத்திய தாசர்களையும் வீழ்த்தி மக்கள் சீனக் குடியரசை 75 ஆண்டுகளுக்கு முன்னர் 01-10-1949-ல் நிறுவியது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1921, ஜூலை 1-அன்று துவங்கப்பட்டு 28 ஆண்டுகளில் ஒரு மகத்தான புரட்சியை சாதித்தது. புரட்சியை நோக்கிய பயணத்தில் பெரும் வெற்றிகள், பேரிழப்புகள் என அனைத்து சூழல்களையும் கையாண்டுதான், வெற்றிகரமாக புரட்சியை சாதித்தது.
டாக்டர் சன் யாட் சென் தலைமையிலான கோமிண்டாங் கட்சியுடன் இணைந்து பிற்போக்கு நிலப்பிரபுத்துவக் கும்பல் மற்றும் ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற தரகுமுதலாளித்துவ கும்பல் ஆகியோருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முன்னணியைக் கட்டியது.
படிக்க : லெபனான், காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டம் | புகைப்படக் கட்டுரை
சன் யாட் சென்னின் மறைவிற்குப் பிறகு கோமிண்டாங் கட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்த சியாங்–கே–ஷேக், கம்யூனிஸ்ட்களுடனான ஐக்கிய முன்னணியை சீர்குலைக்கும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டான்.
இக்காலகட்டத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் கமிட்டியில் இருந்த சென்டு–ஷியுவினால் தலைமை தாங்கப்பட்ட வலது சந்தர்ப்பவாதக் கும்பல், ஐக்கிய முன்னணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பை முதலாளித்துவ கோமிண்டாங் கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன் வைத்தது. சீனாவின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை கோமிண்டாங் தான் தலைமை தாங்க முடியும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு இலாயக்கற்றது என்றும் முன் வைத்தது இந்தக்கும்பல்.
அதாவது முதலாளிகளின் தலைமையில், அவர்களுக்குக் கீழ் ஒரு வாலாக கம்யூனிஸ்ட்டுகள் செயல்பட்டு நிலப் பிரபுத்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் ஒழிக்க வேண்டும் என்று கூறியது.
கட்சிக்குள் இருந்த இடது சந்தர்ப்பவாத சாங்குவா – டாவோ பிரிவினர் வெறுமனே தொழிலாளி வர்க்க இயக்கம் மட்டும் தனித்துச் செயல்பட வேண்டும் என முன் வைத்தனர்.
இந்த இரு தரப்புமே, யார் தலைமையில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடக்கவேண்டும் என்பதில் எதிர் எதிர் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சாராம்சத்தில் சீனாவின் நிலப்பிரபுத்துவத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் நேரடியாக சுரண்டப்படும் வர்க்கமும், பாட்டாளி வர்க்கத்தின் நேச சக்தியுமான விவசாய வர்க்கத்தினரை கண்டுகொள்ளாமல் விடுவதில் ஒரே நிலைப்பாட்டை எடுத்தன.
அப்போதுதான் தோழர் மாவோ, தொழிலாளி வர்க்கத் தலைமையில், விவசாயிகளை பிரதானமான நட்பு சக்தியாகக் கொண்டு அவர்களை அணிதிரட்டி சீனாவில் சிவப்புப் பிரதேசங்களை உருவாக்கி அதனை விரிவுபடுத்தி சீனப் புரட்சியை சாதிக்க முடியும் என்பதை முன் வைத்தார்.
மாவோ முன் வைத்த அந்தப் பாதை வெற்றியை சாதித்தது. சீனப் புரட்சி அக்டோபர் 1, 1949-இல் நிறைவுற்றது. ஆனால் 1926-ல் மாவோ இந்தப் பாதையை முன் வைத்த போது இந்த வெற்றிக்கு எந்த உத்தரவாதமும் இருந்திருக்க முடியாது. அன்று பிறரது கருத்தைப் போல் இதுவும் ஒரு கருத்து, அவ்வளவுதான்.
எனில், மாவோவினால் முன் வைக்கப்பட்ட வழி மட்டும் எப்படி வெற்றிபெற்றது ? ஏனெனில், அவர் தனது மூளையில் இருந்து அகநிலையாக இந்த வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து – மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.
1926-ம் ஆண்டு மார்ச் மாதத்தில், “சீன சமுதாயத்தில் வர்க்கங்களைப் பற்றிய ஆய்வு” (Analysis of the Classes in Chinese society) என்ற பெயரில் சீன சமூதாயத்தின் வர்க்க நிலைமைகளைப் பற்றிய பகுப்பாய்வை முன் வைத்தார். அதிலிருந்து சீனாவில் இருக்கும் வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்து, விவசாயிகளை திரட்டி, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான “புதிய ஜனநாயகப் புரட்சி” நடத்தப்பட வேண்டும் என்பதை முன் வைத்தார்.
படிக்க : “வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்
கட்சியில் இந்த வழிமுறை ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும் கூட பலரது சந்தேகங்கள், எதிர்க்கருத்துக்களுக்கு பதில் சொல்லி அவர்களுக்கு தமது ஆய்வை உணரச் செய்யும் வகையிலான போராட்டத்தை தொடர்ந்து நடத்தி, கட்சியில் இருப்பவர்களின் மனப்பூர்வமான அறிவுப்பூர்வமான பங்களிப்பை சாத்தியப்படுத்தினார்.
அத்தகைய போராட்டங்களுக்கு, 1930-ம் ஆண்டில் மாவோ எழுதிய “சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும்” எனும் ஆவணமே சான்று. இத்தகைய அரசியல்ரீதியிலான ஆய்வுப் பார்வையும் அமைப்புரீதியிலான ஒருங்கிணைந்த செயல்பாடுகளும் தான் சீனப் புரட்சியைச் சாதித்தது.
இன்று சீனா முதலாளித்துவ பின்னடைவை சந்தித்து பெயரளவிலான கம்யூனிஸ்ட் கட்சியால் ஆளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாலும், 1949-ல் நடைபெற்ற சீனப் புரட்சி அடித்தளமிட்டு வளர்த்த சோசலிச கட்டமைப்புதான் இன்று அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்கு பொருளாதாரம், அறிவியல், இராணுவம் என அனைத்திலும் முன்னேறியிருப்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.
சரண்