“வினேஷ் போகத்” பாசிச கும்பலை நடுங்க வைத்த நெஞ்சுரம்

வினேஷ் போகத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது, அவர் ஓர் பெண் வீராங்கனை; இந்தியாவிற்கு பதக்கம் வாங்கித்தர போட்டியிடுகிறார் என்பதற்கானது மட்டுமல்ல, பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடுகிறார் என்பதற்கானது. மொத்தத்தில் இந்திய மக்களிடம் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பிற்கு ஓர் உரைக்கல்லாக மாறியுள்ளார் வினேஷ்.

“எதிர்கால மல்யுத்த வீரர்களுக்காக நான் போராடுகிறேன், எனக்காக அல்ல. எனது வாழ்க்கை முடிந்தது, இது எனது கடைசி ஒலிம்பிக். நம் நாட்டில் எதிர்காலத்தில் மல்யுத்தம் விளையாட வரும் இளம் வீராங்கனைகளின் பாதுகாப்பிற்காக நான் சண்டை செய்கிறேன். அதற்காகத்தான் நான் ஜந்தர் மந்தரில் இருந்தேன், அதற்காகதான் தற்போது இங்கும் இருக்கிறேன்”, 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அரை இறுதி போட்டியில் வென்றப் பிறகு வினேஷ் போகத் உதிர்த்த வார்த்தைகள் இவை.

இதுவரை சர்வதேச போட்டிகளில் தோல்வி அடைந்திடாத, நான்கு முறை உலக சேம்பியனான ஜப்பான் வீராங்கனை யூய் சுசாகியை தகுதி சுற்றிலும் அதேநாளில் அடுத்தடுத்து கால் இறுதி, அரை இறுதி சுற்றிலும் வென்று 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதிசெய்து சாதனைப் படைத்தார் வினேஷ் போகத்.

இதனையடுத்து ஒட்டுமொத்த இந்திய மக்களும் வினேஷ் போகத்தை கொண்டாடத் தொடங்கினார். வினேஷ் போகத் வெற்றி பெற்ற தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை  ஆக்கிரமித்தன.  வினேஷ் போகத் வெற்றியை “இந்தியாவிற்கு பதக்கம்” கிடைத்துள்ளது என்பதைத்தாண்டி, பா.ஜ.க. கும்பலுக்கு கிடைத்த தக்க பதிலடியாக மக்கள் கொண்டாடினர்.

படிக்க : தமிழ்நாட்டில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத பெண்களின் கருவறை நுழைவுக்கனவு – நனவாகுமா?

ஏனெனில், வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் எதிர்த்து போட்டியிட்டது வெறுமனே மல்யுத்த வீராங்கனைகளை மட்டுமல்ல, பாசிசமயமாகியிருக்கும் இந்திய அரசுக் கட்டமைப்பையும் பாசிச பா.ஜ.க. கும்பலையும் சேர்த்துதான் என்பதை இந்திய மக்களும் அறிவர்.

கடந்தாண்டு மே மாதம் 28-ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பா.ஜ.க-வைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் என்ற பொறுக்கியை கைது செய்யக்கோரி புதிய நாடாளுமன்றத்தை முற்றகையிட சென்ற வினேஷ் போகத்தும் மற்ற மல்யுத்த வீரர்-வீராங்கனைகளும் தெருவில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். அந்தக்காட்சிகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் கொதிப்படைய செய்தது. ஆனால், பாசிசக் கும்பல் தனது அட்டூழியங்களை தொடர்ந்துக்கொண்டே இருந்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு ஒரு பெண்ணை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கை துளியும் மதிக்காமல் பிரிஜ் பூஷனின் கூட்டாளியான சஞ்சய் சிங்கை தலைவனாக நியமித்தது; பிரிஜ் பூஷனின் மகனுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி. சீட் வழங்கியது.  பிரிஜ் பூஷனை பினையில் விடுதலை செய்தது.

பாசிசக் கும்பலால் மல்யுத்த வீரர்கள் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பதிலடி கொடுப்பதற்காக, தான் பெற்ற பதக்கங்களை கங்கையில் தூக்கியெறிய முடிவெடுத்த வினேஷ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என முடிவு செய்து களமிறங்கினார். இறுதிச் சுற்றுக்கு முன்னேறி வினேஷ் போகத்திற்கு  தங்கம் உறுதி என ஒட்டுமொத்த நாடும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்,  பா.ஜ.க. கும்பல் தனது சதித் திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கியது.

இறுதிச் சுற்று தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர், 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக உள்ளது எனக்கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஒலிம்பிக் போடிக்கான பயிற்சியின்போதே, “ எனக்கு ஊக்கமருந்து அளிக்கப்படாலாம்” என்று வினேஷ் எச்சரித்திருந்த நிலையில், மோடி கும்பல்தான் இந்த சதியை அரங்கேற்றியது என்பதை தனியாக விளக்கவேண்டியதில்லை. இந்த சதியை அறிந்த வினேஷ் போகத் இறுதிவரை தனது உடல் எடையை பல்வேறு வகைகளில் போராடினார். “அவர் இறந்துவிடக் கூடும் என்று நினைத்தேன்” என வினேஷ் போகத்தின் பயிற்சியாளர் கூறுவதிலிருந்தே வினேஷ் எவ்வளவு கடுமையாக போராடியுள்ளார் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால், மோடிக் கும்பலின் சதியால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டதோடு, அரை இறுதி போட்டியில் வென்று அவர் உறுதி செய்திருந்த வெள்ளிப் பதக்கமும் ரத்து செய்யப்பட்டது.

படிக்க : உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் மோடி அரசு!

ஆனால், பாசிசக் கும்பலால் வினேஷ் போகத்திடமிருந்து பதக்கத்தை மட்டும்தான் பறிக்க முடிந்தது அவருடைய நெஞ்சுரத்தையும், மக்கள் ஆதரவையும் குலைக்க முடியவில்லை. “எனது போராட்டம் முடியவில்லை, இப்போதுதான் தொடங்கியுள்ளது” என்று வினேஷ் பேசியது அவருடைய நெஞ்சுரத்தை பறைசாற்றியது. வினேஷ் போகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் குரல் கொடுக்கத் தொடங்கினர். “எங்கள் தங்கமே நீதான்” என வினேஷ் போகத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர். வினேஷ் போகத் இந்தியாவிற்கு திரும்பிய போது அவரை வரவேற்பதற்கு நூறுக்கணக்கான மக்கள் குவிந்தனர். வினேஷ் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவருக்கு தங்க பதக்கம் வழங்கி கௌரவித்தனர்.

வினேஷ் போகத்திற்கு கிடைத்த ஆதரவு என்பது, அவர் ஓர் பெண் வீராங்கனை; இந்தியாவிற்கு பதக்கம் வாங்கித்தர போட்டியிடுகிறார் என்பதற்கானது மட்டுமல்ல, பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக நெஞ்சுரத்துடன் போராடுகிறார் என்பதற்கானது. மொத்தத்தில் இந்திய மக்களிடம் உள்ள பா.ஜ.க. எதிர்ப்பிற்கு ஓர் உரைக்கல்லாக மாறியுள்ளார் வினேஷ்.

பானு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க