க்டோபர் 2 ஆம் தேதி காசாவில் செயல்படும் அரசாங்க செய்தி ஊடகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதில் இனவெறி இஸ்ரேலானது ஒரு வருடமாக பாலஸ்தீனத்தின் காசா மீது நடத்திய கொடூர தாக்குதல்களின் மூலம் 902 குடும்பங்களை முழுவதுமாக படுகொலை செய்துள்ளது. 1,364 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரையும் கொன்றுள்ளது. மேலும் 3,472 குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் இருவர் மட்டுமே உயிருடன் உள்ள நிலையில் மற்ற அனைவரையும் படுகொலை செய்துள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், “அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தி வரும் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கி வருகின்றன. எனவே ஒரு வருடமாக நடந்து வரும் ரத்தம் தோய்ந்த போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்பைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இனவெறி இஸ்ரேலானது ஹமாஸ் ஆயுத குழுவை அழிக்கப் போகிறோம் என்கிற பெயரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது திட்டமிட்டு நடத்திவருகின்ற இனவெறி தாக்குதலில் தற்போது வரை குழந்தைகள், பெண்கள் உள்பட 41,000க்கும் அதிகமான பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 20,000 பேரைக் காணவில்லை என்றும் காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


படிக்க: காசா: அப்பாவி பாலஸ்தீன மக்களை கொலைசெய்யும் பாசிச இஸ்ரேல் | படக்கட்டுரை


இந்நிலையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்த பிறகும் இரத்தவெறி அடங்காமல் லெபனான் மீதும் தன்னுடைய போரை விரிவுபடுத்தித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி இஸ்ரேலால் நடத்தப்பட்ட பேஜர் வெடிப்பின் மூலம் 20க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வான்வழித் தாக்குதலின் மூலம் ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹஷன் நஸ்ரல்லாஹ் உள்பட முக்கிய தலைவர்களையும் கொன்றது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தரைவழி தாக்குதல்களைத் தொடங்கி உள்ளது இஸ்ரேல். லெபனானின் தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் போன்ற முக்கியப் பகுதிகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் 50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் சிரியாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாலஸ்தீனம், லெபனானை தொடர்ந்து தற்போது சிரியாவின் ராணுவ விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். இதன்மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள மற்ற நாடுகளுக்கும் போரை விரிவுபடுத்துகிறது.

இஸ்ரேலை எதிர்த்தும், பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்தக் கோரியும் இஸ்ரேல் உள்ளிட்டு பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். இருப்பினும் அமெரிக்காவின் துணை கொண்டு தன்னுடைய இனவெறி தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க