05.10.2024
லெபனான் மக்களை கொன்றொழிக்கும்
இஸ்ரேலின் பாசிச பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!
கண்டன அறிக்கை
அமெரிக்கா உள்ளிட்ட பல ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டணியோடு பாலஸ்தீனத்தின் மீது போர் தொடுத்து கைப்பற்றி 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை கொன்றொழித்த பாசிச இஸ்ரேல் அரசு, தற்பொழுது லெபனானை அழிக்கத் தொடங்கியுள்ளது.
40 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை படுகொலை செய்தும் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களை படுகாயமுறச் செய்து பாலஸ்தீனத்துக்கு சொந்தமான அந்த பாலஸ்தீனர்களை முற்றிலும் அழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அநீதிக்கு எதிராக உலகம் முழுவதும் மக்கள் போராடி வருகிறார்கள்.
பணக்கார இஸ்லாமிய நாட்டின் அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது சின்னஞ்சிறு நாடான லெபனான் இஸ்ரேலின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து நின்றது. அதன் விளைவாக அந்த நாட்டின் மீது மிகப்பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது பாசிச இஸ்ரேல்.
ஹிஸ்புல்லாவின் தலைவர் நஸ்ருல்லா படுகொலை, போராளிகள் பயன்படுத்திய பேஜர் கருவிகளில் வெடி மருந்தை நிரப்பி ஆயிரக்கணக்கான இடங்களில் வெடிக்கச் செய்தது என லெபனானில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது.
படிக்க: லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஐநா மன்றத்தில் லெபனான், ஈரான் உள்ளிட்ட நாடுகளை ஒழித்து கட்டுவோம் என்று இஸ்ரேலின் அதிபர் நெதன்யாகு கொக்கரித்த போது ஐ.நா. மன்றம் வாயை மூடி அமைதியாகவே இருந்தது. இப்போது பெயரளவில் அமைதிப் பேச்சுவார்த்தை என ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
தற்போது நடைபெற்று வருவது போர் அல்ல; அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டணியுடன் தன்னை பாதுகாத்துக் கொண்டு சின்னஞ்சிறிய ஏழை நாடுகளை அழித்துக் கொண்டிருக்கும் பாசிச இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கையே.
பாலஸ்தீனம் இல்லாமல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது, லெபனான் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக ஈரானையும் அழிப்பதற்கு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் முனைந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்டு மூன்றாவது உலகப் போரை உருவாக்குவதற்கான எல்லா வேலைகளிலும் அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கூட்டாளி நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை பாசிச இசுரேல் அரசு உளவு பார்த்த நிகழ்வுகள் எல்லாம் வெளியே வருகின்றன. உலக நாடுகள் யாவற்றுக்கும் அடங்காத எல்லா நாடுகளிலும் தங்களுடைய உளவாளிகளை ஊடுருவி ஆட்டம் காண வைக்கும் பாசிச இசுரேல் அரசு ஒழிக்கப்பட வேண்டும்.
எப்போதும் இல்லாத வகையில் பாசிச மோடி அரசு, பாசிச இஸ்ரேலுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் இஸ்ரேல் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப்பட்டு, இஸ்ரேலின் நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் முடக்கப்பட வேண்டும்.
அது மட்டுமே பாலஸ்தீனர்களுக்கும் லெபனான் மக்களுக்கும் நாம் கொடுக்கும் ஆதரவாக இருக்க முடியும். நம்முடைய கண்ணீரும் கருணையும் ஒருபோதும் பயன் தராது.
நாடு முழுவதும் உள்ள இஸ்ரேலின் அலுவலகங்களையும் பொருளாதார நிறுவனங்களையும் முடக்குவோம் !
பாலஸ்தீன, ஈரான் மக்களுக்கு தோள் கொடுப்போம் !
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram