29.09.2024
ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா படுகொலை!
லெபனான் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாசிச இஸ்ரேல் அரசு!
கண்டன அறிக்கை
பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அவர்களை ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருந்த, அருகில் உள்ள சிறிய நாடான லெபனான் மீது பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. நேற்றைய தினம்(28.09.24) இஸ்ரேல் நடத்திய கடும் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்டு ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் நடைபெற்றுவரும் இந்த தாக்குதல் போர் அல்ல; மாறாக பயங்கரவாத நடவடிக்கையே.
படிக்க : காசா: தஞ்சமடைந்த பள்ளியில் தாக்குதல் நடத்திய கொலைகார இஸ்ரேல்! | படக்கட்டுரை
நேற்றைய தினம்(28.09.24) ஐநா மன்றத்தில் பேசிய இஸ்ரேலின் பாசிச பிரதமர் நெதன்யாகு, ஈரானின் எந்த ஒரு பகுதியையும் எங்களால் அழிக்க முடியும் என்று கொக்கரித்துள்ளார் .இதற்கு ஐநா சபை எந்தவித கண்டனமும் தெரிவிக்கவில்லை. மாறாக இருவரும் போரை நிறுத்துங்கள் என்று சப்பை கட்டு கட்டி உள்ளது.
உலக நாடுகளின் உதவியோடு, ஆயுதங்களோடு தன்னை பாதுகாத்துக் கொண்டு லெபனான் மீது திட்டமிட்டு நடத்தப்படும் இந்த பயங்கரவாத நடவடிக்கை என்பது பாசிச இஸ்ரேலின் விரிவாக்கத்திற்கானதாகவே அமைகிறது .இஸ்லாமிய நாடுகளை கூறு போட்டு, பிளவுபடுத்தும் ஏகாதிபத்திய அமெரிக்காவுக்கு எதிராக அந்தந்த நாடுகளில் மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்து வருகின்றன. இதன் விளைவாக பல இஸ்லாமிய நாடுகளும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான கருத்தை தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நெதன்யாகுவின் பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேலில் மக்கள் மாபெரும் போராட்டங்களை கட்டி எழுப்புகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்டு ஏகாதிபத்திய நாடுகளின் பங்களிப்போடு லெபனான் என்ற சின்னஞ்சிறு நாட்டை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக ஈரானையும் ஒழித்துக் கட்டி விடுவோம் என்று சவால் விடுகிறார்கள்.
உக்ரைன் மீது படையெடுத்த ரஷ்யாவுக்கு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள தடை, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவும் தடை. ரஷ்யாவின் அதிபர் புடின் மீது கைது பிடியாணை பிறப்பித்துள்ளது சர்வதேச நீதிமன்றம். ஆனால், இஸ்ரேலின் அதிபர் ஈரானை ஒழித்துக் கட்டி விடுவோம் என்று ஐநா சபையில் பேசுகிறார்.
படிக்க : லெபனான்: 500 பேரை படுகொலை செய்த போர்வெறி பிடித்த இஸ்ரேல்!
பாலஸ்தீன மக்கள் மீது இன அழிப்பை நடத்தி அருகில் உள்ள நாடுகளையும் ஒழித்துக்கட்ட கடும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இஸ்ரேலை உலக நாடுகள், ஐநா மன்றம் அங்கீகரித்து இருப்பது என்பதே இஸ்ரேல் தற்பொழுது மேற்கொண்டு வரும் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவானதுதான்.
தங்கள் உயிர் இழந்தாலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று போராடும் லெபனான், ஏமன் உள்ளிட்ட நாட்டு மக்களின் போராட்டங்களை ஆதரிப்போம்!
பாசிச இஸ்ரேல் மற்றும் பாசிச அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை உலகம் முழுவதும் கட்டி எழுப்புவோம்!
தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
தொடர்புக்கு: 99623 66321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram