டந்த செப்டம்பர் 27 ஆம் தேதி, சென்னை ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் செப்டம்பர் மாதத்திற்கான மாதாந்திர மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை ஆறு சதவிகிதம் உயர்த்துவது  குறித்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வரி உயர்வானது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சொத்து வரி உயர்வுடன் மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி, குப்பைகளை சாலைகளில் கொட்டுவதற்கு விதிக்கப்படும் அபராதம் உயர்வு உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானங்களுக்கு தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஆனாலும் தி.மு.க. அரசானது பெரும்பான்மை தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானங்களை நிறைவேற்றியவுடன் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் என்றும் திமிர்த்தனமாக அறிவித்தது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்களை பேசவிடாலும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. கூட்டத்தில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூட்டத்தில் தங்கள் தரப்பு வாதத்தை பேச அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சொத்துவரியை ஆறு சதவிகிதம் தி.மு.க. அரசானது உயர்த்தியுள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக சொத்துவரியை உயர்த்தியுள்ளது.


படிக்க: சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரி உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் மோடி அரசு!


சொத்துவரி உயர்வுக்கு தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் பெரியதளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கண்டனங்களை தெரிவிப்பதுடன் நிறுத்திக் கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சொத்துவரி உயர்வை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் அக்டோபர் எட்டாம் தேதி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது. மாநகராட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.சி.க. உறுப்பினர் கோபிநாத், “ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் வகையில் சொத்து வரியை  உயர்த்துவதை” வி.சி.க. எதிர்ப்பதாக   தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் “ஏற்கெனவே 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 50 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும்  சொத்துவரி உயர்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. ஏற்கெனவே தமிழ்நாட்டு மக்கள்   விலைவாசி உயர்வு, மின்சாரக்  கட்டண  உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வரி  உயர்வானது வீட்டு உரிமையாளர்களை மட்டும் பாதிக்காது  வாடகைக்கு  இருப்பவர்களையும் கடுமையாக பாதிக்கும். எனவே சொத்து வரி உயர்வை  திரும்பப்  பெறுவத்தோடு   தமிநாட்டின்  பிற  நகரங்களில் சொத்து வரியை  உயர்த்தும்  முடிவை தி.மு.க. அரசு  கைவிட  வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போதும் சரி, இதற்கு முன்னரும் சரி திமுக அரசானது சொத்துவரியை உயர்த்துவதற்கு உள்ளாட்சி அமைப்புகளில், ஒன்றிய அரசு திட்டங்களின் கீழ் உதவிகள் பெற வேண்டுமெனில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதையே காரணமாகக் கூறுகிறது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டில் சொத்துவரியை உயர்த்திய போது வெளியிட்ட அரசாணையில் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி ஆறு சதவிகிதம் உயர்த்தப்படும் என்பதையும் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் பேசிய துணை மேயர் மகேஷ் குமார், “இந்த சொத்து வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்தும், எல்லாருடைய கருத்தும். ஆனால், மத்திய அரசின் சுற்றறிக்கை, பரிந்துரையினால்தான் நிதிக்காக இந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்ப்பட்டிருக்கிறோம். இருப்பினும் இதுகுறித்து பரிசீலனை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய மோடி அரசின் பல்வேறு பாசிச சட்டத் திட்டங்களுக்கு எதிராகவும் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசானது, மாநில உரிமைகள் பறிக்கப்படும் சொத்து வரி விவகாரத்தில் போராட்டங்களைக் கட்டியமைக்காமல் ஒன்றிய அரசின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவற்றை நடைமுறைப்படுத்துகிறது. மின்சாரக் கட்டண உயர்வு விவகாரத்திலும் மேற்கண்ட வகையிலே செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு, ஒன்றிய மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் வரி உயர்வை அமல்படுத்தி வருவது மக்களை வரி போட்டு சுரண்டி அரசின் கஜானாவை நிறைத்து கொள்ள வேண்டும் என்ற தி.மு.க. அரசின் நோக்கத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க