இனவெறி இஸ்ரேலானது காசாவைத் தொடர்ந்து, லெபனானின் மருத்துவமனை கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா-வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனவெறி இஸ்ரேல் வியாழன்று (அக்டோபர் 3) லெபனனின் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா சுகாதார அமைப்புக்குச் சொந்தமான மருத்துவ மையத்தின் மீது நடத்திய தாக்குதலில் 9 மருத்துவர்கள் கொல்லப்பட்டதாகவும் 14 மருத்துவ பணியாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மர்ஜயோன் (Marjaayoun) அரசு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மோனெஷ் கலகீஸ் (Dr Mounes Kalakish) கூறுகையில், “இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) அன்று மருத்துவமனையின் நுழைவாயிலில் நின்றிருந்த இரண்டு ஆம்புலன்சுகள் மீது தாக்குதல் நடத்தி 7 துணை மருத்துவர்களைப் படுகொலை செய்ததையடுத்து மருத்துவமனையை மூட முடிவு செய்தோம். இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக தெற்கு லெபனானில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கடந்த மூன்று நாட்களாகக் காயமடைந்த மக்களால் வர முடிவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
லெபனான் எல்லையிலிருந்து 700 மீட்டர் தொலைவில் உள்ள மேயஸ் அல் ஜபல் (Mays El Jabal) அரசு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலினால் மருத்துவமனை ஊழியர்களால் காயமுற்றவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவப் பொருட்கள், டீசல், மின்சாரம், தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தண்ணீர் இல்லாமல் எப்படி மருத்துவமனையை இயங்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேல் தெற்கு லெபனான் மற்றும் பெக்கா பள்ளத்தாக்கில் செப்டம்பர் 23 ஆம் தேதியிலிருந்து தீவிர வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. தற்போது வரை 50க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களைப் படுகொலை செய்துள்ளது.
படிக்க: மக்கள் போராட்டங்கள் மூலம் இஸ்ரேலின் இனஅழிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவோம்!
இஸ்ரேலானது காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி மருத்துவ ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது.
குறிப்பாக லெபனானின் தெற்கில் உள்ள சுகாதார அமைப்பு ஐந்து வருட பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போதைய ஒரு வருட தாக்குதலினால் மேலும் நெருக்கடியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
லெபனானின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள தஹியேஹ் (Dahiyeh) மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலினால் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மிகப்பெரிய பொது மருத்துவமனையான ரஃபிக் ஹரிரி பல்கலைக்கழக மருத்துவமனையில் (Rafik Hariri University Hospital) வேலை பார்க்கும் ஊழியர்களால் தற்போது அங்கு செல்ல அச்சப்பட்டு வேறு வேறு பகுதிகளுக்கு பணிக்குச் செல்கின்றனர்.
மேலும் மருத்துவமனையின் பணி நிலைமைகள் ஆபத்தானதாக மாறக்கூடும் என்ற கவலை ஊழியர்களிடம் உள்ளது. இந்த நிலைமைகளில் அவர்கள் வேறு பகுதிகளுக்குச் செல்வது குறித்து குற்றம் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுக்கென்று சொந்த வாழ்க்கை, குடும்பம் உள்ளது. இருந்தபோதிலும் இருக்கக்கூடிய மருத்துவர்களைக் கொண்டு வழக்கம்போல் மருத்துவமனை இயங்கி வருவதாக மருத்துவமனையின் தலைமை டாக்டர் ஜிஹாத் சாதே தெரிவித்துள்ளார்.
படிக்க: அக்டோபர் 7 – காசா மீதான இனப்படுகொலை | இஸ்ரேலையும் ஏகாதிபத்தியங்களையும் முடக்குவோம்! தோழர் ரவி
மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேலானது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) இரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் ராணுவ நோக்கங்களுக்காக ஆம்புலன்சுகளில் ஆயுதங்களைக் கொண்டு செல்வதாகக் கூறி ஆம்புலன்சுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. இனிவரும் நாட்களில் சந்தேகப்படும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
லெபனானின் சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் (Firass Abiad) வியாழனன்று (அக்டோபர் 3) வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் தொடங்கியது முதல் தற்போது வரை 97 மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு நாட்களில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் லெபனானில் உள்ள நான்கு மருத்துவமனைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் லெபனான் அரசு நெருக்கடியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக இனவெறி இஸ்ரேலானது திட்டமிட்டே மருத்துவ கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா-வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரத்தவெறி பிடித்த இஸ்ரேலானது காசாவின் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்ததைப் போன்று தற்போது லெபனானின் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மருத்துவர்களையும் மக்களையும் படுகொலை செய்து வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram