ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும்
மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு | துண்டறிக்கை

சென்னை மாநிலக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4 அன்று கல்லூரி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது, சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 15-ற்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால்  கொடூரமாகத் தாக்கப்பட்டார். படுகாயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுந்தர் சிகிச்சை பலனின்றி கடந்த 9-ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் இந்த வன்முறை செயலைக் கண்டித்து அன்றைய தினமே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இத்தகைய வன்முறை செயல்களைத் தடுப்பதற்கும் மாணவர்களை ஜனநாயகப்படுத்துவதற்கும் அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், இந்நிகழ்வு குறித்து பொதுவெளியில் பேசும் சிலர் பச்சையப்பன் கல்லூரியையும் மாநிலக் கல்லூரியையும் இழுத்து மூட வேண்டும்; மாணவர்களுக்குக் கடுமையான தண்டனையை வழங்க வேண்டும், கை கால்களை அடித்து உடைக்க வேண்டும்; “ரூட்” கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும்; போலீசை வைத்து மாணவர்களைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்பது போன்ற எதார்த்தத்தை துளியும் பரிசீலிக்காத மேட்டிமைத்தனமான வாதங்களை முன்வைக்கின்றனர்.

அரசு கல்லூரிகளான நந்தனம், பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரிகள் தமிழ்நாடு முழுவதும் பின்தங்கிய கிராமங்களிலிருந்தும் உழைக்கும் வர்க்கப் பின்னணியிலிருந்தும் வரக்கூடிய பெரும்பான்மை மாணவர்கள் படிக்கக்கூடிய கல்லூரிகளாகும். மேற்கண்ட வாதங்களை முன்வைப்பவர்கள் இந்தக் கல்லூரிகளைத்தான் மூடக் கோருகிறார்கள்.

இதனால்தான், இக்கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்கள் சமூகவிரோதிகளாகவும் கிரிமினல்களாகவும் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு சித்தரிக்கப்படுகின்றனர். இவ்வாறு மாணவர்கள் சித்தரிக்கப்படுவதற்குப் பின்னால், கார்ப்பரேட் கும்பலின் நலனும், அரசுக்கு எதிராக மாணவர்கள் அணித்திரளக் கூடாது என்ற சதியும் அடங்கியுள்ளது.

ஏனெனில், இக்கல்லூரி மாணவர்கள்தான் சமூக அநீதி ஒவ்வொன்றுக்கும் எதிராக முதலில் குரல் கொடுப்பவர்களாக உள்ளனர். இந்தி எதிர்ப்பு போராட்டம்; ஈழப் படுகொலைக்கு எதிரான போராட்டம்; தலைமைச் செயலகத்திற்காக ராணிமேரிக் கல்லூரி இடிக்கப்படவிருந்ததைத் தடுத்துநிறுத்தியது;  மெட்ரோ ரயிலுக்காக பறிக்கப்படவிருந்த பச்சையப்பன் கல்லூரியின் இடத்தை போராடி மீட்டது; ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் CAA, NRC-க்கு எதிரான போராட்டம் போன்ற போராட்டங்களில் முன்களத்தில் நின்றது இக்கல்லூரி மாணவர்களே.

மேலும்,  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்களும், தற்போது இந்தியாவையே உலுக்கிய மணிப்பூர் குக்கி இன பெண்கள் மீதான பாலியல் கொடூரத்தையும் கண்டித்து தமிழ்நாட்டில் நடந்த வீரஞ்செறிந்த போராட்டங்களிலும் முன்னிலையில் நின்றவர்களும் இக்கல்லூரி மாணவர்கள்தான், குறிப்பாக ரூட் மாணவர்கள்தான்.

இவ்வாறு சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் போர்க்குணமிக்க இக்கல்லூரி மற்றும் ரூட் மாணவர்கள் ஏன்  இவ்வாறு தங்களுக்குள்ளே அடித்துக் கொள்கிறார்கள், வெட்டிக் கொள்கிறார்கள் என்பதைத்தான் நாம் முக்கியமாகப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது.

அரசும் கல்லூரி நிர்வாகங்களும் சமூக கண்ணோட்டத்துடன் கூடிய ஜனநாயகமான கலாச்சாரத்தை இக்கல்லூரி மாணவர்களிடையே வளர்த்தெடுப்பதில் தோற்றுப் போயுள்ளன என்பதே இதற்கு முக்கிய காரணமாகும்.

அரசுக் கல்லூரிகளில் 2015-ற்கு முன்பு வரை மாணவர் சங்கத் தேர்தல்கள் நடைபெற்று வந்தது. நெருக்கடிகள் இருந்தாலும் கல்லூரி வளாகத்தில் மாணவர் அமைப்புகள் இயங்குவதற்கான குறைந்தபட்ச ஜனநாயகம் அப்போது இருந்தது. மறுக்கப்படும் தங்களது உரிமைகளுக்காகவும் சமூக அநீதிகளுக்கு எதிராகவும் நடந்த தொடர் விவாதங்களும் திரளாக அணிதிரண்டு அவர்கள் கட்டியமைத்த போராட்டக்களங்களும்தான் மாணவர்களை ஜனநாயகப்படுத்தியது. சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு பொறுப்புணர்ச்சியை அவர்களிடையே வளர்த்தெடுத்தது.

ஆனால், மறுமுனையில் மாணவர்களிடையே நிலவிய இந்த பண்பாடு அவர்களது கல்வி உரிமைகளைப் பறிக்கக்கூடிய அரசுக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கும்  அச்சமூட்டியது.

இதன் காரணமாக, அரசும் கல்லூரி நிர்வாகமும் கைகோர்த்துக்கொண்டு கடந்த பத்து ஆண்டுகளில் கல்லூரி வளாகத்திலிருந்த ஜனநாயகவெளியை மெல்ல மெல்ல வெட்டிச் சுருக்கியது. இன்று அரசு கல்லூரிகளில் மாணவர் சங்கத் தேர்தல்களும் மாணவர் அமைப்புகள் இயங்குவதற்கான சுதந்திரமும் முற்றுமுழுவதுமாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் தங்களுடைய திறனை வெளிப்படுத்துவதற்கான, படிப்பு வட்டங்கள், மன்றங்கள், விளையாட்டு மற்றும் கலைத்திறன் சார்ந்த நடவடிக்கைகளில் பங்கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதற்கான கட்டமைப்புகளும் அரசு கல்லூரிகளில் பலவீனமான நிலையில் இருக்கின்றன.

அரசு கல்லூரிகளின் இந்த வரலாற்று உண்மையையும் இன்றைய எதார்த்த நிலையையும் முழுவதுமாக மூடி மறைத்துவிட்டு, எப்போதாவது எழக்கூடிய இதுபோன்ற ரூட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி, எவ்வித பொறுப்புணர்ச்சியுமின்றி அரசுக் கல்லூரி மாணவர்களை சமூகவிரோதிகளாக முத்திரை குத்துவது என்பது அப்பட்டமான ஆளும் வர்க்க அரசியலாகும். இதற்கு நம்மில் சிலரும் பலியாகியிருப்பது வேதனைக்குரியது.

அரசு கல்லூரிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்கப்பட்டு கார்ப்பரேட் ஆதிக்கம் மேலோங்கிவரும் இன்றைய சூழலில், இந்த கருத்துகள் ஆபத்தானவையும் கூட.

அதேபோல், ரூட் மோதல்களுக்கும் பிற பிரச்சினைகளுக்கும் காரணமாக உள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருள் கலாச்சாரம்  மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவருவது தனித்த நிகழ்வல்ல. இது ஆளும்  வர்க்கத்தாலும் அதிகார வர்க்கத்தாலும் மாணவர்கள் மத்தியில் திட்டமிட்டுப் புகுத்தப்படும் ஒன்றே.

மேலும், ஊடகங்கள் ஊதிப்பெருக்குவது போல் ரூட் மோதல் மட்டுமே கல்லூரி மாணவர்களுக்கான பிரச்சினை இல்லை. கல்வி கார்ப்பரேட்மயமாக்கப்படுவது,  கட்டணக் கொள்ளை,  இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாதது, மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், விடுதி பிரச்சினைகள்,  நிர்வாக ஊழல்-முறைகேடுகள் இப்படி எண்ணற்ற வகைகளில் மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இவ்வாறு பறிக்கப்படும் கல்வி உரிமைகளுக்காகவும், மற்ற சமூக அநீதிக்கு எதிராகவும் மாணவர்கள் அணிதிரளக் கூடாது என்பதற்காகவே கஞ்சா மற்றும் போதை கலாச்சாரத்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிக்கப்படுகிறது.

மறுமுனையில் போலீசோ மாணவர்களிடம் நிலவும் போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு, மாணவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையே தீவிரப்படுத்தி வருகிறது.

எனவே, ஏட்டுக்கல்வியின் மூலமும் மாணவர்களின் மீது அதிகாரம் செலுத்துவதன் மூலமும்  ரூட் மோதலுக்கு ஒரு போதும் தீர்வு காண முடியாது. குறிப்பாக, போலீசை வைத்து அவர்களை கண்காணித்து ‘நெறி’ப்படுத்துவதற்கு அரசு கல்லூரிகள் ஒன்றும் சிறைக்கூடங்களும் அல்ல மாணவர்கள் ஒன்றும் ஆட்டு மந்தைகளோ குற்றவாளிகளோ அல்ல.  அவர்கள் அரசியல் உரிமை கொண்ட நாளைய இந்தியாவின் எதிர்காலம். அதற்குரிய  மரியாதையும் உரிமைகளும் அவர்களுக்கு வழங்க வேண்டியது அரசின், கல்லூரி நிர்வாகத்தின் கடமை.

ஆகையால்,

மாணவர்களைப் பண்பாட்டு ரீதியாக ஒழுங்குப்படுத்தும்,  அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டும் கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

  • அனைத்து அரசு கல்லூரிகளிலும் மாணவர் சங்கத் தேர்தல் நடத்திடு!
  • மாணவர் அமைப்புகளைக் கல்லூரி வளாகத்திற்குள் தடையின்றி செயல்பட அனுமதித்திடு!
  • உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடு!

மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



4 மறுமொழிகள்

  1. ஜனநாயகம் அற்ற நாட்டில் தேர்தல் கல்லூரி கலவரங்களை உண்டாக்கியது தான் வரலாறு.

    சும்மா போகும் போக்கில் சொல்லிவிட்டு போகலாம்.

    நடைமுறை வேறு

    • கல்லூரிக்கு இப்படி என்றால்.. எம். எல். ஏ, எம். பி க்கு இப்படியே சொல்லுவோமா?

  2. கையில் அரிவாள் எடுத்து செல்லும் உதிரி கிரிமினல்கள் தான் அந்தக் கல்லூரிக்கு

    • கையில் அரிவாள் எடுத்து செல்லும் உதிரி கிரிமினல்கள் தான் அந்தக் கல்லூரிக்கு அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க