பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததற்கு டாடா குழுமம் உடந்தையாக இருப்பதாகக் குற்றம் சாட்டி அமெரிக்காவில் புலம்பெயர்ந்த ஆர்வலர்கள் குழு ஒன்று “டாடா பை பை” (Tata Bye Bye) என்ற பிரச்சார இயக்கத்தை அக்டோபர் 17 அன்று தொடங்கியுள்ளது.
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் இனவெறி கொள்கை (apartheid) அடிப்படையிலான ஆட்சியை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று நியூயார்க் நகரத்தைத் தளமாகக் கொண்ட “தெற்காசிய இடதுசாரிகள் (சலாம்)” [South Asian Left (Salam)] அமைப்பு கருதியுள்ளதாக “மிடில் ஈஸ்ட் ஐ” (Middle East Eye) செய்தி வெளியிட்டுள்ளது. “சலாம்” என்பது அமெரிக்காவில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் புலம்பெயர்ந்த தெற்காசியர்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
ஆயுதங்கள் தயாரிப்பது மற்றும் இஸ்ரேலிய இராணுவத்திற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் “கிளவுட் சேவை”களை வழங்குவது உட்பட இஸ்ரேலிய அரசாங்கத்துடன் டாடா பல வணிக உறவுகளைக் கொண்டுள்ளது என்று சலாம் குற்றம் சாட்டியுள்ளது.
நியூயார்க் நகர மாரத்தான் போட்டி (New York City Marathon) நடைபெறவுள்ள நிலையில் இந்த குழு “டாடா பை பை” (Tata Bye Bye) என்ற பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த மாரத்தான் போட்டிக்கு டி.சி.எஸ் முன்னணி ஸ்பான்சராக உள்ளது. மாரத்தானை ஏற்பாடு செய்யும் நியூயார்க் ரோடு ரன்னர்ஸ் (New York Road Runners – NYRR) நிறுவனம், டி.சி.எஸ் ஒரு “சியோனிச நிறுவனம்” (யூத இனவெறி நிறுவனம்) என்பதைக் கண்டுணர வேண்டும் என இக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
“இஸ்ரேல் இராணுவத்துடன் உறவுகளைப் பராமரிக்கும் டி.சி.எஸ் நிறுவனத்துடன் கைகோர்ப்பதென்பது, இனவெறி கொள்கையை நிலைநிறுத்துவதில் டாடாவின் பங்கை என்.ஒய்.ஆர்.ஆர் நியாயப்படுத்தாகும். அதனால்தான் @nycmarathon @TataCompanies உடனான உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்று சலாம் அமைப்பு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்திற்கு கிளவுட் ஸ்டோரேஜை வழங்கும் “ப்ராஜெக்ட் நிம்பஸ்“ போன்ற கொடூர குற்றங்களை மூடி மறைப்பதற்கு “வட அமெரிக்காவில் 50,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளோம்” என்ற தனது ‘கருணை’ பிம்பத்தை டாடா பயன்படுத்திக் கொள்வதாக அவ்வமைப்பினர் மேலும் கூறினர்.
படிக்க: இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுத ஏற்றுமதி செய்யும் அதானி
டாடாவின் ப்ராஜெக்ட்டு இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களை வழங்குவதாகவும் அது பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதாகவும் அவ்வமைப்பினர் கூறுகின்றனர்.
டி.சி.எஸ் மட்டுமல்ல, குறைந்தது 2008-ஆம் ஆண்டிலிருந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (IAI) நிறுவனத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது என்று சலாம் வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.
இஸ்ரேல் காசாமீது நிகழ்த்தி வரும் இனப்படுகொலைக்கு ஆயுத – தொழில்நுட்ப உதவி வழங்குவதுதான் “சேவை முகமூடி“ அணிந்து தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் டாடா குழுமத்தின் உண்மை முகம்.
பொம்மி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram