இஸ்ரேல்: பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்!

உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களே காசா மீதான போரை நிறுத்துவதற்கான வல்லமை கொண்டதாக உள்ளது. அந்தவகையில், இஸ்ரேலிய மக்களின் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களும் காசா மீதான போரை நிறுத்துவதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

இஸ்ரேல்: பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக
தொடரும் மக்கள் போராட்டம்!

பாலஸ்தீனத்தின் மீதான போரை நிறுத்திவிட்டு ஹமாஸ் சிறையில் உள்ளவர்களை மீட்பதற்கான நடடிக்கையை மேற்கொள்ளமல் இருந்தால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை (அக்டோபர் 19) அன்று இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இஸ்ரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் இஸ்ரேலின் மீதான தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்த ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை கொன்ற பிறகு காசா மீது போரை தொடர்ந்து நடத்தாமல் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி ஹமாஸ் சிறையில் உள்ள தங்களின் அன்புக்குரியவர்களை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் மீட்க வேண்டும் என்று இஸ்ரேல் அரசை வலியுறுத்தியுள்ளனர்.


படிக்க : மோடி அரசால் அச்சுறுத்தலுக்குள்ளாகும் “தி கேரவன்” | “The Caravan” under threat from Modi government


அதாவது, மக்கள் போராட்டங்கள் மூலம்தான் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு வாரம் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் 105 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், ஹமாஸ் சிறைகளில் இன்னும் 101 பணயக் கைதிகள் இருப்பதாகவும் அவர்களில் ஒரு பகுதியினர் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு இஸ்ரேலிய மக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த வெள்ளியன்று (அக்டோபர் 18) கொல்லப்பட்டதை உறுதிசெய்த பிறகு “இஸ்ரேல் போரை முடித்துக் கொண்டு காசாவிலிருந்து முழுமையாக வெளியேறி பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் வரை எங்களிடம் மீதம் உள்ள பணயக் கைதிகளை விடுவிக்கமாட்டோம்” என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால், ஹமாஸ் அமைப்பின் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக இஸ்ரேலின் கொள்கை மன்றத்தின் பாதுகாப்பு நிபுணரான ஷிரா எக்ப்ரான் “காசாவை இனி ஹமாஸ் ஆளப்போவதில்லை. அதோடு உங்களின் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பணயக் கைதிகளை எங்களிடம் திருப்பி தருபவர்களை அமைதியாக வாழ அனுமதிப்போம்” என்று பாலஸ்தீனிய மக்களை மக்களை அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார்.

பணயக் கைதிகளை விடுவிக்கக் கோரி இஸ்ரேல் மக்களும் பாலஸ்தீனத்தின் மீதான இன அழிப்பு போரை நிறுத்த வலியுறுத்தி உலக நாடுகளில் உள்ள மக்களும் பாசிச இஸ்ரேலுக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் மக்கள் காசா மீதான போரை விரும்பவில்லை என்றாலும் தன்னுடைய இனவெறி அரசியலுக்காக “இஸ்ரேல் வெற்றிபெறும் வரை தொடர்ந்து போர் நடத்தப்படும்” என்று நெதன்யாகு தெரிவித்துள்ளார்.


படிக்க : இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணை புரியும் டாடா குழுமம்


போரை நிறுத்தினால் அக்டோபர் 7 தாக்குதலுக்கான பாதுகாப்பு குறைபாடுகளுக்கு இஸ்ரேலிய நீதிமன்றத்தில் அவர் பதில் சொல்ல வேண்டும். குறிப்பாக, சரிந்துவரும் தன்னுடைய மக்கள் செல்வாக்கை மீட்டெடுப்பதற்கும், தன்னுடைய அரசிற்கு ஆதரவாக உள்ள தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகளின் ஆதரவை இழக்காமல் இருப்பதற்கும் பாலஸ்தீனத்தின் மீதான போரை தீவிரப்படுத்தி வருகிறார். இன்னொருபுறம், சரிந்துவரும் தனது ஒற்றைதுருவ உலக மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி இப்போரை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் நடக்கும் மக்கள் போராட்டங்களே காசா மீதான போரை நிறுத்துவதற்கான வல்லமை கொண்டதாக உள்ளது. அந்தவகையில், இஸ்ரேலிய மக்களின் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டங்களும் காசா மீதான போரை நிறுத்துவதற்கான போராட்டமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதுவே, அவர்களின் கோரிக்கைகளையும் வென்றெடுக்கும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க