மதுரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கும் இச்சூழலில், செல்லூர் மீனாட்சிபுரம் பகுதியில் இரண்டு நாட்களாகப் பெய்த கனமழையால் செல்லூர் கண்மாய் நிறைந்து குடியிருப்பு பகுதியில் நீர் புகுந்துள்ளது. இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடுப்பு அளவு தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு வாழ்வாதாரமும் பொருளாதாரமும் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை இன்று (27/10/24) நாங்கள் நிவாரண பொருட்கள் (பால், பிரட்) கொடுக்கும் போது காணமுடிந்தது.
வீடுகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டு அடுப்புகள், பாத்திரங்கள், அரிசி, குளிர் சாதனபெட்டி, மிக்ஸி, குளியலறை அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வெள்ளம் வடிந்தாலும் எதை வைத்துச் சமைத்துச் சாப்பிடுவது?… எங்கே குளிப்பது?… என செய்வதறியாமல் மக்கள் இருக்கின்றனர்.
ஒரு வீட்டில் சோகமும் களைப்பும் முகத்தில் அப்பியிருந்த பாட்டி ஒருவர் “இப்போது தான் வெள்ளம் வடிந்திருக்கு.. வீடு, பாத்திரம், அடுப்பு எல்லாவற்றையும் சுத்தம் செய்ய ஆரம்பித்து இன்னும் முடிந்த பாடில்லை. பசிக்குதுப்பா! நேற்று சாப்பாடு கொடுத்தார்கள் இப்போது எதுவும் கிடைக்குமா” என்றார்.
அதேபோல் சிறுகுறு சில்வர் பட்டரையிலும் வெள்ளம் புகுந்து உற்பத்தி செய்த பாத்திரங்கள் பாலீஸ் செய்யப் பயன்படும் மோட்டார் உபகரணங்கள் போன்றவை வெள்ளத்தில் மூழ்கிப் பழுதடைந்துள்ளன.
இது குறித்து அவர்களிடம் கேட்ட போது, “இந்த தீபாவளி மாதம் தான் எங்களுக்கான சீசன். பாதி பண்டங்கள் தயாராகி பாலீஸ் செய்யக்கூடிய நிலையிலும் மீதி உற்பத்தி செய்யப்பட வேண்டிய நிலையிலும் வெள்ளம் வந்து அனைத்தையும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இனி நாங்கள் என்ன செய்வோம்?” என்றனர்.
இதற்கு யார் பொறுப்பு:
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்தப் பாதிப்புக்குக் காரணமாகக் கூறுவது கால்வாய் கரை சுவர் எழுப்பாமல் இருப்பது, செல்லூர் கண்மாய் ஆகாயத்தாமரையால் நிறைந்திருப்பது, முறையாகத் தூர் வாராமல் பராமரிப்பு ஏதும் இல்லாததும் தான். இவற்றைச் செய்ய வேண்டியது யாருடைய கடமை என்ற கேள்வி எழுகிறது.
இவற்றையும் மக்களோ, தன்னார்வலர்களோ, மக்களுக்காக இயங்கும் இயக்கங்களோ செய்யுமானால் அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் எதற்கு?
இதுபோன்ற பேரிடர் அரசு அதிகாரிகள் வசிக்கும் பகுதியில் நேருமா? அப்படி நேருமாயின் அதிகார வர்க்கம் பார்த்துக் கொண்டு செய்வதறியாமல் நிற்குமா?
பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு வரி கட்டாதவர்களா? அவர்களுடைய வரிதான் தங்களுக்குச் சம்பளம் என்பதை உணராதவர்களா? இவர்களுடைய தேர்தல் வாக்குகளில் தான் ஆட்சி அமைத்திருக்கிறோம் என்பதை அறியாதவர்களா? எல்லாம் அறிந்தவர்கள் தான் அவர்கள்.
இருப்பினும், யார் நம்மைக் கேள்வி கேட்பார்கள் என்கிற மெத்தனப் போக்கே இதற்குக் காரணம்.
தமிழ்நாடு அரசே! மாவட்ட நிர்வாகமே!
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே உரிய இழப்பீட்டை வழங்கு!
- சில்வர் பட்டரை, கிராதி பட்டரை, மிட்டாய் கம்பெனி போன்ற சிறுகுறு கம்பெனிகளுக்கு நிவாரண நிதியை உடனே வழங்கு!
- கால்வாய் சுவரைப் போர்க்கால அடிப்படையில் கட்டியெழுப்பு!
- செல்லூர் கண்மாய் போன்ற அனைத்து கண்மாய்களையும் தூர்வாரு!
- பாதிக்கப்பட்ட பகுதிக்கு மருத்துவ முகாமை நடத்து!
தகவல்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram