தூய்மையற்ற, வாழத் தகுதியற்ற இடத்தில் ஆவாரம்பாளையம் பகுதி மக்கள்!

தண்ணீர் தேங்காதவாறு வடிகால் பணியை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினாலும் இது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு தூர்வாரவே கூடாது எனவும், மத்திய அரசின் இடத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர்.

கோவையில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் 14, 15 தேதிகளில் பெய்த கனமழையால் கோவையில் சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. குடிசை வீடுகள் சில இடிந்தன, சில வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. மேலும், ஒரு சில சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கி, அடுத்த நாளே மழைநீர் வடிந்துள்ளது.

அதேபோல், ஆவாரம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இரவோடு இரவாக குழந்தைகளை மீட்டு அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வேண்டிய நிலை அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டது. உள்ளூர் அளவில் கவுன்சிலரை தொடர்பு கொண்டு எந்த உதவியும் கிடைக்காததால் அன்றிரவே மக்கள் மறியல் போராட்டத்தில் இறங்கினர். அதன் பின்னரே, அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மேயர் மற்றும் அப்பகுதி கவுன்சிலர் ஆகியோர் வந்துள்ளனர். கனமழையில் முக்கிய ஆவணங்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகள் சேதமடைந்துள்ளன, சில ஆவணங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவையனைத்தையும் அதிகாரிகள் கணக்கெடுத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை கவுன்சிலரோ, அதிகாரிகளோ சென்று சந்திக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரண பொருட்களும் வழங்கவில்லை. மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து காணொளி எடுத்து வெளியிட்ட பின்னரே பலருக்கும் அம்மக்கள் மோசமான சூழலில் இருப்பது தெரியவந்துள்ளது. காணொளியைப் பார்த்துவிட்டு எஸ்.டி.பி,ஐ கட்சியைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்கள் ஏற்பாடு செய்து, மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட 30 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். மேலும், தன்னார்வ மருத்துவக் குழுவைச் சேர்ந்தவர்கள் 20 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினர். ஆனாலும், அவ்வப்போது வருகின்ற சிறு மழைக்கே அவர்களது வீடுகளில் தங்க முடியாமல் சமுதாயக் கூடத்திலோ அல்லது அண்டை வீட்டார் வீடுகளிலோ தங்கவேண்டியதாகிறது.

***

ஆவாரம்பாளையம் பகுதியில் சுமார் 500-600 குடும்பங்கள் சாக்கடையை ஒட்டி வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியிலுள்ள மக்கள் அன்றாட கூலி வேலைகளுக்கும், வீட்டு வேலைகளுக்கும், தூய்மை பணிகளுக்கும் சென்று வருகின்றனர். அவர்கள் சாக்கடையை ஒட்டி வாழ்ந்து வருவதால் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது.

சில முதியவர்களின் வீடுகளைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. மழைக் காலங்களில் அவர்களது வீட்டின் மண் தரை எப்போதும் ஈரப் பதமாகவே இருக்கிறது. அதில் தான் படுத்துறங்குகின்றனர். சிறு மழை வந்தால் கூட மேற்கூரை ஓட்டையில் வீட்டுக்குள் மழைநீர் வந்துவிடும் என்ற அவலநிலையில் தான் பல வீடுகள் உள்ளன.

ஒரு பாட்டியை சந்தித்த போது, பொதுவெளியில் கட்டில் போட்டுக்கொண்டு, சுற்றி தார்ப்பாயைக் கட்டி அதிலும் ஓட்டைகள் உள்ளவாறு அமர்ந்திருந்தார். அவரிடம் பேசிய போது, “தினமும் இரண்டு பெட்சீட் போற்றிக்கொண்டு தான் தூங்குகின்றேன். ஆனால் தூங்க முடியவில்லை. மழை வந்தால் தண்ணீர் நிற்கிறது, அடிக்கடி பாம்பு வருகிறது. மழை வந்தால் ரொம்ப கஷ்டமாக இருக்கு; எப்போது சாவேனு இருக்கிறது” என மன வேதனையுடன் அழுதுகொண்டே பேசினார்.


படிக்க: கடும் மழையால் அவதிப்படும் ஆவாரம்பாளையம் மக்கள் | களத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள்


அப்பகுதியை ஒட்டியுள்ள சாக்கடை நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் இருந்ததையடுத்து கனமழையின் போது சில வீடுகளுக்குள் சாக்கடை நீர் புகுந்தது. அதனால், அப்போதைக்கு தூர்வாரியுள்ளனர். ஆனாலும், அந்த இடத்தில் தண்ணீர் எங்கும் செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது. அதனால் கொசுக்கள் அதிகமாக உருவாவதும், பாம்பு, பூச்சிகள், அட்டைப் பூச்சிகள் வீடுகளுக்கு வருவதும் அதிகமாகியுள்ளது. மேலும், குழந்தைகள் அந்த சாக்கடைக்குள் சென்று விளையாடவும் செய்கின்றனர். அந்த சாக்கடை ஓரத்தில் உள்ள வீடுகள் மனிதன் வாழத் தகுதியற்றதாகவே உள்ளன. அம்மக்கள் அங்கு தான் மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இதில் சிலர் வேறு அரசு ஒதுக்கும் அடுக்குமாடி வீடுகளுக்குச் செல்ல முயன்றாலும், லஞ்சமாக மூன்று லட்சம் வரை கட்ட சொல்லியுள்ளனர். இந்த ஊரை யாரும் கண்டுகொள்ளாத மற்றொரு அத்திப்பட்டி என்றே அம்மக்கள் வேதனையோடு கூறுகின்றனர்.

அந்த தூர்வாரப்பட்ட மேட்டுப் பகுதிக்கும், மக்கள் வசிக்கும் வீடுகளுக்கும் இடையில் இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்தவாறு இருக்கின்றன. அது எப்போது விழும் என்ற அச்சமும் அம்மக்களிடம் நிலவுகிறது. அடுத்து ஒரு கனமழை வந்தால் கூட அருகிலுள்ள வீட்டில் தான் விழும் என்ற நிலையே உள்ளது. தூர்வாரப்பட்ட சாக்கடையும் சரியாகத் தூர்வாரப்படவில்லை. தண்ணீர் தேங்காதவாறு வடிகால் பணியை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கூறினாலும் இது இரயில்வேக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு தூர்வாரவே கூடாது எனவும், மத்திய அரசின் இடத்தில் எந்தவித பணிகளும் மேற்கொள்ள முடியாது என்றும் கூறுகின்றனர். கனமழையின் போது வெள்ளம் வீடுகளுக்குள் சென்றதால் தான் தூர்வாரப்பட்டுள்ளது. மேலும், ஏன் இங்கு வசிக்கிறீர்கள் என்று திமிராகவும் பேசியுள்ளனர். எந்தவித பாதுகாப்பும் இல்லாத இடத்தில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்பதே அம்மக்களின் அவலநிலை.

“அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் வருகின்றனர், அதற்குப் பின்னர் எந்த சலுகையோ, மழை போன்ற காலங்களில் எந்தவித உதவியோ செய்ய அவர்கள் வருவதில்லை. நாங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை எங்களுக்கு எதற்கு, திருப்பி கொடுத்து விடுகிறோம்” என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர் அப்பகுதி மக்கள். அங்குள்ள மேட்டுப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்கிற கோரிக்கையும், மின்சார வசதி வேண்டியும், இறக்கத்தில் அதாவது சாக்கடைக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாற்று இடம் வேண்டிய கோரிக்கையும் அம்மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவ்வப்போது வெற்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு நீண்டகாலமாகக் கண்டுகொள்ளாமலேயே இருந்துள்ளனர்.

திமுக தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஆட்சிக்கு வந்தவுடன் பட்டா வழங்குவதாகக் கூறியுள்ளது. கடந்த 10 வருடங்களாக இந்த கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு கொடுத்துள்ளனர். “நாங்கள் எப்படியோ கடந்து வந்துவிட்டோம், இனி எங்களது குழந்தைகளாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதற்கு இந்த கோரிக்கைகளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்கிறனர் அப்பகுதி மக்கள்.

திமுக, அதிமுக எந்த கட்சியாக இருந்தாலும் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி கொடுத்து மக்களின் ஓட்டை பெற்றுவிட்டு, ஆட்சிக்கு வந்தபின் அந்த மக்களை எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதென்பது ஒன்றும் புதிதல்ல. அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதிலிருந்து பதவிக்கு வருவதில்லை. இவர்களை மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்ய வைக்கவே மக்கள் தெருவில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது. எனவே, இப்பகுதி மக்களின் கோரிக்கையையும் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தின் மூலமாகவே நிறைவேற்ற முடியும்.

தமிழ்நாடு அரசே!, மாநகராட்சி நிர்வாகமே!

உடனடியாக சாய்வாக இருக்கும் மின் கம்பங்களைச் சரிசெய்து கொடு!

தூய்மையற்ற, வாழத் தகுதியற்ற இடத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு நிரந்தர தீர்வாக மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடு!

சமதளப் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு பட்டா மற்றும் மின் இணைப்பை வழங்கிடு!


மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்,
94889 02202.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க