கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று, ‘ஹமாஸ் மீதான எதிர் தாக்குதல்’ என்ற பெயரில் யூத இனவெறி இஸ்ரேலானது காசாவில் பாலஸ்தீன மக்கள் மீதான இன அழிப்பு போரை தொடங்கியது. இந்த இனப்படுகொலையானது 400 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நம் கண் முன்னேயே பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த 400 நாட்களில் இனவெறி இஸ்ரேலால் நடத்தப்பட்ட 3,789-க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 17,835 குழந்தைகள், 11,891 பெண்கள் உட்பட 43,552 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதிலும், காசா அரசாங்க ஊடக அலுவலகத்தின் புள்ளிவிவரப்படி, 1,054 மருத்துவ பணியாளர்கள் மற்றும் 85 சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது.
இஸ்ரேலின் இந்த இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். ஆனாலும், நிலம், கடல் மற்றும் வான்வழி என காசா முழுவதும் இனவெறி இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதல்களும் குண்டுவீச்சுகளும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை 401 நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்களின் குண்டுவீச்சு தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய மூன்று படுகொலை தாக்குதல்களில் 51 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 164 பேர் படுகாயமடைந்துள்ளனர், வடக்கு காசாவில் பல்வேறு குடியிருப்பு கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
காசாவின் ஜபாலியாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒரு வீட்டை குறிவைத்து இஸ்ரேல் தொடுத்த வான்வழி தாக்குதலில் 13 குழந்தைகள் உட்பட 33 பாலஸ்தீனியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பலர் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கி தவிக்கும் நிலையில், இஸ்ரேலின் முற்றுகை காரணமாக தாக்குதல் நடந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுக்களால் சென்றடைய முடியாத அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
மேலும், காசாவின் வடக்குப் பகுதியில் மருத்துவமனைகள், சிவில் பாதுகாப்புக் குழுக்களை குறிவைத்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் முற்றுகை தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. குறிப்பாக, கமால் அத்வான் மருத்துவமனையை இஸ்ரேலிய போர் விமானங்கள் சரமாரியான வான்வழித் தாக்குதல்களால் சுற்றி வளைத்துள்ளன. இது பொதுமக்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
படிக்க: பாலஸ்தீன பள்ளிகளைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச இஸ்ரேல்!
மேலும், ஜபாலியாவில் உள்ள அல்-அலாமி மற்றும் அபு கமர் பகுதிகளில் குடியிருப்பு கட்டிடங்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இடிக்கப்பட்டன. அப்பகுதியில் மருத்துவ மற்றும் அவசரகால சேவைகளுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளதால் இத்தாக்குதல் மேலும் கொடூரமானதாக மாறியுள்ளது. காசாவின் குடிமைத் தற்காப்புப் பிரிவின் செய்தித்தொடர்பாளர் மஹ்மூத் பாசல், இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல்கள் தங்களது கடமைகளைச் செய்வதில் தடையை ஏற்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
காசாவின் பிற பகுதிகளிலும் அடுத்தடுத்து பல தாக்குதல்கள் நடந்துள்ளன. சப்ரா சுற்றுப்புறத்தில் ஒரு வீட்டின் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். டெல் அல்-ஹவா பகுதியை குறிவைத்த அதிகாலை தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளனர். அல்-ஜாய்டூனின் புறநகர்ப் பகுதிகள் போன்ற தெற்குப் பகுதிகள் பீரங்கித் தாக்குதகளுக்கு உள்ளாகின.
மத்திய காசாவில், அல்-நுசைராத் அகதிகள் முகாமின் மேற்குப் பகுதியில் இஸ்ரேலிய கடற்படை தாக்குதல் நடத்தியது பேரழிவை ஏற்படுத்தியது. சனிக்கிழமை மட்டும் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், வடக்கில் 24 பேர் உயிரிழந்ததாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜபாலியாவை சுற்றிலும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அக்டோபர் தொடக்கத்தில் இருந்து, இஸ்ரேல் வடக்கு காசாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலின் விளைவாக மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் மத்திய காசாவிற்கு தப்பிச்செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பலமுனை தாக்குதல்களால், காசாவில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்வதேச நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இச்சமயத்தில் காசாவிற்கான மனிதாபிமான உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போதைய இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் காசாவில் உடனடி பஞ்சத்தை உருவாக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இன்னொருபுறத்தில், காசா மக்கள் மீதான இஸ்ரேலின் இன அழிப்பு போருக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா பக்கபலமாக நிற்கிறது. தற்போதைய அமெரிக்க அதிபர் தேர்தலில் பாசிஸ்ட் டிரம்ப் வெற்றிபெற்றிருப்பது, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் பாலஸ்தீன மக்கள் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில் பாலஸ்தீன மக்களுக்கும் பாலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையாக இருப்பது இஸ்ரேலின் இனவெறிக்கு எதிரான மக்கள் போராட்டம் மட்டுமே. ஒவ்வொரு நாட்டிலும் இஸ்ரேலின் இன- அழிப்பு போருக்கு எதிராகவும் பாலஸ்தீன விடுதலைக்காகவும் அந்நாட்டு உழைக்கும் மக்களும் தெருக்களில் இறங்க வேண்டும். இப்போராட்டங்கள் இஸ்ரேலை நிர்பந்திக்க வைக்கும் வகையில் அந்தந்த நாட்டு ஆளும் வர்க்கங்களை நிர்பந்திப்பதாக அமைய வேண்டும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram