திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வேலம்பட்டி சுங்கச்சாவடியைத் திறக்க மாவட்ட நிர்வாகம் முயன்றதைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் நேற்றிரவு (நவம்பர் 12) சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தெற்கு வட்டம் தாராபுரம் சாலையில் வேலம்பட்டி சுங்கச்சாவடி அமைந்துள்ளது. அதாவது அவினாசி முதல் அவினாசி பாளையம் வரை 32 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுங்கச்சாவடி கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடி நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும் சுங்கச்சாவடியை இடிக்க வேண்டுமென்றும் அப்பகுதி மக்கள் ஆறு ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, மக்களின் எதிர்ப்பிற்கு அஞ்சி சுங்கச்சாவடி திறக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சுங்கச்சாவடி திறக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் உடனடியாக சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படாது எனவும் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் எனவும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள இந்த சுங்கச்சாவடியை இடிக்க வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சுங்கச்சாவடியைத் திறக்கவுள்ளதாகவும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது. ஏற்கெனவே பணியிலிருந்த வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சுங்கச்சாவடியை அகற்ற பிறபிக்கப்பட்ட உத்தரவுகளை மதிக்காமல், சுங்கச்சாவடி திறப்பதற்கான வேலை பணிகள் நடந்துவருவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, சுங்கச்சாவடியைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பொது நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர், விவசாயிகள், லாரி உரிமையாளர்கள், பொதுமக்கள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்க: காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி
இதற்கிடையே சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினருடன் கோட்டாட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. வேலம்பட்டியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டடத்தை இடிக்க வேண்டும்; பால் வண்டி, காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஆறு கிராம மக்களுக்கும் திருப்பூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; அனைத்து பேருந்து நிலையங்களிலும் நெல்லக்குடம் அமைக்க வேண்டும்; கழிப்பிட வசதிகளுடன் கூடிய லாரி நிறுத்தம் அமைக்க வேண்டும்; மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்; முறையான சாலைகள் அமைக்கப்பட வேண்டும்; 32 கி.மீ. தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலைக்கிடையே 20-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளதாலும் பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் பகுதி என்பதாலும் சுங்கச்சாவடியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஆனால், இப்பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித பதிலும் அளிக்காததாலும் உடன்பாடு எட்டப்படாததாலும் மக்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசு போராட்டம் நடக்கும் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை இடித்து அகற்றுவோம் என மாவட்ட நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்த மக்கள் அங்கேயே உணவு சமைத்துச் சாப்பிட்டுப் பல மணி நேரமாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலம்பட்டி சுங்கச்சாவடி மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் சட்டவிதிமுறைகளை மீறி சுங்கச்சாவடிகள் கட்டப்படுவதும் அதில் விதிகளை மீறி மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. அடுத்தடுத்து சுங்கச்சாவடிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களும் அப்போராட்டத்தில் மக்கள் முன்வைக்கும் விசயங்களும் எந்தவொரு சுங்கச்சாவடியும் விதிமுறைகளின்படி இயங்குவதில்லை என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. குறிப்பாக, இம்மாத தொடக்கத்தில், தமிழ்நாட்டில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் 60 கி.மீ. வரம்பை மீறி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து சுங்கச்சாவடிகளையும் களைத்துவிட்டு புதிய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் தி.மு.க. எம்.பி. வில்சன் நாடாளுமன்ற மக்களவையில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, சுங்கச்சாவடி கொள்ளையானது இந்தியா முழுவதுமுள்ள உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக உள்ளது. இதில் கட்டற்ற கார்ப்பரேட்நல கொள்ளை அடங்கியுள்ளது. ஆக, தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டங்கள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். இப்போராட்டங்கள் சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram