காலாவதியான-சட்டவிரோத சுங்கச் சாவடிகளை உடனே மூடு! | மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி

காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

06.09.2024

காலாவதியான சட்டவிரோத – சுங்கச் சாவடிகளை உடனே மூடு!
அதன் உரிமையாளர்களைக் கைது செய்!

பத்திரிகைச் செய்தி

மிழ்நாட்டில் ஏற்கனவே 67 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில் கூடுதலாக மூன்று சுங்கச்சாவடிகளைத் திறக்க உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்து இருப்பதை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் அதிகப்படியான அளவில் அதாவது 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. நேற்றைய(05.09.2024) அறிவிப்பின்படி, இனி தமிழ்நாட்டில் 70 சுங்கச்சாவடிகள் செயல்படும்.

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதி ஆகிவிட்டதாகவும் பரனூர் உள்ளிட்ட ஐந்து சுங்கச்சாவடிகள் உடனே அகற்றப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

படிக்க : தோழர் மாவோ நினைவை நெஞ்சிலேந்துவோம்!

தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் காலாவதியாகி விட்டதாக மாநில அமைச்சர் அறிவிக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடி உரிமையாளர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

சட்ட விரோதமாகச் செயல்பட்ட 30-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடி உரிமையாளர்களுக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் அத்தனை பேரும் கைது செய்யப்பட வேண்டும் .

நகராட்சி மற்றும் மாநகராட்சி எல்லைக்கு 10 கிலோ மீட்டர் அப்பால் சுங்கச்சாவடி, நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத் தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள்.

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி, திருமங்கலம் நகராட்சி எல்லையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

அப்பகுதி மக்கள் போராடும்போது மட்டும் உள்ளூர் மக்களுக்கு விலக்கு அளிப்பது, அடுத்த சில நாட்களில் அதை நீக்கி மீண்டும் உள்ளூர்ப் பகுதி மக்களிடம் கட்டணம் வசூல் செய்வது என்ற கொள்ளைக்கார வேலையைச் செய்து வருகிறது கிரிமினல் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகம்.

சுங்கச் சாவடிகள் என்பவை தேசிய நெடுஞ்சாலைகளைத் தனியார் உதவியுடன் அமைப்பதும் உரியக் காலத்தில் செய்த செலவினை சுங்கக் கட்டணத்தை ஈடு கட்டிவிட்டு, மீண்டும் அரசிடம் அளிப்பதுமே ஆகும்.

படிக்க : பரந்தூர் விமான நிலையம்: கார்ப்பரேட் சேவைக்காக சொந்த மாநில மக்களை அகதிகளாக்கும் திமுக அரசு!

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எதுவும் மேற்கண்ட விதிமுறையைப் பின்பற்றுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் எப்போது நிறுவப்பட்டன அவை செய்த செலவினத்தில் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளன போன்ற தகவல்கள் எதுவும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்காமல் ஒன்றிய அரசும் சுங்கச்சாவடி நிர்வாகமும் சேர்ந்துகொண்டு கூட்டுக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.

நான்குவழிச் சாலைகளை எட்டு வழிச்சாலையாக மாற்றி முடிக்கும் வரை பழைய கட்டணத்தையே பெற வேண்டும் என்ற விதியையும் தகர்த்து எட்டு வழிச் சாலைக்கான சுங்க கட்டணத்தைச் சட்டவிரோதமாகப் பெற்று வருகின்றன சுங்கச்சாவடிகள்.

பரனூர் சுங்கச்சாவடி ஆனது காலாவதியான பின்னரும் கூட சட்டவிரோதமாகக் கூடுதலாக ரூ.28 கோடி வசூல் செய்திருப்பதாக ஒன்றிய அரசின் தலைமை கணக்காயர் அறிக்கையை வெளியிட்டு ஓராண்டு ஆன பின்னரும் கூட அந்த சுங்கச்சாவடி அகற்றப்படவும் இல்லை. சட்டவிரோதமாகச் செயல்பட்ட அந்த சுங்கச்சாவடியின் உரிமையாளரும் அது தொடர்பான அதிகாரிகளும் கைது செய்யப்படவும் இல்லை.

இப்படிப்பட்ட அநியாயமான- சட்டவிரோதமான- காலாவதியான சுங்கச்சாவடிகளுக்கு எதிராக மக்கள் போராடும் பொழுது, அவர்களை ஒடுக்குவதற்குத்தான் தமிழ்நாடு அரசின் போலீஸ் வேலை செய்கிறது.

மேலும், தனியார் பாதுகாவலர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் ரவுடிகளை வைத்துக்கொண்டு மக்களை மிரட்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன சுங்கச்சாவடிகள். இந்த நிலையில்தான் செப்டம்பர் 2, 2024-ஆம் தேதி முதல் 36 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் கூடுதல் கட்டண உயர்வை ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

படிக்க : மணிப்பூரில் தொடரும் வன்முறை!

காலாவதியான மற்றும் சட்டவிரோதமாகச் செயல்படும் பரனூர், கப்பலூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை உடனடியாக ஒன்றிய அரசு அகற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், தமிழ்நாட்டில் புதியதாகச் சுங்கச்சாவடிகளையும் அமைக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான வெள்ளை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

காலாவதியான மற்றும் சட்டவிரோத சுங்கச்சாவடிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை போலீசுத்துறை மூலம் தமிழ்நாடு அரசு ஒடுக்கக்கூடாது என்றும் இப்படிப்பட்ட சுங்கச்சாவடிகளின் உரிமையாளர்கள் மீதும் அதற்கு உதவி செய்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு:-9962366321
மெயில்:-ppchennaimu@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க